குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்ற வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உயர்நீதிமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். நாட்டிலேயே மிகப்பெரிய உயர்நீதிமன்றக் கட்டிடம் இதுதான்.
நிகழ்ச்சியில் நாட்டின் உச்ச நீதிபதி சந்திரசூட் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு திருமதி முர்மு நிகழ்த்திய உரை அற்புதம்.
அவருடைய மனதின் ஆழத்திலிருந்து வந்துள்ளது அந்த உரை. சாதாரண மக்களின் ஆதங்கத்தை, எந்தவிதப் பகட்டும் இல்லாமல், ஆடம்பர வார்த்தைகள் இல்லாமல் ஒரு சாதாரண மனிதனின் வார்த்தையில் எடுத்துக் கூறுகிறார். நீதிமன்றங்களில் நியாயம் கேட்டுப் போராடுபவர்களுக்குத் தீர்ப்பு மட்டும் கிடைத்தால் போதாது, நியாயமும் கிடைக்க வேண்டும் என்று மிகுந்த பரிவுடன் உச்ச நீதிமன்றத்திற்கு மனதார விண்ணப்பம் வைத்தார்.
அவருடைய உரையில் குறிப்பிடத்தக்க பல விஷயங்களில் ஒரே ஒரு விஷயத்தைக் கீழே கொடுக்கிறேன்:
நீதிமன்றங்களில் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் இன்னும் முடிவுக்கு வராமல் தேங்கிக் கிடக்கின்றன. இந்த வாழ்நாளில் நியாயம் கிடைக்குமா என்று ஏங்கித் தவிக்கும் மக்கள் பலர்.
அப்படியே 10 வந்தது 20 வருடப் போராட்டத்திற்குப் பிறகு, பல வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தாலும் கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே நியாயம் கிடைத்ததா என்பதுதான் கேள்வி.
நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அனுப்பியவர்கள் தீர்ப்பு வந்தவுடன் கொண்டாடுவார்கள். ஆனால் அவர்களின் கொண்டாட்டம் ஒரு சில நாட்களுக்குத் தான்.
ஏனென்றால், மீண்டும் மேல் வழக்கு வந்துவிடும்.
பிறகென்ன? மீண்டும் அதே பழைய நிலை. இன்னும் ஒரு 10 -20 வருட காலம் நியாயத்திற்காகக் காத்திருக்க வேண்டும்.
பணம் விரயமாகும். அதைவிட, நேரம் அதிகம் விரயமாகும். ஆனால் நியாயம் மட்டும் கிடைக்காது. அனைவருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும். அதுதான் நம் பணி. ஆனால் நியாயத்திற்காக ஒருவன் எத்தனையோ ஆண்டுகள் தவம் கிடப்பது?
சரி, தீர்ப்பு வந்த பிறகு, மேல் வழக்கு இல்லை என்றாலும் கூட, அந்தத் தீர்ப்பின்படி அவர்களுக்கு நியாயம் கிடைத்து விடுகிறதா? அதுதான் இல்லை.
ஏனென்றால் அந்தத் தீர்ப்பு வெறும் காகிதத்திலேயே நின்று விடுகிறது. பெரும்பாலான தீர்ப்புகள் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.
தீர்ப்பை ஏன் நடைமுறைப் படுத்தவில்லை என்று யாராவது மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் தான். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடலாம் தான்.
ஆனால் இதனாலெல்லாம் என்ன பயன்? மீண்டும் அதே கதைதானே? இன்னும் ஒரு 10 வருட அல்லது 20 வருட காலம் நியாயத்திற்காகக் காத்திருக்க வேண்டும்
இதைத்தான் நீதிமன்றங்கள், குறிப்பாக, இன்று நம்முடன் அவையில் வீற்றிருக்கும் உச்ச நீதிபதி மனதில் நிறுத்த வேண்டும்.
சட்டங்களை நாம் இயற்றுகிறோம். தீர்ப்புகளை நடைமுறைப் படுத்தும் நெறிமுறைகளையும் நாம் இயற்ற வேண்டாமா? தீர்ப்பு வழங்கியதால் மட்டுமே ஒருவருக்கு நியாயம் கிடைத்து விட்டது என்று ஆகிவிடாதே? அவருக்கு நியாயம் கிடைத்துவிட்டது என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டுமா?
மிகவும் நெகிழ்வான உரை.
No comments:
Post a Comment