Thursday, June 11, 2020

ஜோதிடம் கற்கும் முறை - -

இன்றைய காலக்கட்டத்தில் ஜோதிடம் கற்கும் ஆர்வம் மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது.

தங்கள் வாழ்க்கை தங்களையும் மீறிய ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை வாழ்க்கையனுபவங்களால் உணர்ந்த அவர்களுக்கு, வாழ்வின் புதிரான போக்கை ஓரளவு புலப்படுத்துவதற்கு உதவுகின்ற ஜோதிடக் கலையைக் கற்க ஆர்வம் பிறப்பது இயல்பானதுதான்,

பலன்களைப் பிறரிடமிருந்து அறிவதைவிடத் தாங்களே அறிய வேண்டும் என்னும் எண்ணத்தில் சிலரும், கற்று முடித்து அதை ஒரு தொழிலாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சிலரும், என்னதான் இதில் இருக்கிறது பார்ப்போம் என்ற அறிவு தேடலில் சிலரும் என்று பலரும் பலவிதமான நோக்கங்களுக்காக ஜோதிடக் கலையைக் கற்கிறார்கள்.

நோக்கம் எதுவாக இருந்தாலும், இந்தக் கலையைக் கற்றுக் கைவசப்படுத்த முயல்பவர்கள், சில முறைகளைக் கடைப்பிடிப்பது நலம். அப்படிக் கடைப்பிடித்துக் கற்கும் போதுதான் ஜோதிடக்கலையின் ஆழ அகலப் பரிமாணங்களுக்குள் சரியாகப் பயணிக்க முடியும்.

அதைக் குறித்துத்தான் இங்கே நான் எடுத்துரைக்கப் போகிறேன்.

1.எங்கே கற்பது?

ஜோதிடம் கற்க விழைவோர், முதலில் அதை யாரிடம் கற்பது, எங்கே கற்பது என்பதைத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.

ஜோதிடக் கலையில் அனுபவம் பெற்ற ஒரு பண்டிதரை அணுகி, அவருக்குச் சீடராகி, தனிப்பட்ட முறையில் அவரிடமிருந்து கற்பது முதன்மையானது. ஐம்பது அறுபது பேர் படிக்கும் ஒரு வகுப்பில் கற்பதைவிட இப்படிப் பிரத்யேகமாகப் படிக்கும்போது ஜோதிடக்கலையிலேயே முற்ற முழுக்க ஒரு மாணவன் தன்னைக் கரைத்துக் கொள்ள முடியும்.

ஆனால், இப்படித் தனிப்படக் கற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைவது கடினம். எனவே, ஜோதிடத்தைப் பாடமாக வைத்திருக்கின்ற சில கல்வி நிறுவனங்களையும், ஜோதிட வகுப்புகள் நடத்துபவர்களையும் நாடலாம். ஜோதிட அடிப்படைகளை, கணித முறைகளை இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

2.எதைக் கற்பது?

காலங்காலமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்த மரபு ரீதியான ஒரு ஜோதிட முறை ஒன்று இருக்கிறது. அதைக் கற்பதும், அதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்வதும்தான் கற்றல் என்பதன் முதன்மைப் படியாக இருக்க முடியும்.

தற்காலத்தில் சிலர், தாங்கள் புதிய ஜோதிடமுறையைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி, அதை வகுப்புகளாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவை எவ்வளவு தூரம் சரியானவை என்பதில் பல விமர்சனங்கள் இருக்கின்றன. நம் மரபு ஜோதிடமுறையை நன்கு அறியாமல், எடுத்தவுடன் இந்தப் புதிய ஜோதிடமுறைகளைக் கற்க முயல்வது சுத்த அபத்தம். வேண்டுமானால், இதைக் கற்ற பிறகு அவற்றில் என்ன இருக்கிறது என அறிய ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு படித்துப் பார்க்கலாம். அப்போதுதான் உண்மை என்ன என்பதை உணர முடியும்.

3.எப்படிக் கற்பது?

