3 லட்சம் பேர் வாழ்வார்கள் என்று வெள்ளைக்காரன் திட்டமிட்ட சென்னையில் சுமார் 10 லட்சம் பேர் வாழும் போது பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையில் நான் கவனித்தது !
70களின் கடைசிக்கு பிறகு வீடுகளுக்கு பூமிக்கடியில் குழாய் பதித்து குழாய் வழி தண்ணீர் வர முயற்ச்சி செய்வது முற்றிலும் நின்றது. இருந்த குழாய் விநியோகமும் பராமரிப்பு இன்றி பாழானது. பழைய சென்னை யின் பகுதிகளாக ஜார்ஜ் டவுன், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி. நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர் போன்ற பகுதிகளில் இருந்த வீட்டு குழாய்களில் தண்ணீர் வராமல் காற்றுதான் வருகிறது என்கிற ஆனந்த விகடன் ஜோக் மிகப் பிரபலம்.
80 களின் நடுவில் வரை சென்னையில் பெரிதாக தண்ணீர் பஞ்சம் இருந்ததில்லை.
பொதுவாக தட்ப வெட்ப நிலை பெரிதாக பயமுறுத்த வில்லை. காலா காலத்திற்கு மழை பெய்து வந்தது.
மிச்சம் மீதி இருந்த குடி தண்ணீர் விநியோகத்தில் எப்போது வரும் என்று தெரியாததால் எல்லோரும் சம்ப் கட்டி வரும் தண்ணீரை சேமிக்க தொடங்கினார்கள். அப்போதே அரசு விழித்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் தூங்கினார்கள்.
80 களின் நடுவிலிருந்து நகரம் அசுர வளர்ச்சி காண ஆரம்பித்தது. அப்போது தான் இந்த அடுக்கு மாடி (தனியார்) கட்டட பெருக்கம் புயல் வேகத்தில் எழுந்தது. இண்டு இடுக்கெல்லாம் Flats என்கிற பெயரில் புறாகூடுகள் வந்தன. எல்லோரும் போர் போட்டு நிலத்தடி நீரை 400 அடிக்கும் கீழே கொண்டு சென்றனர். எல்லா அடுக்கு மாடி வீடுகளும் பெரிய பெரிய சம்ப் (தரைக்கு அடியில் நீர் தொட்டி) கட்டிக் கொண்டனர். தப்பி தவறி பூமிக்கடி குழாயில் தண்ணீர் விடப் பட்டால் இந்த பெரிய தொட்டிகளில் சேமித்து வைக்க தொடங்கினர். பலன் அடுத்த அடுத்த பகுதிக்கு தண்ணீர் செல்வது சிக்கலானது. எனவே அரசு தெரு குழாய்களில் தண்ணீர் விடக் கூட முயலவில்லை.
பதிலாக ஆங்காங்கே சின்டேக் பிளாஸ்டிக் பூதங்களை நிறுத்தி அதில் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து கொட்டினர். இது தற்காலிகம் இல்லை ! நிரந்தமானது. ஏழை மக்கள் குடங்களுடன் 60 களில் குடிசை பகுதிகளில் நின்று சண்டையிட்டு கொண்டது போல
நகரின் எல்லா இடத்திலும் அடித்துக் கொண்டதுதான் மிச்சம்.
70 தொடக்கம் வரை கொல்லை பக்கம் கிணற்றில் மழை பெய்தால் கைக்கெட்டும் ஆழத்தில் தண்ணீர் மந்தைவெளியிலேயே கிடைத்து வந்த சென்னையில் கிணறுகள் மூடப்பட்டன.
வெறும் 10 வருடங்களில் 90 களின் கடைசியிலேயே வெய்யில் காலத்தில் போர் போட்டாலும் தண்ணி கிடைக்காது போயிற்று. வெட்டுவாங்கனி, போரூர் என்று லாரிகளில் தண்ணீர் வந்தால்தான் இந்த அடுக்கு மாடி வீடுகள் குளிக்கவோ, கழுவவோ முடியும் என்று நிலை வந்தது.
