அறந்தாங்கி தாண்டி கட்டுமாவடின்னு ஒரு ஊர். அதுக்கு பக்கத்துல அடைக்கத்தேவன்னு. ஒரு கிராமம் .கிராமத்துக்கு உண்டான எல்லா அடையாளமும் இருக்குற ஊரு இது தான்.
இந்த ஊருக்கு பொண்ணு பாக்க போயிட்டு இருக்குற என் பேரு கெளதம். பொண்ணு எனக்கில்லைங்க என் அண்ணனுக்கு .நான் என் அண்ணன் தங்கச்சி அப்புறம் அம்மா அப்பா எல்லோரும் போயிட்டு தான் இருக்கோம்.
என் அம்மாவுக்கு பொண்ணோட அப்பா அண்ணன் தான். அதனால தான் போயிட்டு இருக்கோம். கட்டுமாவடில இருந்து அடைக்க தேவனுக்கு டவுன் பஸ்ல போகணும். ஆனா பஸ்ல எங்களோட மூட்டை மூட்டையா கருவாடு வருது. மொத்த குடும்பத்துக்கும் வாந்தி எடுத்து எடுத்து மயக்கமும் தான் வருது. ஒருவழியா வந்து இறங்கிட்டோம். இறங்குன உடனே உடம்புல ஒரு மாதிரி பிசுபிசுப்பு.
என் அம்மா சொன்னாங்க "தம்பி இங்க கடல் பக்கம்டா. உப்பு காத்துல உடம்பு பிசுப்பு தட்டும் ஒண்ணும் ஆகாது .வாங்க"எங்கம்மாவுக்கு இதேல்லாம் சகஜம் போல.
அம்மா தலைமையில் நாங்க எல்லோரும் பின்தொடர்ந்தோம். அப்ப தூரத்தில் ஒரு டிவிஸ் 50 மின்னல் மாதிரி வந்துட்டு இருந்துச்சு. பக்கத்துல வரும்போது தான் கவனிச்சேன்.
அது ஆம்பளை மாதிரி சட்டை போட்டுறுக்குற ஒரு பொண்ணுன்னு. எங்கம்மா அந்த பொண்ண தலையில கொட்டி "அடியேய் இவளே .எதுக்குடி இவ்ளோ வேகம். கல்யாண பொண்ணு மாதிரி இல்லாம எதுக்குடி இங்க வந்த" என்று மிரட்ட பதிலுக்கு,
அவள் "அப்பா கொள்ளைக்கு போனது இன்னும் வரல. தம்பியவும் காணோம்.
வெயிலுக்குள்ள எம்புட்டு தூரம் நடப்பீக. அது தான் வந்தேன் ." என்றதும் என் அண்ணன் என் முகத்த சோகமா பாத்தான்.
அதுக்கான காரணம் அந்த பொண்ணோட நிறம். அந்த பொண்ணு கருப்பா இருந்தா. அந்த பொண்ணு அம்மா தங்கச்சிய முதலில் கூட்டிட்டு போனா. அப்புறம் என் அப்பாவ. எங்கள கூப்புட அவுங்க அப்பா வந்தாரு .
சின்னதா ஒரு ஓட்டு வீடு. வாசல்ல ஒரு பெட்டி கடை. நல்லா வளந்து நிக்குற ஒரு வேப்பம் மரம். திண்ணையில் ஒரு பெரிய கலப்பை . போன உடனே நம்ம ஊர் சொம்பு நிறைய டீ .. இது உபசரிப்பா இல்ல உபத்திரவமான்னு தெரியல.
மறு நாள் காலையில பொண்ணு பாக்க போறோம் . அதுனால பக்கத்து வீட்டு வாசல்ல படுக்கை. வரிசையா ரோம்ப வருஷம் ஆகுது. எங்க மொத்த குடும்பமும் ஒண்ணா படுத்து. எங்கம்மா அவுங்க அண்ணன் கூட உக்காந்து பழைய கதைகள பேசிட்டு இருக்காங்க .
நிலா வெளிச்சத்தில் என் பக்கத்துல என் அண்ணன் கண் கலங்கிட்டு இருந்தான் .நான் அத கவனுச்சேன். எனக்கு அவன பத்தி தெரியும். அவன் ரோம்ப அமைதியானவன். எதையுமே அம்மா அப்பாகிட்ட தைரியமா சொல்ல மாட்டான். பயப்படுவான்.
அவனுக்கு இந்த சூழ்நிலை .இந்த பொண்ணு எதுவுமே புடிக்கலை. இதை யார்கிட்டயும் சொல்ற தைரியமும் இல்லை. அவன் ராத்திரி பூரா தூங்கல நானும் தான். காலையில குளிக்க குளத்துக்கு போனோம். ஆடு மாடு மனுஷன் எல்லோருக்கும் ஒரே குளம் தான்.
அப்புறம் மறந்துட்டேன் பொண்ணு பேரு முத்துலட்சுமி .காலையில பத்து மணிக்கு ஊர் பெரிய மனுஷங்க எல்லோரும் வந்துட்டாங்க . அப்போது வீட்டு வாசல்ல ஒரு பெண் கையில் குழந்தையுடன் பயந்த முகத்துடன் வெளியே நின்றாள். எங்க மாமா போய் விசாருச்சு முத்துலட்சுமிய அனுப்பி வச்சாரு .
