சந்திரன் பூமியில் உள்ள உயிர்களின் வாழ்வில் பெரும் பங்கு வகித்து வருகிறது, குறிப்பாக மனித இனத்துடன். பெண்ணின் கரு உற்பத்தி சுழற்சியும் சந்திரனை ஒட்டியே நடந்து வருவது அனைவரும் தெரிந்த ஒன்று. அதனால் தான் அதனை மாதவிடாய் என்று அழைப்பர்.
சந்திர கதிர்கள் பூமியில் படும் விகிதமே அதன் வளர்ச்சி, தேய்வு என்போம்.
சந்திரன் வளர்ந்து, முழு நிலவாக பூரண வளர்ச்சி பெற்று பின் தேயத் தொடங்கி இறுதியில் மறைந்து போகும். அது போலவே பெண்ணின் கருவும் ஒரே மாதத்தில் தோன்றி, நின்று இறுதியில் அழிந்து கழிவாக வெளியேறும். அப்படி அழியாமல் இடையில் ஆணின் உயிர் சேர்ந்து அது மனித குழந்தயாக பிறப்பெடுத்தாலும், அதன் உடலும் வளர்ந்து, முழு வளர்ச்சி உற்று, பின் தேய்ந்து செத்து அழியும். மனித மனமும் சந்திரனை போலவே சில நேரம் உச்சத்தில் இருக்கும். சில நேரம் தாழ்ந்து கிடக்கும். ஆக, அவள் உதிரத்தில் உதித்த ஒவ்வொருவரும் (மனித இனம் முழுதுமே) சந்திரனின் ஆளுகைக்கு உட்பட்டவர்களே.
மாது - மாதம் எல்லாம் ஒரே சொல்லோடு தொடர்புடையவை.
இது எல்லா தேசத்தவர்களுக்கும் பொருந்தும். சோதிடம் புரிந்தவர்கள் இதை நன்கு அறிவர்.
சூரியன் எல்லா நாளும் ஒரே அளவிலேயே தன் ஒளிக்கற்றைகளை பூமியில் பாய்ச்சுகிறது. ஆனால் சந்திரன் வளர்வதும் தேய்வதுமாக ஒரு சுழற்சி முறையில் தன் கதிர்களை பாய்ச்சுகிறது. வளர்பிறை 15 நாட்களும், தேய்பிறை 15 நாட்களும் கணக்கிடப்பட்டுள்ளன. இதில் பௌர்ணமி அன்று எந்த நட்சத்திர கூட்டத்தின் கதிர் வீச்சு பூமியில் விழுகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்த 30 நாட்களும், ஒரு 'மாதமாக' அழைக்கப்படுகிறது.
மனிதன் தன்னை அறிய வேண்டுமாகில், தன்னை ஆராய்தல் வேண்டும். அப்படி ஆராய்கையில் சந்திர இயக்கங்களோடு நம் உடலும் மனமும் ஒத்து இயங்குவதை அறியலாம். அதனால் தான். நம் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட விழாக்கள், விரதங்கள், வழிபாடுகள் எல்லாம் பௌர்ணமி, அமாவாசை, பைரவ அஷ்டமி, விநாயக (சங்கடஹர) சதுர்த்தி, கந்த சஷ்டி, ராம நவமி, ஏகாதசி, சிவராத்திரி, நவராத்திரி என்று குறிப்பிட்ட நாளில் சந்திரனை கணக்கிட்டே வடிவமைத்தார்கள். அந்தந்த நாட்களில் உடலை மனதை நெறிபடுத்தி, கவனத்தை உள்முகமாக்கினால் உடலையும் மனதையும் தாண்டி அறிவு உயர்நிலை அடைந்து, படைப்புகள் யாவும் ஒரே மூலத்தின் வெளிப்பாடுகளே என்கிற தெளிவு உண்டாகும்.
இதை ஆண்டுக்கணக்கில் பழகி வந்தால், இல்லறத்தில் இருந்தாலும் இறை ஞானம் பெற இயலும் என்றுதான் நம் வாழ்வியலில் வைத்துள்ளனர். அக்காலத்தில் ஆறு பெரும் மதங்களும் எண்ணற்ற சிறிய சிறிய வழிபாட்டு முறைகளும் இருந்தன. அவற்றை எல்லாம் ஆதி சங்கரர் சூரியம், சைவம், வைணவம், குமாரம், கணபதியம், சாக்தம் என்று ஆறு மதங்களாக வகைப்படுத்தினார். மதம் என்றால் ஒரே கருத்தில் உறுதியாக நிற்றல் என்று பொருள். நீங்கள் எந்த தெய்வ கருத்தியலை கொண்டிருந்தாலும் அதையே முழுமுதலாக பிடித்து, ஒழுகி நின்று கடைபிடித்தால் இறுதியில் யாவும் ஒரே பிரம்மமே என்கிற ஞானம் உண்டாகும். அதுதான் இறுதி இலக்கு.
இப்படி சந்திரனால் பிறப்பு உண்டாகிய மானிடன், தன்னை அறிவதற்கான வழிபாட்டு முறைகளை அந்த சந்திரனை (இந்துவை) ஒட்டியே அமைத்ததால், இந்த ஒட்டுமொத்த ஆறு மதங்களின் வழிபாட்டு செயல்முறைகளுக்கும் "இந்து மதம்" என்று பொதுப் பெயர் வழங்கப்பட்டது. இதை இவ்வாறு தொகுத்தவர் ஆதி சங்கரர். சண்முகம் என்றால் ஆறுமுகம் என்று பொருள். எம்மதமும் சண் மதமே... ஷட்மதமே. எந்த வழிபாட்டு மதப்பிரிவும் இந்த சண்மதத்தில் ஆறு மதங்களுக்குள் அடங்கி விடும். அதைதான் இன்று எம்மதமும் சம்மதம் என்று மாற்றி விட்டோம்.
ஒரே இறை, உருவ வழிபாடு கூடாது என்கிற கொள்கை கொண்ட இசுலாமும் கிறித்தவமும் இங்கே புகுந்த பின்பு அவர்களிடம் இருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்ள, 'இந்து மதம்' என்கிற சொல் ஆங்கில அரசியல் ரீதியில் நிலைத்து விட்டது. அதை பிடித்து கொண்டு இன்று அரசியல் பேசுவோரின் அறியாமையை என்னவென்று சொல்வது.
No comments:
Post a Comment