Sunday, September 4, 2022

தி.மு.க., மந்திரிகள், மா.செ.,க்கள் மீது குவியுது புகார்! உட்கட்சி தேர்தலில் குளறுபடி, முறைகேடு.

 தி.மு.க., உட்கட்சி தேர்தல், மூன்று மாதங்களாக நடந்து வருகிறது. கிளைச் செயலர், வார்டு செயலர், ஒன்றிய செயலர், நகர செயலர், மாநகர் செயலர்களுக்கான தேர்தல் முடிந்துள்ளது. மாவட்ட செயலர் பதவிக்கான தேர்தலையும், அதன்பின் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடக்க உள்ளன.

தி.மு.க., மந்திரிகள், மா.செ.,க்கள், உட்கட்சி தேர்தல், குளறுபடி, முறைகேடு.


இதுவரை நடந்த உட்கட்சி தேர்தல்கள் அனைத்தும், சம்பிரதாயத்திற்காகவே நடத்தப்பட்டுள்ளன. மாவட்டச் செயலர்களும், அமைச்சர்களும் ஆதிக்கம் செலுத்துவதால், அவர்களின் ஆதரவாளர்களே நிர்வாகிகளாக வெற்றி பெற முடிந்துள்ளது.கட்சியினரிடம் செல்வாக்கும் ஆதரவும் உள்ள எவருக்கும் பதவி கிடைக்கவில்லை.

அமைச்சர்களின் ஆதரவாளர்கள் மட்டுமே, நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், தி.மு.க., தேர்தலில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்துள்ளன.


latest tamil news


இது தொடர்பாக, கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. அவை கிடப்பில் போடப்பட்டு விட்டதால், முறைகேடுகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தேர்தல் பணிக் குழுவில் நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகளும், அவரவர் ஜாதிகளுக்கே முக்கியத்துவம் தரும் வகையில் நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளனர்.

அறிவாலயத்தில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவரும், ஊழியர் ஒருவரும் இணைந்து, இந்த முறைகேட்டை செய்துள்ளனர். தகுதி இல்லாதவர்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த விவகாரம் தற்போது, சென்னையில் பூதாகாரமாக வெடித்துள்ளது. மதுரவாயல் பகுதி செயலர் பதவிக்கு கடும் போட்டி காணப்படுகிறது.

அங்குள்ள கட்சியினரிடம் செல்வாக்கு பெற்ற வரும், கருணாநிதி காலத்தில் இருந்தே இருப்பவருக்கும், சட்டசபை தேர்தலில் 'சீட்' கேட்டும் கிடைக்கவில்லை.கவுன்சிலர் சீட் கொடுத்தபோது, சீனியரான அவர், மண்டல தலைவர் பதவி கேட்டார். தர மறுத்து, அமைச்சருக்கு நெருக்கமானவருக்கு கொடுத்தனர்.இப்போது, பகுதிச் செயலர் பதவியையும், அமைச்சர் அந்த நபருக்கே தரப் போவதாக தகவல். தான் நிறுத்தும் நபரை எதிர்த்து போட்டியிடவும், மந்திரி தடை போட்டுள்ளதாக பேசப்படுகிறது.அதனால், அந்த நிர்வாகி மீதான வழக்கு விபரங்கள் பற்றிய புகார்கள், அறிவாலயத்திற்கும் முதல்வர் அலுவலகத்திற்கும் பறந்த வண்ணம் இருப்பதாக, கட்சி வட்டாரத்தில் கூறுகின்றனர்.நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மாமூல் வசூல் செய்து, கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதாக, சென்னை தி.நகர் கிழக்கு பகுதி வட்டச் செயலர்கள், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

ஆனால், இந்த இருவரும் இப்போது உட்கட்சி தேர்தலில், வட்டச் செயலர் பதவிக்கு போட்டியிட மனு செய்துள்ளனர். இதுகுறித்தும் கட்சி தலைமைக்கு புகார்கள் குவிந்து வருகின்றன.கட்சியில் இருந்தே நீக்கப்பட்டவர்களுக்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும், பகுதி செயலரும் ஆதரவு கொடி பிடிக்கின்றனர்.இவர்கள் மீது மாமூல் வசூல் புகார் இருப்பதாக, தலைமைக்கு அனுப்பிய மனுக்களில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை.

கட்சி விதிப்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள், உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், மீண்டும் அவர்களே வட்டச் செயலர்களாக நியமிக்கப்பட்டால், தொண்டர்களே ஏற்க மாட்டார்கள் என்றும், தி.மு.க.,வினர் குமுறுகின்றனர்.இந்நிலையில், மாவட்ட செயலர்கள் தேர்தலாவது, ஜனநாயக முறையில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல மாவட்டங்களில், மாவட்ட செயலர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் மோதல் நீடிக்கிறது.

அதனால், உளவு போலீசார் வாயிலாக, பதவியில் உள்ள மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை பற்றி, தி.மு.க., தலைமை விசாரித்து வருகிறது. இதில் மாவட்ட செயலரின் பலம், பலவீனம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.முதல்வர் குடும்ப உறுப்பினர் ஒருவர் அமைத்துள்ள சிறப்பு குழு வாயிலாகவும் 'சர்வே' எடுக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா பாணியில், உளவுத் துறை அறிக்கை மற்றும் சிறப்புக் குழு அறிக்கைகளை ஒப்பிட்டு பார்த்து, மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முறை மாவட்ட செயலர்கள் நியமனத்தில், இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களும், உதயநிதிக்கு நெருக்கமானவர்களும், புதுமுகங்களும் அதிகளவில் பதவி பெற வாய்ப்புள்ளது.வரும் ௧௫ல் நடக்கும் தி.மு.க., முப்பெரும் விழாவுக்கு பின், மாவட்ட செயலர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.செயல்படாத மூத்த மாவட்ட செயலர்கள் மாற்றப்பட்டு, புதுமுகங்களுக்கு பதவி அளிக்கப்படும் என்ற தகவல் பரவியுள்ளதால், ஆளுங் கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...