வீட்டு பின்பக்கம் வரச்சொல்லி அந்த குழந்தைய தூக்கி பாத்து "ஒண்ணுமில்ல நங்கை. புள்ளைக்குகுடல் பிரண்டிருக்கு. இதுக்கு போய் பயந்துட்டு."என்றவள் வீட்டில் இருந்து கிண்ணத்தில் எண்ணெய் கொண்டு வந்து குழந்தைய தனது காலில் படுக்க வைத்து தனது நாக்கை சுழற்றி விளையாட்டு காட்டியவாறே வயிற்றை நீவி சரி செய்தாள்.
அழுத குழந்தை சில நிமிடத்தில் அவளின் கொஞ்சலுக்கு சிரித்தது. குழந்தையின் தாய்" எப்படிப்பட்ட குழந்தையும் உன் கையில சிரிச்சுரும் புள்ள" என்றபடி தனது முந்தானையில் கிடந்த பத்து ரூபாயை கொடுக்க அதை வாங்கியவள். வீட்டுகுள்ள வந்து சாமி படத்திற்கு கீழே இருந்த உண்டியலில் போட்டாள். பிறகு பெண் பார்க்கும் படலம் தொடங்க நான் அதை நிறுத்த எண்ணி எழ அதற்குள்,
முத்துலட்சுமி சபையோர் முன்னிலையில் "என்ன மன்னிச்சுருங்க எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை. எங்க அப்பா அம்மாகிட்ட சொன்னேன் கேக்கல. அதனால தான் உங்க முன்னாடி சொல்றேன் "என்றதும் அவளோட அப்பா அடிக்க கை ஓங்க
எங்கப்பா தடுத்து "ஏம்மா வேணாம்னு சொல்ற" என்றதும் " எப்படி மாமா சரியா வரும். மாமாவும் நானும் ஜோடிய நின்னா கூட எல்லோரும் சிரிப்பாங்க. உறவுக்காக கல்யாணம் பண்ணி வச்சு அவரு வாழ்கையை கெடுத்துறாதீங்க மாமா"என்று அவள் சொன்னதும் சபை அமைதியானது.
அவள் கண்கள் கலங்கி போனது . அவள் முந்திவிட்டாள். என் அண்ணன் மெளனத்தின் மொழி உணர்ந்து தன்னை தாழ்த்தி உயர்ந்து விட்டாள்.
அன்று மதியம் பஸ்க்கு காத்திருந்தோம் .நான் என் அம்மாவிடம் "அம்மா என் போன மறந்துட்டேன் " என்று அவள் வீட்டிற்கு வந்தேன். அவள் நடுவீட்டில் தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள்.
நான் அவள் அருகில் அமர்ந்து அவளுடைய கண்ணாடி வளையல் நிறைந்த கைகளை பிடித்து "இன்னும் எத்தனை வருஷம் வாழ போறேன்னு தெரியல.ஆனா வாழ போற ஒவ்வொரு நிமிஷமும் உன்கூட வாழனும்னு ஆசப்படுறேன். இந்த முகத்த தாண்டி ஒரு அழகு இருக்குடி. அது உன் மனசு . இந்த கருவாச்சி முந்தானையக்குள்ள புதைஞ்சு வாழ விரும்புறேன் .என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்றதும் அவள் அதிர்ச்சியில் உறைந்து என் கை உதறி வீட்டுக்குள் புகுந்து கதவடைத்தாள்.
கொஞ்ச நேரம் காத்திருந்தேன் வரவேயில்லை. நான் கிளம்பி வாசல் வந்ததும் ஜன்னல் வழியே சலசலவேன கண்ணாடி வளையல் குலுங்க நான் திரும்பி பார்க்க "அவள் என்னிடம் "பரிசம் போட எப்ப வருவீக?" என்றதும் நான் "மொதல்ல அண்ணன் கல்யாணம் அடுத்த நம்ம கல்யாணம்"என்றேன் .
ஆறு மாசத்துல அண்ணன் கல்யாணம். அடுத்த மாசமே எங்க கல்யாணம். கல்யாணம் முடிஞ்சதும் அண்ணன் அமெரிக்கா போயிட்டான். வரவேயில்லை.ஆறு வருஷம் கழிச்சு தங்கச்சி கல்யாணத்துக்கு வந்தான்.
அவனுக்கு ஒரே பையன். எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. இப்ப மூணாவது வயித்துல அஞ்சு மாசம். என் அண்ணன் எங்கள பாத்துட்டே இருந்தான். மொத்த கல்யாண வேலையையும் முத்துலட்சுமி கவனிச்சுட்டு இருந்தாள். எனக்கு டையத்துக்கு சாப்பாடு தந்துட்டு என் அம்மா அப்பாவ கவனிச்சுட்டு. மொத்த குடும்பத்துக்கும் ஒரு தாய் போல.
அதே சமயம் கல்யாணத்துல மூலையில உக்காந்து பேஸ்புக் பாத்துட்டு இருந்த தன் பொண்டாட்டியையும் பாத்தான். இப்ப புரிஞ்சுருக்கும் ஆண்டவன் தேவதைய கண்ணுல காட்டும் போதே புரிஞ்சுக்கனும்னு.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
No comments:
Post a Comment