மத்திய அரசு நிதியில் வழங்கப்படும் விற்பனை வண்டியில், முன்னாள் முதல்வரின் படம், ஹிந்தி இடம் பெற்றிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில், சாலையோரங்களில் கடை அமைத்து பூ, காய்கறி, பழங்கள், உணவு வகை விற்பனை செய்வோர், கடையை எளிதில் நகர்த்தி சென்று விற்பனை செய்ய வசதியாக, விற்பனை வண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது.தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், இந்த வண்டி தயாரிப்புக்கான தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சிக்கு, 1.05 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக அமைச்சர் முத்துசாமி, 40 விற்பனை வண்டிகளை பயனாளிகளுக்கு மே 30ம் தேதி வழங்கினார். தற்போது மேலும், 83 விற்பனை வண்டிகள் பயனாளிகளுக்கு வழங்க, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வண்டிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் படம் இடம் பெற்றுள்ளது. மேலும் ஹிந்தியில், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மத்திய அரசு நிதியில் பயனாளிகளுக்கு வழங்கும் விற்பனை வண்டியில் முன்னாள், இன்னாள் முதல்வர்கள் படம் இடம் பெற்றுள்ளது. கருணாநிதி படம் எந்த அடிப்படையில் இடம் பெற்றுள்ளது?அரசு நிதியில் வழங்கும் வண்டியை கட்சி வண்டியாக மாற்றி விட்டனர்.பிரதமர், மத்திய அமைச்சரின் படத்தை ஏன் இடம் பெற செய்யவில்லை?அதுபோல ஹிந்தி திணிப்பை விமர்சித்து தார் பூசி அழிப்போர், இந்த வண்டியில் உள்ள ஹிந்தி வாசகங்களை கண்டு கொள்ளாதது ஏன்? இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment