Friday, September 2, 2022

விசாரணை கமிஷன்களுக்கு முடிவு கட்டுங்க!

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி கமிஷன், தன் அறிக்கையில், சசிகலா, டாக்டர் சிவகுமார், சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற, தமிழக அமைச்சரவையும் முடிவு செய்துள்ளது. இதைக் கேட்கும் போது, மக்கள் காதில் எப்படியெல்லாம், பூச்சுற்றுகின்றனர் என்பதை அறியலாம். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும், முதலில் கோரிக்கை விடுத்தவர், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.,வின் தற்போதைய ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம்.


latest tamil news


அதனால், 2017ல், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது; இந்த கமிஷன் ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடத்தி, சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தான், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அப்பல்லோ டாக்டர்கள், பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 147 பேரிடம் விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, அவருடன் இருந்த சசிகலாவையும் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மற்ற மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பி, முன்னரே அழைத்து விசாரிப்பதில் என்ன பிரச்னை இருந்தது என்று தெரியவில்லை.

ஐந்து ஆண்டுகளாக நடத்திய விசாரணைக்கு பின் சமர்ப்பித்த அறிக்கையில், 'மீண்டும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டும்' என்று கூறியிருப்பது, ஆறுமுகசாமி கமிஷன் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கி உள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்த பின், முதல்வரான பன்னீர்செல்வத்தின் பதவி, சசிகலா மற்றும் அவரது உறவினர்களால், வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது.

அதனால், ஆத்திரமடைந்த அவர், சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார்; அப்போது, தன் பதவியை பறித்த சசிகலாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க குரல் கொடுத்தார். பின்னர், அவரே கமிஷன் நடத்திய விசாரணையின் போது ஆஜராகி, 'சசிகலா மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் மீது பொதுமக்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்தை போக்கவே, விசாரணை கமிஷன் கேட்டேன்' என்று, அந்தர்பல்டி அடித்தார்.

அப்போதே, ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் என்பது, மக்களின் பல கோடி வரிப் பணத்தை வீணடிக்கும் செயல் என்பது வெட்ட வெளிச்சமானது; தற்போது, அந்த கமிஷனின் பரிந்துரை வாயிலாக, அது உறுதியாகி உள்ளது. இனியாவது, மிக மிக அத்தியாவசியமான விவகாரங்களை தவிர, மற்றவற்றுக்கு விசாரணை கமிஷன் அமைப்பதற்கு முடிவு கட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...