Thursday, September 1, 2022

டேய் இலையப் போடுடா.

 "டிபன் ரெடியாச்சா... நான் உடனே கிளம்பணம். நான் போனா தான் உலையில அரிசி போடுவன். ஓகே... சாப்பிட்டுட்டு கிளம்பறேன்...". இது கிருஷ்ணன் தன் மனைவியிடம் சொன்னது. அவன் ஒரு சின்ன கல்யாண காட்டரிங் கான்ட்ராக்டர்... இவனோட பட்ஜெட் எல்லாம் 3,4,5 லட்சத்துக்குள்ளதான். ஆனா பீல்டுல ரொம்பநல்ல பேரு. சமையல் ரொம்ப டேஸ்டாயிருக்கும். இவன்கிட்ட வேலை செய்யறவா எல்லாம் ரொம்ப எக்ஸ்பர்ட்ஸ். ஒரு கல்யாணத்துக்கு ஏத்துண்டான்னா... ஒவ்வொன்னா பாத்து பாத்து தன்னோட சொந்தவீட்டு கல்யாணம் மாதிரி செய்வான். எத்தனையோ பெரிய பணக்காரால்லாம் இவனது திறமையைக் கேட்டு தங்கள் வீட்டு திருமணங்களுக்கு சமையல் செய்ய கூப்பிட்டிருக்கா. போவான்... பேசுவான்.... நீங்க ரொம்பப் பெரிசா செய்யணம்னு எதிர்பார்ப்பேள்... அந்த அளவுக்கு எனக்கு சக்தி கிடையாது. அதுக்கு நிறையப் பேரிருக்கா... எனக்கு அதிகமா 5 லட்சத்துக்குள்ள தான் பண்ணமுடியும். ஒத்துக்கமாட்டான். அவனோட அப்பா சாதாரண சமையல்காரரா இருந்தார். அப்பல்லாம் கிராமத்துல கல்யாணங்கள்ள சமையல் மட்டும்தான் இவர் பொறுப்பு. மற்றஏற்பாடெல்லாம் தனித்தனியா பண்ணிப்பா. இப்பமாதிரி கல்யாணங்கள்ள பூவிலிருந்து பல்லக்குவரை யெல்லாம் மொத்த கான்ட்ராக்ட் கிடையாது. அவஅப்பாகிட்ட நாலுபேர் ஹெல்ப்புக்கு வருவா. மெயின் சமையல் அவர்தான் செய்வர் மற்ற அரைக்கறது பொடிக்கறது கலக்கறது அதெல்லாம்தான் மற்றவர்கள் செய்வார்கள். சமையல்ல எக்ஸ்பர்ட்னு பேர் வாங்கினவர். சகல இனிப்பு வகைகளும் தரமா செய்வார். ஸ்கூல் லீவாயிருந்தா கிருஷ்ணனும் அப்பாவுக்கு ஹெல்ப் பண்ணுவன். அன்னிக்கு கிராமத்துல ஒரு கல்யாணம். இவஅப்பாதான் சமையல். .. கிருஷ்ணனுக்கு ஸ்கூல் இருந்ததால் அப்பாகூட போகலே. எல்லா சமையலும் ரெடியாயாச்சு. முகூர்த்தம் முடியற நேரமாயாச்சு. தன்உதவியாளரிடம் இலைபோடச் சொல்லிவிட்டு அப்பளம் பொரிக்கத் துவங்கினார். அவர் அப்பளம் பொரிக்கிறதே ரொம்ப அழகாயிருக்கும். ஐந்து பத்துன்னு அப்பளத்தை எண்ணையில் போடுவார். இரண்டு குச்சியை கையிலவச்சிண்டு லாவகமா அப்பளத்தை ஒவ்வொன்னா எடுத்து மூங்கில்கூடையில் போடுவார். பத்துப் பதினைந்து நிமிடத்தில் நூறு இருநூறு ரெடியாயிடும். இலையில் உதவியாளர்கள் பதார்த்தங்களை வைக்கத் தொடங்கினர். சாதம் எடுக்கப்போன ஒருவன் 'ஐயோ.' என்று கத்திக்கொண்டே ஓடிவந்தான். கிருஷ்ணனின் அப்பா சமையல்கட்டில் எண்ணெய் கொதிக்கும் அடுப்பின் அருகில் கீழே விழுந்து கிடந்தார். செய்தி பரவியது. கல்யாணம் ஏற்பாடு செய்தவர் வந்து பார்த்தார். கிருஷ்ணனுக்குத் தகவல் பறந்து பள்ளிப்பையுடன் கல்யாணவீட்டிற்கே ஓடிவந்தான். அதற்குள் ஒருவண்டி ஏற்பாடு பண்ணி அப்பாவை டவுனிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பினர். கிருஷ்ணன் கூடப்போனான். டாக்டர் உதட்டைப் பிதுக்கி கையை விரித்தார். கிருஷ்ணனின் அப்பா ஏற்கெனவே இறந்துவிட்டாராம். தலையில் இடிவிழுந்தது போல் குடும்பத்தினர் கலங்கினர். பத்தாவது படித்துக்கொணடிருந்த கிருஷ்ணன் பேனாவிற்குப் பதில் கரண்டியைக் கையிலெடுத்தான். ஒரு பெரிய திருமண காண்ட்ராக்டரிடம் உதவிக்குச் சேர்ந்தான். ஒருசில ஆண்டுகளிலேயே அவனது பணி மிகத்திருப்திகரமாக இருக்கவே அங்கு மெயின் சமையற்காரரானான். காண்ட்ராக்டருக்கு ரொம்பப் பிடித்துப் போனது. அவனை நன்கு பயன் படுத்தி தனது நிறுவனத்திற்கு நல்ல பெயர் சம்பாதித்தார் கான்ட்ராக்டர். ஆனால் வேலைக்கேற்ற சம்பளம் கொடுக்க மாட்டார். ஒர் இளிச்சவாயன் கிடைச்சான் என்றே அவர் நினைத்துக் கொண்டிருந்தார். ஒருநாள் சாதாரணமாக தனது முதலாளியைப்பார்க்க வந்தபோது ஒருவர் தன் வீட்டு கல்யாணத்திற்கு சமையல் ஏற்பாடு செய்ய வந்திருந்தார். மிக மிகச் சாதாரண குடும்பத்தைச் சார்ந்த அவரால் முதலாளி பேசிய தொகையை ஏற்க முடியவில்லை. அவர் திரும்பிச் சென்று விட்டார். கிருஷ்ணன் அவர்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். வந்திருந்த பெரியவரை அவனுக்கு ஏற்கெனவே தெரியும். முதலாளியிடம் வந்தவேலை முடிந்தவுடன் கிருஷ்ணன் நேராக அந்தப் பெரியவர் வீட்டிற்குச் சென்றான். இதுவரையான அவன் அனுபவத்தில் ஒரு சாதாரணத் திருமணத்திற்கு சமையலுக்கு எவ்வளவாகும் என்று கணித்து வைத்திருந்தான். தனது முதலாளி பலரையும் கசக்கிப் பணம் சம்பாதிப்பதைத் தெரிந்து வைத்திருந்தான். எனவே அந்தப் பெரியவரிடம் தானே கல்யாணத்திற்கு சமையல் செய்வதாகவும் நியாயமாக எவ்வளவு செலவாகும் என் பதைக்கூறினான்.