கற்பது என்று முடிவெடுத்துவிட்டால் அதில் முழுவதுமாகக் கரைந்துவிட வேண்டும்.

ஜோதிட வகுப்புகளில் சில மாதங்கள் பயின்று பட்டம் வாங்கி விடுவதாலேயே ஜோதிடக்கலை வசமாகிவிட்டது என்று அர்த்தம் அல்ல. ஓர் அறிஞன் உருவாவது என்பது, கல்லூரிப் பாடத்திட்டத்தைப் படிப்பதனால் மட்டுமா? இல்லை, அவற்றையும் தாண்டி ஏராளமாகக் கற்பதும் ஆய்வு மேற்கொள்வதும்தான் ஒருவனை அறிஞனாக்குகின்றன. அப்படித்தான் ஜோதிடத் துறையிலும்.

ஜோதிட வகுப்புகளின் பாடத் திட்டங்களையும் தாண்டி நிறைய ஜோதிட நூல்களை வாசிக்க வேண்டும். ஒரு ஜோதிட மாணவனின் வீடு ஜோதிட நூல்களால் நிரம்பி வழிய வேண்டும்.

ஜாதக அலங்காரம், ஜாதக பாரிஜாதம் போன்ற முக்கியமான ஜோதிட மூலநூல்கள் சிலவற்றையாவது முழுமையாகப் படிப்பது மிக அவசியம்.

இன்று facebook, youtube போன்றவற்றில் ஜோதிடம் சார்ந்த விஷயங்கள் குப்பை போல் குவிந்து கிடக்கின்றன. எதையாவது புதிதாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தாங்களாக இட்டுக்கட்டிப் பதிவேற்றுபவர்களும், ஒரு கருத்தை அரைகுறையாகத் தெரிந்துகொண்டு பதிவேற்றுபவர்களும்தான் சமூக ஊடகங்களில் அதிகம் இருக்கிறார்கள். அவற்றில் எது சரி, எது தவறு என்று ஒரு ஜோதிட மாணவனால் பிரித்தறிவது ஆரம்பத்தில் கடினம். ஆகவே, facebook , youtube-ல் வருவனவற்றைத் தனக்கான ஆதாரமாக ஒரு ஜோதிட மாணவன் கொள்வது சரியானதல்ல.

மாறாக, தேர்ந்த ஜோதிட அறிஞர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள நூல்களையும், பழைய மூல நூல்களையுமே முதன்மை ஆதாரமாகக் கொள்ளுதல் நலம்.

இப்படியெல்லாம் படிப்பதற்கும் மேலாக ஒன்று உண்டு. அதுதான் ஜாதக ஆய்வு செய்தல்.

உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தவர்கள், நண்பர்கள், நண்பர்களுக்கு நண்பர்கள், தெரிந்தவர்கள்... என்று அனைவரது ஜாதகங்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அவர்களின் ஜாதக கிரக அமைப்போடு அவர்களது குணங்கள், வாழ்க்கைநிலை போன்றவற்றையும் ஒப்புநோக்கி ஒப்புநோக்கி, எந்த அமைப்பால் என்ன பலன் நிகழ்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். தெரிந்தவர்களின் பெயரைக் கேட்டவுடன் அவரது முகம் நினைவுக்கு வரும் முன்பு, ஜாதக கட்டம் நினைவுக்கு வரவேண்டும். அவர்களை நேரில் பார்க்கையில் அவரவர்களது ஜாதகக் கட்டமாகவே அவர்களது முகம் ஜோதிட மாணவனின் கண்ணுக்குப் புலப்பட வேண்டும்.

இப்படிச் சில நூறு, அல்லது சில ஆயிரம் ஜாதகங்களை ஆய்வு செய்தபின், ஒரு கட்டத்தில் ஜோதிட மாணவனின் உள்ளத்தில், தான் இனிப் பிறருக்குப் பலன் சொல்லலாம் என்ற நம்பிக்கை தானாகப் பிறக்கும். அப்போது அவன் தன்னை ஒரு ஜோதிடனாக உலகுக்குப் பெருமிதமாக அறிவித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...