குடந்தை சார்ங்கபாணி கோயிலில் ராஜகோபுரம் இல்லாமல், மொட்டை கோபுரமாக இருந்த காலத்தில் லக்ஷ்மி நாராயணன் என்ற ஏழை பிரம்மச்சாரி தினமும் கோயிலுக்கு வந்து அமுதனை ஸேவித்துவிட்டு சிறு சிறு கைங்கர்யங்களை செய்து கொண்டிருந்தான்.
கோயில் மொட்டை கோபுரத்தை பார்க்கும் போதெல்லாம், தனக்குள் இதை ராஜகோபுரமாக்க வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டான். பின்னர் அவனது பிரயத்தனத்தினாலும், தனது ஆசார்யன், நாவலபாக்கம் குமாரதாத தேசிகன் இன்னருளாலும், அந்த தேசத்தை ஆண்ட மன்னரும், பொது ஜனங்களும் லக்ஷ்மி நாராயணனுக்கு நிறைய பொருளுதவி தந்து, அதை பதினொரு நிலைகள் கொண்ட ராஜகோபுரமாக கட்டி முடித்தார்!
சிறிது நாள் கழித்து லக்ஷ்மி நாராயணன் ஒரு தீபாவளி அமாவாஸ்யையன்று, கோயில் தூணோரமாக அமர்ந்த நிலையில் பரமபதம் எய்தினார். அவருடைய சரமத்திருமேனிக்கு க்ரியைகள் செய்ய, சொந்தங்கள் யாரும் இல்லாததால் ஊர் ஜனங்கள் அவரது திருமேனியை பள்ளி படுத்தினர்.
*ஆனால் தம்மை தாய் தந்தையாக பாவித்து கைங்கர்யம் செய்த அந்த பக்தனுக்காக தாமே கைகளில் தர்ப்பைப்புல் ஏந்தி, பஞ்சபாத்திர- உத்ரணியில் தீர்த்தமும் எள்ளுடன் பிண்டம் வைத்து திதி கொடுத்தார் ஆராவமுதன்!*
மறுநாள் கோயிலை திறந்த பட்டர் அதிர்ச்சியடைந்தார். உற்சவ மூர்த்தி பெருமாள் ஈர வஸ்த்திரத்துடன், அபர காரியங்களின் போது அணிவது போல பூணூலை வலமிருந்து இடமாக அணிந்திருக்க, ஆங்காங்கே தர்ப்பையும் எள்ளும் இறைந்திருந்தன. ஸ்ரார்த்தம் செய்தவர் முகம் எந்த அலங்காரமும் இல்லாமல் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. பட்டாச்சார்யார் மயங்கினார். அசரீரி ஒலித்தது "லக்ஷ்மி நாராயணனான என் பக்தனுக்கு இனி நானே ஒவ்வொரு வருஷமும் ஐப்பசி தீபாவளி அமாவாஸ்யை அன்று ஸ்ரார்த்தம் செய்வேன், இதற்கு ஆவண செய்ய வேண்டுமென ஆக்ஞையிட்டார்!"
*நீத்தாருக்கு நெருங்கியவர் யாரும் இல்லாத நிலையில், என் பக்தன் என்னோடு நெருங்கிய ஸ்நேகம் கொண்டவன். பூவுலகை விட்டு அவன் மறைந்தாலும் வைகுந்தம் வரையில் அவனைத் தாங்கி செல்வேன் என பரந்தாமனே உறுதியோடு சொன்ன தலம் திருக்குடந்தை!*
இன்றளவும் ஐப்பசி மாத அமாவாஸ்யை திதியில், தீபாவளியும் இணையும் நாளில், கோமளவல்லி தாயார் சந்நிதிக்கு எதிரில் உள்ள ஶ்ரீகுமாரதாத தேசிகன் சந்நிதியில் ஸ்ரார்த்த கைங்கர்யம் நடைபெறுகிறது. சந்நிதி சாத்திய நிலையில், ஏகாந்தமாக சில அர்ச்சகர்கள் பெருமாள் திருநாமத்தை சொல்லி ஸ்ரார்த்தம் செய்கிறார்கள். பிறகு உச்சிகால பூஜை முடித்து கோயில் திறக்கப்படுகிறது, அதுவரை பக்தர்களுக்கு ஸேவை கிடையாது!
"ஆராவமுதே அடியேனுடலம் நின்பாலன்பாயே*
நீராயலைந்து கரைஉருக்குகின்ற நெடுமாலே*
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை*
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேனெம்மானே!"
-ஸ்வாமி நம்மாழ்வார்(திருவாய்மொழி)
No comments:
Post a Comment