அவருக்கும் கிருஷ்ணனைத் தெரியுமென்பதால் சரியென்று சம்மதித்தார். தன்னுடன் எப்போதும் வேலைக்குவரும் இளைஞர்கள நான்கு பேரைத் தனக்கு உதவியாகச்
சேர்த்துக்கொண்டான். கல்யாணத்திற்கு வந்தவர்கள் சமையல் ஓஹோ என்று புகழ்ந்தனர். அவனுக்கு வந்த முதல்பந்தே சிகஸரை நோக்கிச் சென்றது. வந்திருந்த பலரும் அவன் முகவரியை வாங்கிச் சென்றனர். மள மள என வாய்ப்புக்கள் வீடு தேடி வந்தன. ஆனால் பல பணக்கார வாய்ப்புக்களை ஒத்துக் கொள்ளவில்லை. நடுத்தர மற்றும் அதற்கும் கீழான குடம்பத்தினரின் அழைப்பை மட்டுமே ஏற்றுக் கொண்டு பொருட்களை வீணாக்காமல் சிக்கனமாக சமையல் செய்து கொடுத்தான். விரைவிலேயே சமையல் மட்டும் என்றிருந்தவன் மண்டபம் ஒப்பந்தம் செய்வதிலிருந்து முழுக்கல்யாண ஏற்பாடுகளையும் செய்யத்துவங்கினான். தனது வீட்டிலேயே அதற்கென ஒரு அலுவலகம் அமைத்து அதைத் தன் பழைய முதலாளி கையாலேயே திறக்கச் செய்து அவரது வெறுப்பையும் அகற்றினான். இன்று அதோ இரண்டுகையிலும் இரண்டு பெரிய பைகள் நிறையப் பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக மண்டபத்திற்குள் நுழைகிறானே அவன் தான் கிருஷ்ணன். முதலாளி என்ற அகந்தை சிறிதும் கிடையாது. தனது உதவியாளர்களிடம் எந்த பந்தாவுமில்லாமல் அரவணைத்து தம் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறான் கிருஷ்ணன். இன்று நகரத்தில் மிகக் குறைந்த செலவில் நிறைவாகத்திருமணத்தை நடத்த எல்லோரும் கிருஷ்ணனையே நாடு கின்றனர்.
" டேய் இலையப் போடுடா.... " ஆணை பறக்கிறது.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...