Wednesday, November 15, 2023

உரிமைக்குரல் படப்பிடிப்பில் ஸ்ரீதரை வியக்க வைத்த எம்ஜிஆர்.

 ஸ்ரீதர் இயக்கிய படங்களுக்கும், அவரது படமாக்கும் பாணிக்கும், எம்ஜிஆர் படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காதல் கதைகளையும், உறவுச் சிக்கல்களையும் உணர்வுப்பூர்வமாக தருகிறவர் ஸ்ரீதர். அடிதடி, காதல், சென்டிமெண்ட் என எதிர் திசையில் பயணிப்பவை எம்ஜிஆர் படங்கள். ஒருகட்டத்தில் ஸ்ரீதர் எம்ஜிஆர் இயக்குகிற சந்தர்ப்பம் உருவானது.

1963 இல் ஸ்ரீதர் எம்ஜிஆர் நடிப்பில் அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தை இயக்குவதாக முடிவானது. அதேகாலகட்டத்தில் அவர் காதலிக்க நேரமில்லை படத்தை தொடங்கினார். இதனால் அன்று சிந்திய ரத்தம் நின்று போனது. காதலிக்க நேரமில்லை வெளியாகி இயக்கத்திற்கு நேரம் இல்லாத இயக்குநராக ஸ்ரீதரை மாற்றியது.
இது நடந்து சுமார் பத்து வருடங்கள் கழித்து ஸ்ரீதருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அலைகள் படத்தை தமிழில் ஏவிஎம் ராஜனையும், தெலுங்கில் சோபன்பாபுவையும் வைத்து எடுத்தவர், நான்காயிரம் அடிகள் எடுக்கப்பட்ட பின் அவர்களை மாற்றி, விஷ்ணுவர்தனை நாயகனாக்கி மறுபடியும் எடுத்தார். இதற்கு காரணம் அவரது முந்தையப் படமான அவளுக்கென்று ஓர் மனம் வெளியாகி தோல்வியடைந்திருந்தது. அலைகளை எப்படியும் வெற்றிப் படமாக்க வேண்டும் என்ற ஆர்வம் குழப்பமாகி ஏதோதோ செய்து பட்ஜெட்டை இழுத்துவிட்டிருந்தார். அலைகள் வெளியாகி தோல்வியடைந்து ஒரேயடியாக காலைவாரியது.
தொடர்புடைய செய்திகள்
இதிலிருந்து மீள சிவாஜி நடிப்பில் ஹீரோ 72 என்ற ஆக்ஷன் படத்தை தொடங்கினார். அதே கதையை இந்தியில் வேறு நடிகரை வைத்து எடுத்தார். இந்திப் படம் முடிந்து வெளியாகி ஓரளவு கடன்களை அடைத்தது. ஆனால், தமிழ்ப் படம் சிவாஜியின் பிஸியான கால்ஷீட் காரணமாக இழுத்துக் கொண்டே சென்றது. இதனால், இந்தி நடிகர் ராஜேந்திர குமாரின் அறிவுரைப்படி எம்ஜிஆரிடம் ஸ்ரீதர் கால்ஷீட் கேட்டார். அவரும் சம்மதித்தார். மூன்று மாதங்களில் படத்தை முடித்துத் தருவதாக எழுதி கையெழுத்தும் போட்டுத் தந்தார். ஆனால், கதை வேண்டுமே? அதற்கு ஸ்ரீதரிடம் ஒரு திட்டம் இருந்தது.
1971 இல் அக்னியேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளிவந்த தசரா புல்லோடு படத்தை ஸ்ரீதரும், அவரது நண்பர் சித்ராலயா கோபுவும் பார்த்திருந்தனர். அந்தப் படத்தை தமிழுக்கேற்றபடி மாற்றி சிவாஜியை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டிருந்தனர். அந்தக் கதையை எம்ஜிஆரை வைத்து எடுப்பது என ஸ்ரீதர் முடிவு செய்தார். சிவாஜிக்கு பொருத்தமான கதையில் எம்ஜிஆரா என்று கோபுவுக்கு அதிர்ச்சி. ஆனாலும் ஸ்ரீதருக்கு நம்பிக்கை இருந்தது. படப்பிடிப்பும் தொடங்கியது. படம் கிராமத்து விவசாயி பற்றியது.
எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு அடுத்துள்ள முகலிவாக்கத்தில் வயல்வெளிகள் உண்டு. அங்கு படப்பிடிப்பை நடத்தினர். எம்ஜிஆர் வருகிறார் என்றால் சுத்துப்பட்டு கிராமமக்கள் கூடிவிடுவார்கள். அவர்களை கட்டுப்படத்த தினமும் காவலர்கள் வருவார்கள். அவர்கள் இல்லாமல் ஒருநாள் படப்பிடிப்பையும் நடத்த முடியாது. இந்நிலையில், ஏதோ அரசியல் காரணங்களுக்காக போலீசார் அடுத்த மூன்று தினங்களுக்கு வர முடியாது என கூறிவிட்டனர். அவர்கள் இல்லாமல் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது, படப்பிடிப்பை தள்ளி வைக்கலாம் என்றிருக்கிறார் ஸ்ரீதர். எம்ஜிஆரோ கூட்டத்தைப் பற்றி கவலைப்படாதீங்க. நீங்க திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்துங்க என்றிருக்கிறார்.
மறுநாள் வழக்கம்போல் ஸ்பாட்டில் ரசிகர்கள் குழுமியிருக்கிறார்கள். எம்ஜிஆர் வந்த போது அவர் கூடவே மூன்று வேன்கள் நிறைய யூனிபார்ம் போட்ட தடித்தடியான ஆள்கள் டஜன் கணக்கில் வந்திருக்கிறார்கள். அவர்கள் அரணமைத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த, என்றும் போல் பிரச்சனையில்லாமல் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு எம்ஜிஆர் மீதான ஸ்ரீதரின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்தப் படம்தான் உரிமைக்குரல்.
ஸ்ரீதர் எதிர்பார்த்தபடி படம் சிறப்பாக வந்தது. பாடல்கள் பிரமாதமாக அமைந்தன. குறிப்பாக, விழியே கதையெழுது பாடலும், அதன் செட்டிங்கும் ரசிகர்களை அசரடித்தன. படம் மாபெரும் வெற்றி பெற்று ஸ்ரீதரின் கடன்களை அடைத்தது.
1974 நவம்பர் 7 வெளியான உரிமைக்குரல் நேற்று 49 வது வருடத்தை நிறைவு செய்தது.
May be an image of 3 people and text
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...