பொறியாளராய்... தம்பி கட்டிக் கொண்டிருக்கும்,
ஒரு அடுக்ககத்தை பார்க்கச் சென்றிருந்தோம். அங்கே குள்ளமாய் ஒரு வயதானவர் கம்பி கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியமாய் இருந்தது.
அவரிடம் சென்று மெல்லக் கேட்டேன் "உங்க பேர் என்னங்கய்யா ? "
"நீங்க ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க? "
"என் உருவத்தைப் பார்த்து பரிதாபப்பட்டுதானே இப்படி கேக்குறீங்க ... எறும்பு கூட என்னை விட சின்னதுதான். அதோட உணவை அது தேடிக்கலையா?
அது மாதிரிதான் தம்பி நானும்"
ஏனோ தெரியவில்லை ... வழிபாட்டுத் தலங்களிலும் வீதிகளிலும் உடல் திடகாத்திரத்தோடு பிச்சை எடுக்கும் பலர் கண்முன் வந்து சென்றார்கள். இந்த தன்மான முனியாண்டி இமயமாய் உயர்ந்து தெரிகிறார்.
"உங்க வீட்ல உங்களுக்கு சோறு போட்டுப் பார்த்துக்க யாரும் இல்லையா? "
"எல்லாரும் இருக்காங்க. அவங்கவங்க பொறப்புக்கு தகுந்தாப்ல பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க.
நாம யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது. நீங்க சொல்லுங்க, உங்களால என்னை காலம் பூரா காப்பாத்த முடியுமா? "
எதிர்பாராத அந்தக் கேள்வியில் நிலைகுலைந்து பதில் சொல்லாமல் நின்றேன்.
"இப்படிக் கேட்டுட்டேனேனு வருத்தப்படாதீங்க. யாராலயும் யாரையும் கடைசி வரை தூக்கிச் சுமக்க முடியாது. அதுதான் யதார்த்தம்.
*சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் னு*
வள்ளுவர் எப்பவோ சொல்லிட்டுப் போய்ட்டாரு"
ஆச்சரியப்பட்டு... "படிச்சிருக்கீங்களா" என்றேன் சத்தமாக.
"இல்லை தம்பி. பத்மாவதிங்கிற ஒரு புண்ணியவதி தமிழ் டீச்சர்தான் என்னை அவங்க கிளாஸ்க்கு வரச் சொல்லி மத்த பிள்ளைகளோட எனக்கும் கத்துக் குடுத்தாங்க. அதுக்கப்புறம் நானா ஓரளவு தமிழ்ப் புத்தகம் படிக்கக் கத்துக்கிட்டேன்"
"இதுக்கு முன்னால நான் உங்கள பார்த்ததே இல்ல.
நானும் ரெண்டு மாதமா வந்து போறேன்.
"என்னோட தன்மான உணர்ச்சியும் தன்னம்பிக்கையும் பார்த்து ஒரு வருசத்துக்கு முன்னாலதான் முதலாளி வேலை போட்டுக் குடுத்தாரு. கம்பி கட்ற வேலை இருந்தா மட்டும் கூப்பிட்டனுப்புவாரு. ஏன்னா என்னால அது மட்டும்தான் முடியும். நான் குள்ளமா இருந்தாலும் முழு ஆள் சம்பளமும் தரச் சொல்லிருவாரு" என்றவரின் முகத்தில் நன்றியுணர்ச்சி பொங்கிக் கொண்டிருந்தது.
என் தம்பியைப் போன்ற விளம்பரம் தேடாத மனிதாபிமானிகள் இந்த உலகத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
"சரி சம்பளப் பணத்தை என்ன செய்கிறீர்கள்?"
"எனக்கும் ஒரு கட்டத்தில் முடியாமல் போகலாம். அதற்காக கொஞ்சம் சேமிக்கிறேன். எனக்கு சாப்பாடு போடும் தங்கை குடும்பத்துக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறேன்."
"இப்படிப் பிறந்து விட்டோமே என்று வருத்தப்படுவதுண்டா? "
"இளவயதில் வருத்தப்பட்டிருக்கிறேன். இப்போது பக்குவமடைந்து விட்டேன். ஒவ்வொரு பிறவிக்கும் ஒரு காரணம் இருக்கிறது. என்னைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கும் கள்ளமில்லா சிறுவர்களை சிரிக்க வைக்கவே கடவுள் என்னைப் படைத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்"
"அவர்கள் சிரிக்கும் போது உங்கள் மனம் வலிக்காதா? "
"நிச்சயமாக இல்லை. டேய் முனி என்று என்னை , அவர்கள்வயதுப் பையனாய் பாவித்து என்னோடு விளையாடுவார்கள். அவர்களுக்காகவும் கொஞ்சம் செலவு செய்கிறேன். இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்களில் எத்தனை பேருக்கு அடுத்தவர்களை சிரிக்க வைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது ...? அந்த வாய்ப்பை எனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் தம்பி."
கட்டிடத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வந்த என் தம்பி "போலாமா?" என்ற போது கண்கள் பனிக்க "வருகிறேன் ஐயா" என்று கிளம்பினேன்.
அவர் கேட்ட "உங்களில் எத்தனை பேர் அடுத்தவர்களை சிரிக்க வைத்து அழகு பார்க்கிறீர்கள் " என்ற கேள்வி என் மனதை குடைந்து கொண்டே இருந்தது. என்னை நானே கேட்டுக் கொண்டேன் ...
அவர் கேட்பதில் என்ன தவறு ?
அவரது உருவமும் பேச்சும் என் இதயம் நிறைத்திருக்க, விழிகள் கண்ணீரை இறைத்திருக்க, இயல்புக்கும் இந்தப் போலியான உலகத்துக்கும் திரும்ப வெகுநேரம் பிடித்தது !!..
No comments:
Post a Comment