உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில், 'சூப்பர் டெக்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், 'அபெக்ஸ்' என்ற பெயரில், உரிய கட்டுமான விதிகளை பின்பற்றாமல், 334 அடி உயரத்தில், 32 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டடத்தையும், 318 அடி உயரத்தில், 29 மாடிகள் உடைய கட்டடத்தையும் கட்டிவிட்டது.
இந்த விதி மீறலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரண்டு அடுக்குமாடி கட்டடங்களையும் இடிக்கும்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தீர்ப்பளித்தது. ஆனால், இடிக்காமல் தவிர்க்க, ஒரு ஆண்டாக தலையால் தண்ணீர் குடித்து, முயன்று பார்த்தது, சூப்பர் டெக் நிறுவனம்; எதுவும் நடக்கவில்லை.
அதனால், நொய்டா இரட்டை மாடி கட்டடங்களும், 3,700 கிலோ வெடிமருந்துகள் வைத்து, மிக சரியாக ஒன்பதே வினாடிகளில் சமீபத்தில் தகர்க்கப்பட்டன.காரணம், உ.பி.,யில் நடப்பது யோகியின், பா.ஜ., ஆட்சி. போதை மருந்து வைத்திருப்பவர்களின் வீடுகளையே, புல்டோசர் வாயிலாக தகர்ப்பவர்கள், உச்ச நீதிமன்றமே தகர்க்க உத்தரவிட்டுள்ள கட்டடங் களை சும்மா விட்டு விடுவரா... தகர்த்து விட்டனர்.
அப்படியே, தமிழகம் பக்கம் வாருங்கள்.இங்கு, 'உரிய அனுமதியின்றி, கட்டுமான பணிகளை மேற்கொள்வோர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்' என்று, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர்.'உரிய' அனுமதி என்பது, சொல்லாமலேயே புரிந்திருக்கும்... அதாவது, 'கொடுக்க வேண்டியதை, எங்களுக்கு கொடுத்து விட்டு கட்டுங்கள்' என்பதாகும்.
உ.பி.,யை போல தமிழகத்திலும், சில கட்டடங்களை இடித்து தகர்க்க சொல்லி, உச்ச நீதிமன்றம் அல்ல... அதற்கும் மேலான ஒரு அமைப்பு உத்தரவிட்டாலும், அரசு பதிவேடுகளில் அந்த கட்டடத்தை தகர்த்து விட்டதாக பதிவு செய்து விட்டு, அந்த கட்டடங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி அளித்து, 'கல்லா' கட்டிக் கொண்டிருப்பர். சென்னை தியாகராய நகர் கட்டடங்கள் விஷயத்தில், அதுதானே நடந்து கொண்டிருக்கிறது. கிரிமினல் வழக்காவது... தமிழக அதிகாரிகள், ஆட்சியாளர்கள் பதிவதாவது... எல்லாம், 'கட்டிங்' சமாசாரம் தான். அதற்கு காரணம், இங்கு நடப்பது உடன் பிறப்புகளின் ஸ்டாலின் ஆட்சி அல்லவா!
No comments:
Post a Comment