புட்லூர் பூங்காவனத்தம்மன், திருவள்ளூர் மாவட்டம்!
அம்மன் என்றால் அழகு....
அம்மன் என்றால் ஆக்ரோஷம்....
அம்மன் என்றால் ஆவேசம்....
நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமே அந்த மனநிலையில் நமக்குக் காட்சி தருவாள் அம்மன். மனம் அழகாகவும் அன்பாகவும் இருந்தால் அம்மனும் நமக்கு அழகாகவும் அன்பின் வடிவமாகவும் காட்சி தருவாள். நாம் ஆக்ரோஷமாகவும் ஆவேசமாகவும் இருந்தால், அம்மனும் அப்படியே நமக்குக் காட்சி தருவதுடன் நம்முடைய ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் அகற்றி, நம்மையும் அன்புமயமாகச் செய்தருள்வாள்.
பூங்காவனத்தம்மனின் கோயிலுக்குள் கால் வைக்கிறபோது இந்த அத்தனை உணர்வுகளையும் ஒருசேர உணர முடியும்.
மஞ்சளும் குங்குமமும், வேப்பிலையும் மணக்கும் சந்நிதிக்குள் நிறைமாதக் கர்ப்பிணியாகப் படுத்த நிலையில் வரவேற்கிறாள் பூங்காவனத்தம்மன். அந்தத் திருவுருவத்தை தரிசிக்கும் யாருக்கும் உச்சி முதல் பாதம் வரையிலான சிலிர்ப்பு சில நொடிகள் நீடிக்கும் நிச்சயம்.
நிறைமாதக் கரு சுமந்த வயிற்றுடன், வாய் திறந்து மல்லாந்த நிலையில் படுத்திருக்கும் அந்த அம்மனை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், குழந்தைக்காக மட்டுமின்றி, எல்லா விதமான வேண்டுதல்களுக்கும் புட்லூர் பூங்காவனத்தம்மனைத் தேடி வருகிறார்கள் மக்கள்.
இந்த புட்லூர் அம்மனிடம் வேண்டுதலை முன்வைக்க எலுமிச்சம் பழங்களுடன் செல்ல வேண்டும். ஏழை, பணக்காரர் யாரானாலும் எலுமிச்சம் பழம் மட்டுமே அனுமதி.
நம்பினோர் கெடுவதில்லை' என்கிற வார்த்தைகள் கடவுளை நம்பினோர் என்று மட்டுமே அர்த்தம் கொள்ளப்பட வேண்டியது அல்ல... கடவுள் நம்பிக்கையுடன், தன்னம்பிக்கையும் இருப்பவர்கள் என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
அந்த அடிப்படை உளவியலைப் போதிக்கிற புட்லூர் பூங்காவனத்தம்மனை எல்லோருமே ஒரு முறை தரிசிக்க வேண்டியது அவசியம்.
நன்றி:
No comments:
Post a Comment