தெருவில் பணக்காரன் நடக்கும் போது
ஏழையின் வீட்டில் இருந்து இறைச்சி கறி சமைக்கும் மணம் வந்தது.
தற்செயலாக ஏழை வெளியே வர பணக்காரன் அங்கே நிற்பதைப் பார்த்து வரவேற்றான்.
அந்த ஏழையின் வீடு பிடிக்காவிட்டாலும் வீட்டில் இருந்து வந்த உணவின் மணம் பணக்காரனை உள்ளே போக சொன்னது. போய் தரையில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்தான்.
“என்ன உன் வீட்டில் இறைச்சி கறி வாசமாக வீசுகிறது”
“ஆம் ஐயா கொஞ்சம் பட்டையும், ஏலமும், கிராம்பும், மிளகும், இஞ்சியும், பூண்டும் தூக்கலாக போட்டு நல்லெண்ணெய் ஊற்றி வைத்த காரணத்தால் இருக்கலாம். நீங்கள் சாப்பிட்டு விட்டு போங்கள்”
பணக்காரன் தலை அசைத்தான். இலையில் சோற்றை வைத்து கட்டியாக வைக்கப்பட்ட கறிக்குழம்பை ஊற்றினான்.
ஆசையாக பணக்காரன் ஒருவாய் கறியை எடுத்து வாயில் வைத்தான்.
“இது என்ன கறி. சுவை அற்புதம்”
“ஐயா இது முயல் கறி”
“முயல் கறியா... முயல் கறி உனக்கு ஏது. விலைக்கு வாங்கினாயா” என்று சொல்லி ஆசையாக ரசித்து சாப்பிட்டான் பணக்காரன்.
ஏப்பம் விட்டு நன்றி சொல்லி வெளியே வரும் போது தெருநாய் ஒன்று ஏழையின் வீட்டு வாசலில் படுத்திருந்தது.
“ச்சீ நாற்றம் பிடித்த நாயே நீ இங்கேயும் வந்து விட்டாயா. இந்த சனியனுக்கு நான் தினமும் எச்சில் உணவை வைப்பேன். வாசலில் காவலாய் காத்துகிடக்கும்” என்றான் பணக்காரன்.
“ஐயா. நீங்கள் சாப்பிட்ட சுவையான முயல் கறியின் முயலை இந்த நாய்தான் பிடித்து வந்தது. அருகில் இருக்கும் காட்டு விளைகளுக்குள் போய் இந்த நாய் நின்று கொண்டிருக்கும். ஒருநாள் அதிர்ஷ்டமாக கொழுத்த முயல் மாட்டியது போல. பிடித்து அது கூட சாப்பிடாமல் என் வீட்டுக்கு தூக்கி வந்து விட்டது”
இதைக் கேட்டதும் பணக்காரன் பொறாமையில் சட்டென்று திரும்பி நாயை வெறுப்பாக பார்த்தான். எதுவும் சொல்லாமல் சென்று விட்டான்.
மறுநாள் பணக்காரன் மதிய சாப்பாடு சாப்பிட்டு மீன் முள்ளை தூக்கி வெளியே போடப் போகையில் அந்த தெருநாய் வந்து உணவுக்காக நின்றது.
“நன்றி கெட்ட நாயே. தினமும் உனக்கு எச்சில் உணவு கொடுப்பது நான். ஆனால் நன்றியே இல்லாமல் நீ பிடித்த கொழுத்த முயலை அந்த பஞ்சத்து ஏழைக்கு கொடுத்து விட்டாயே” என்று திட்டினான்.
பசிதாங்காமல் நாய் அந்த மீன் முள்ளை பார்த்துக் கொண்டே இருந்தது. ”உனக்கு கிடையாது போ” என்று கல்லை எடுத்து நாய் மீது எறிந்த பணக்காரன் முள்ளை காக்கைகளுக்கு வீசினான்.
இந்த காட்சி எல்லாம் முடியவும், ஏழை அப்பக்கம் வரவும் சரியாக இருந்தது. அவன் பணக்காரனை சட்டை செய்யாத அவசரசத்தில் இருந்தான்.
“வா வா என்ன ரொம்ப பசியா இருந்தியோ. எனக்கு இன்னைக்கு அரைநாள் கூலியா. இரண்டு ஆப்பம் கிடைச்சது. தொட்டுக்க கொஞ்சம் துவையலும் இருக்கு. வீட்டுக்கு வா ஆளுக்கொரு ஆப்பம் சாப்பிடலாம்” என்று நாயை அழைத்தான்.
கதவை திறந்து விட்டான். நாய் உரிமையுடன் ஏழையின் வீட்டுக்குள் நுழைந்தது.
வெளியே இருந்து பார்க்கும் போதே பணக்காரனுக்கு அவர்கள் ஆளுக்கொரு ஆப்பத்தை பகிர்ந்து சாப்பிடுவது தெரிந்தது.
நாயும் ஏழையும் அருகருகே இருந்து சாப்பிட்டார்கள். அந்த ஏழை நாயை கொஞ்சவும் இல்லை. அன்பை பொழியவும் இல்லை. ஆனால் அவனுக்கு சரி சமாக வைத்து தன் உணவை பகிர்ந்து கொண்டான்.
பிறருக்கு கொடுப்பது என்பது தன்னுடைய உணவில் மிஞ்சியதை தூக்கி எறிவது அல்ல, தன்னுடைய உணவை “வா பகிர்ந்து சாப்பிடலாம்” என்று நட்பாக கொடுப்பதுதான் என்ற உண்மையை பணக்காரன் உணர்ந்தான்.
அந்த ஏழையின் மதிப்பான அன்பிற்கு பரிசாகத்தான் நாய் கொழுத்த முயலை வேட்டையாடி அவனுக்கு கொடுத்திருக்கிறது, தனக்கு கொடுக்கவில்லை என்ற பெரிய உண்மையையும் தெரிந்து கொண்டான்.
எழுத்தாளர் ஜேக் லண்டன் சுயசரிதையில் தன் பிச்சை எடுத்து உண்ணும் வாழ்க்கை பற்றி பேசும் போது
“என்னப்பா பணக்காரர்கள் தானம் கொடுக்கிறீர்கள். பிறருக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதை ஏழைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
”ஒரு நாய்க்கு எலும்பை வீசுவது அன்பு இல்லை. தனக்கு கிடைத்த எலும்பை நாயோடு பகிர்ந்து சாப்பிடுவதுதான் அன்பு”
என்பதை படித்த உடன் இப்படி ஒரு சிறார் கதை எழுத வேண்டும் என்று தோன்றியது.
No comments:
Post a Comment