உண்மையில் வம்சி அப்டேட்டட் இயக்குனரா எனத்தெரியவில்லை.
இத்தனை பட்ஜெட்டில் படத்திற்கு பெரிய வீடு செட் போட்டிருக்கிறார்கள். என்ன தான் பணக்காரனா இருந்தாலும் காரிலிருந்து இறங்கி பெட்ரூமுக்கு அரை கிலோ மீட்டர் நடந்து, இருபது மீட்டர் படியேறியா போவான். வீட்டின் வாசலுக்கும் நுழைவு வாயிலுக்கும் இடையே அரை கி.மீ இருக்கும் போல. ரிச்னஸ் காட்ட வீட்டை பெரிதாக்கினால் போதுமா?.
தேவர் 'மா' என்கிற படத்துக்கு ஒரு செட் போட்டிருந்தார். தர்மேந்திராவின் கார் வீட்டினுள் நுழைந்து இடது புறம் படிக்கு பதிலாக உள்ள ரேம்ப்பில் ஏறி மேல் தளத்தில் அம்மாவிடம் பேசி விட்டு வலது புற ரேம்ப்பில் கார் இறங்கி ஹாலுக்கு வரும். அது தான் ரிச்னஸ்.
விஜய்யிடம் அப்பா கெஞ்சுகிறார் பிஸினஸைப் பார்த்துக்கொள்ள சொல்லி. ஆனால் விஜய் வெளியேறி விடுகிறார்.
அடுத்த காட்சியிலேயே விஜய் வீட்டுக்கு வந்து அப்பாவோடு பேசுகிறார். பின் வில்லன் பிரகாஷ்ராஜிடம் 'டிவி பாருங்க. குட் நியூஸ்' எனச்சொல்லப்பட டிவியில் சரத்குமார் கம்பெனி பதவியை ராஜினாமா செய்வதாக சொன்னதும் பிரகாஷ்ராஜ் ஒழிந்தான் எனச்சொல்கிறார். ஆனால் சரத்குமார் என் அடுத்த வாரிசு என் மகன் என விஜய்யை காட்ட பிஜிஎம் ஒலிக்க விஜய் அலுவலகத்துக்குள் வருகிறார்.
உண்மையில் விஜய் வெளியேறும் காட்சிக்குப்பிறகு விஜய் காட்டப்படும் காட்சி இதுவாகத்தானே வரவேண்டும். அப்படி வந்தால் தானே மாஸ் என்ட்ரி. அதற்காகத்தானே ஏர்போர்ட் போய் செக்கின் செய்து
விமானம் ஏறிவிட்டதாக காட்சி வைத்தது . அடுத்த காட்சியிலேயே விஜய் திரும்பி வருவதாக காட்ட எதற்கு ஏர்போர்ட் சீன்ஸ்?.
அதற்கு பின் அலுவலகம் வருவதில் தலைவா என பிஜிஎம் என்ன போட்டாலும் காட்சிக்கு மாஸ் இல்லையே. அந்த சஸ்பென்ஸை மிஸ் செய்து விட்டார் வம்சி.
ஜெயசுதாவுக்கு ராதிகா குரலாம். அதுக்கு ராதிகாவையே நடிக்க வச்சிருக்கலாமே என்றார் மனைவி. அதானே....ஜெயசுதா பாதி சீன்கள் க்ரீன்மேட்டில் தான் நடிக்குது. அதற்கு ராதிகாவையே போட்டிருக்கலாமே. தினம் தினம் ஒன்பது மணிக்கு வீட்டில் ராதிகா குரல் ஒலித்து ஒலித்து சின்னக்குழந்தைக்கு கூட அத்துப்படி. குரல் ஒன்றவில்லை. வெல்லம் கலந்து செய்த பிரியாணி மாதிரி.
கோடீஸ்வரன் மகன்களில் ஒருவருக்கு பிஸினஸ் தொடங்கவே காசுக்கு அலையறாராம். இன்னொருவருக்கு அல்வா மாதிரி 400 கோடியை தூக்கிக்கொடுக்கிறாராம். அவரும் அந்த 400 கோடியை கடலை மாதிரி தின்று விட்டு விழிக்கிறாராம். இது எதுவுமே அப்பா சரத்குமாருக்கும் தெரியாதாம். 'வாரிசு' மாதிரி சினிமாப்படம் எடுத்தாரோ ஷாம் தெரியவில்லை...
ரஷ்மிகா மேல் இருந்த கொஞ்சநஞ்ச க்ரேஸும் போய்விடுவதான நடிப்பு.
சீரியலைப்போல் எடுத்திருப்பதாக சொன்னார்கள். சீரியல் கூட நேர்த்தியாக எடுக்கிறார்கள். எதிர் நீச்சல் என்று ஒரு சன் டி.வி சீரியல். அதில் சென்னையில் ஒரு பங்களாவில் எடுத்திருப்பார்கள். கதைக்களம் மதுரை. அதனால் வீட்டில் பெரிய மீனாட்சி அம்மன் சிலையை சுவற்றில் வைத்திருப்பார்கள். காட்சிகளுக்கு இடையே மதுரையை நினைவுப்படுத்தும் ஷாட்களை சரியாக வைத்து விடுவார்கள். நாலு அண்ணன்கள். உடை கூட ஒருவர் வெள்ளை வேட்டி, சட்டை, ஒருவர் வேட்டி பார்டர் கலரில் சட்டையுள்ள ராம்ராஜ் செட் உடை, ஒருவர் கலர் வேட்டி அரைக்கை சட்டை, ஒருவர் லேட்டஸ்ட் ஷர்ட், வேட்டி என ஒருவர் அணியும் ஆடை மறு ஆள் அணிய மாட்டார். நான்கு மறுமகள்கள். பேச்சில் கூட நான்கு பேரும் பேச்சு வழக்கு வேறு வேறு. படிக்காத மாமியாரின் பழைய கால உடை. காசிக்கு போவதாக காட்சி. அவரின் மாமியாராக, அப்பத்தாவாக வருபவர் படித்தவர். அவர் வக்கீலாபீஸ், ரெஜிஸ்டராபீஸ் என அலைகிறார். அமெரிக்காவிலிருந்து ஒருவர் போன் செய்வதாக காட்சி. உண்மையில் ஏதோ வெளிநாட்டில் தான் எடுத்திருக்கிறார்கள். Green mat இல்லை. ஏதோ அரைமணி நேர சீரியல் தானே என நினைக்காமல் காட்சிக்கு காட்சி கண்காணித்து எடுக்கிறார்கள். இவ்வளவு கோடிகளை வாங்கிக்கொண்டு எல்லாமே Green matல் என்பது....செரிக்காதுடா.....
புகழ்பெற்ற இயக்குனர் சாந்தாராம் சொன்னதாக சொல்வதுண்டு. "சினிமா பார்க்கும் போது மனிதனின் மூளைக்கு பதினாறு வயசு தான்" என்று. வாரிசு முதல் வசூல் என்றால் அந்த வயதில் பத்தைக் குறைக்கலாம்.
வம்சி சாரே.....தமிழ்ப்படமாகவும் இல்லை. தெலுங்குப்படமாகவும் இல்லை. தமிலுங்குப்படம் இதோடு கடைசியாக இருக்கட்டும்.
இனி வந்தாலும் பாராமுகம் உத்தமம்......
No comments:
Post a Comment