Friday, June 2, 2023

கல்லால் குழுமம் ஊழல்

 போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பெட்டிக்கோ கமர்ஷியோ நிறுவனம், கடந்த ஆண்டு கனிமவள வர்த்தக வியாபாரத்திற்காக சென்னையில் செயல்பட்டு வந்த (kallal group) கல்லால் குழுமத்தில் 114 கோடி ரூபாய் முதலீடு செய்தது. பின்னர் கல்லால் குழுமம் கனிமவள வர்த்தக பயன்பாட்டிற்கு கனரக வாகனங்கள் வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து போர்ச்சுகல் நிறுவனத்திற்கு அனுப்பி மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதனால், போர்ச்சுகல் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது மோசடி புகார் அளித்தது.

அதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 200 கோடி ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்ட கல்லால் குழுமத்தின் இயக்குநர் மற்றும் நிர்வாகிகளான சரவணன், பழனியப்பன், விஜய் ஆனந்த், அரவிந்த்ராஜ், விஜயகுமார், லட்சுமி முத்துராமன், பிரீத்தா ஆகியோர் மீது கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்து சரவணன், பழனியப்பன், விஜய் ஆனந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் 300 கோடி ரூபாய் வரை சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கல்லால் குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியது.
அப்போது, பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா குழுமத்திடம் கல்லால் நிறுவனம் பரிவர்த்தனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 16-ம் தேதி லைகா நிறுவனம் தொடர்புடைய 8-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக சொல்லப்பட்டது. இந்த விசாரணையின் போது பல முக்கிய விஷயங்கள் அமலாக்கத்துறை கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்தே, இந்த இரண்டு குழுமத்திலும் நடைபெற்ற சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் மூலம் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு பணபரிவர்த்தனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், கல்லால் குழுமத்திடம் இருந்து 8 கோடியே 50 லட்சம் ரூபாயை ஓ.பி.எஸ் மகனும் தேனி எம்.பியும் ஆன ரவீந்திரநாத் தனது சாய்ராம் நிறுவனம் மூலம் பெற்றதாகவும், அந்த தொகையை உடனடியாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறை இந்த வழக்கில் இணைத்துள்ளது.
இதேபோல் லைகா நிறுவனத்தின் ஜிகேஎம். தமிழ் குமரனுக்குச் சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள 15 கோடி ரூபாய் மதிப்புள்ள இல்லத்தையும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை இந்த இரு சொத்துகளையும் சேர்த்து மொத்தமாக 36 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது.
இது தவிர, அமைச்சர் உதயநிதி அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்து 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் சிலரிடம் நாம் விசாரிக்கையில், “114 கோடியே 34 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணையில் லைகா நிறுவனம் கல்லால் குழுமத்தில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் பாகம் 2-ல் பெரும் தொகை லைகாவிடமிருந்து, ரெட் ஜெயன்ட்-க்கு மாறி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது” என்கிறார்கள்.
இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அறங்காவலரான பாபு என்பவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் விவரங்களையும் அறக்கட்டளை வாயிலாக நாங்கள் செய்திருக்கும் நலப் பணிகளுக்கான வரவு-செலவு கணக்குகளையும் முறையாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்துவருகிறோம். அமலாக்கத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த 27-ம் தேதி அன்று வெளிவந்த ஒரு பதிவு, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்திரிக்கப்படுகிறது.
ஊடகம், சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளைப்போல் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது. மேலும், அமலாக்கத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ரூபாய் 36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்துக்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்பொழுது அமலாக்கத்துறை முடக்கிய ரூபாய் 34.7 லட்சத்துக்கான தகுந்த ஆவணங்களைக் கொடுத்து அதைச் சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை மட்டும் கருத்தில்கொண்டு களப்பணி ஆற்றுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...