அரசு விளம்பரங்கள், இணையதளங்களில், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை, திருப்பாலையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர், தலைமை நீதிபதி ஆகியோரது புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசு துறைகள் என்றால், பிரதமர் அல்லது முதல்வர் புகைப்படத்துடன், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் படம் இடம் பெறலாம்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் இணையதளங்களில், முதல்வர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், அரசு வெளியிடும் போஸ்டர், பேனர்களில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் இடம் பெறுகிறது.
அரசு மற்றும் அரசு துறைகளின் இணையதளங்களில், முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை வெளியிடுவது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. அரசு விளம்பரங்களில் இடம் பெறுவதும் சட்டவிரோதமானது. எனவே, அரசு விளம்பரங்கள் மற்றும் அரசு துறைகளின் இணையதளங்களில், முன்னாள் முதல்வர் புகைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர்கள் மற்றும் சட்டப்படி அனுமதிக்கப்படாத தலைவர்களின் புகைப்படங்களையும் பயன்படுத்தக் கூடாது என, அரசு துறைகளுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க, தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. தமிழில் உள்ள ஆவணங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.
No comments:
Post a Comment