2010 களில் குடிக்க குழாய் வழியாக தண்ணி பிடிக்கும் பழக்கம் அருகி போய் பிசிலரி கேன் 15 லி கொண்டு போடும் தொழில் சக்கை போடு போட ஆரம்பிதத்து.
குடி நீர் இந்த கூத்தென்றால் வெள்ள நீர் வடிகால் கதை இன்னும் சோகம்.
2000 க்கு முன்பு வரை சென்னையில் எந்தெந்த வருடத்தில் பெருமழை பெய்தது என்று விரல் விட்டு சொல்லி விடலாம்.
ஆனால் 2000 க்கு பிறகு புயலும் மழையும் வந்து சென்னையை வெள்ளக் காடாக்கும் இடைவெளி மிகவும் குறைந்தது.
2015 க்கு பிறகு கடந்த 6 வருடமாக இந்த வெள்ளம் வருடாந்திர நிகழ்வாகி போனது.
இனி இந்த நிலையின் தீவிரம் அதிகரிக்குமேயன்றி குறையப் போவதில்லை.
காரணம் நாம் சுமார் 50 வருடமாக தூங்கி விட்டோம். சென்னையின் அடிப்படை கட்டுமான திட்டங்களில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.
சென்னை மீட்க முடியாத குப்பை மேடாக போனது என்பதற்கு ஒரு உதாரணம்.
சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் கார்போரேஷன் அலுவலகத்திற்கு சென்று அந்த பகுதியின் குடிநீர் குழாய் பிளான், வெள்ள வடிகால் பிளான், கழிவு நீர் வடிகால் பிளான் காப்பிக்கள் இருக்கிறதா என்று பார்க்க சொல்லுங்கள். 99% நிச்சயம் இருக்காது. இருக்கும் 1% மும் 2000 பிறகானதாக இருக்கும்.
சரி.. மாநகராட்சியின் தலைமை அலுவலகம் ரிப்பன் மாளிகையில் இருக்குமா என்றால் .. .. வாய்ப்பில்ல ராஜா !!
இந்த கூத்தில் திட்டமிடும் வடிகால்கள்/வாய்க்கால்கள் வரைபடம் வேறு. கட்டியது வேறு. காட்டியது வேறு. இப்போது இருப்பது வேறு.
சாலை வசதி, குப்பைகளை கையாளுvதல், கழிவு நீர் கையாளுதல், வெள்ள வடிகால் அமைத்தல், குடி நீர் விநியோகம், மின்சார விநியோகம் என்று எந்த விதத்திலும் மாறி மாறி வந்த திராவிட அரசுகள் கவலையே கொள்வதில்லை.
எந்த பிரச்சனை வந்தாலும் band-aid ஓட்டும் விதத்தில் ஏதோ செய்து சமாளிப்பார்கள்.
இந்த லட்சணத்தில் உருவாகி பெருத்து போன இந்த நகரம் உருப்படுமா?
ஒவ்வொரு தேர்தலுக்கும் ரூ 5000/-
ஒவ்வொரு வெள்ளத்திற்கும் ஒரு பிளேட் சாம்பார் சாதம். பிரச்சனை தீர்ந்தது.
ஜெய் ஹிந்த்!
12/11/2021.
பி. கு:- நானும் வருடா வருடம் புலம்புகிறேன். இதுவும் ஒரு சடங்காகி போனது. சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரம் வரை உள்ள மின்சார ரயில் நிலையங்களை ஒட்டி ஒவ்வொரு ஊரிலும் ஏரிக்கரை ரோடு (லேக் வீயு ரோடு) உண்டு. சரி.. அங்கிருந்த ஏரி எங்கே?? தேடுங்கப்பா !
No comments:
Post a Comment