கோடம்பாக்கம் சந்திர பவன் ஹோட்டலுக்குள் நான் நுழையும்போது இரவு மணி எட்டு இருக்கும்.
நான் சொல்லும் 'சந்திர பவன்' டிரஸ்ட்புரம் சிக்னல் பக்கத்தில் இருக்கிறது.
1980 களில் அடிக்கடி அங்கே போய் சாப்பிடுவது வழக்கம்.
இரவு ஏழு மணிக்கு அறையிலிருந்து வெளியே புறப்படுவேன். இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய காரணம் இருக்கிறது.
அந்த நேரத்தில் கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் நடந்து சென்றால், காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் நிறைய சினிமா நடிக நடிகையரை பார்க்கலாம்.
ஷூட்டிங் முடிந்து திரும்பிக் கொண்டிருப்பார்கள். இப்போது மாதிரி கார் பக்கவாட்டு கண்ணாடியை கருப்பு ஃபிலிம் கொண்டு மறைக்கும் வழக்கமெல்லாம் 80 களில் இல்லை.
டிராபிக்கில் ஊர்ந்து செல்லும் ஒவ்வொரு காரையும் உற்று நோக்கினால் மேக்கப் கலைக்காத நட்சத்திர முகங்களை நிறையவே பார்க்கலாம்.
ஸ்ரீபிரியா, லதா, தேங்காய் சீனிவாசன், படாபட் ஜெயலட்சுமி, கே.ஆர். விஜயா,
ராதிகா.
ஆனாலும் காரில் செல்லும் அந்த நட்சத்திரங்கள், முடிந்தவரை நம்மை பார்த்தும் பார்க்காதது போலவே போவார்கள்.
இருந்தாலும் கூட இந்த பட்டிக்காட்டானுக்கு அது மிட்டாய் கடையை பார்ப்பது போன்ற ஒரு திருப்தி. அவ்வளவுதான்.
அன்றும் அப்படித்தான் கோடம்பாக்கம் ரோட்டில் நடந்து போய் டிரஸ்ட்புரம் சந்திர பவன் வாசல் வரைக்கும் வந்து விட்டேன்.
என்ன காரணமோ தெரியவில்லை. ஒரு நட்சத்திரம் கூட அன்று கண்ணில் படவே இல்லை.
சரி. சந்திர பவனுக்குள் நுழைந்து சாப்பிட்டு விட்டு ரூமுக்கு போய் படுக்கலாம் என நினைத்த அந்த நொடியில்தான் அந்த பளிச்சென்ற பச்சை கலர் காரைப் பார்த்தேன்.
உள்ளே அதை விட பளிச்சென்று ஜெயமாலினி.
கார் சற்றே டிராபிக்கில் திணறி நகர, ரோட்டோரம் நின்ற நிறைய பேர் கண்களில் மின்னலடிக்க ஆரம்பித்தது.
"ஏய், ஜெயமாலினி போகுதுப்பா."
ஒரு சிலர் காரைப் பார்த்து கைகளை ஆட்டினார்கள். ஜெயமாலினியோ கண்கள் கட்டி விடப்பட்ட குதிரையை போல, பக்கவாட்டில் திரும்பிப் பார்க்காமல், காரின்முன்புற கண்ணாடியையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். இம்மியேனும் எங்கள் பக்கம்
திரும்பிப் பார்க்கவில்லை.
சர்ரென்று வேகம் பெற்ற கார் எங்கள் கண்களிலிருந்து மறைந்தது.
ஆனாலும் எங்களில் பலர் Enlightenment, அதாவது
'ஜீவன் முக்தி' பெற்று விட்ட முழு திருப்தியோடு அங்கிருந்து மெல்ல நகர ஆரம்பித்தோம்.
நானும் அந்த சந்தோஷ பரவசத்தோடுதான் சந்திர பவனுக்குள் நுழைந்தேன்.
சர்வர் வழக்கம் போல தண்ணீர் கொண்டு வந்து வைக்க, நானும் வழக்கம் போல தோசையை சொல்ல,
அப்போதுதான் வழக்கத்துக்கு மாறான அந்த நபர் ஹோட்டல் வாசலில் வந்து நின்றார்.
எனக்கு சற்றே அதிர்ச்சி.
பல நாட்கள் நானும் சந்திர பவன் வந்து போய்க் கொண்டிருக்கிறேன்; ஒரு நாளும் ஒரு சினிமா நட்சத்திரமும் அந்த ஹோட்டல் உள்ளே வந்து நான் பார்த்ததில்லை. காரணம் அது ஒன்றும் அவ்வளவு பெரிய ஹோட்டல் அல்ல. சாதாரண சராசரி ஹோட்டல்தான்.
அன்று உள்ளே வந்தவரும் ஒன்றும் பிரபல நட்சத்திரம் அல்ல.
ஒரு விரல் கிருஷ்ணராவ்.
ஒரு சில படங்களில் நீங்கள் அவரைப் பார்த்திருக்கலாம். சின்னத்தம்பியில் கூட கவுண்டமணிக்கு மாமனாராக வருவார்.
அந்த ஒரு விரல் கிருஷ்ணராவ்தான் சந்திர பவன் ஹோட்டல் வாசலில் வந்து சற்றே தயங்கி நின்றார்.
மிகுந்த களைப்புடன் காணப்பட்டார்.
மேக்கப் எதுவும் இல்லாமல் சாதாரணமாக நின்றிருந்த அவரை யாரும் கவனிக்கவோ கண்டு கொள்ளவோ இல்லை. நான் மட்டும் கண் இமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
மெல்ல அடியெடுத்து ஹோட்டலுக்குள் வந்த கிருஷ்ணாராவ், ஓரமாக நின்று கொண்டிருந்த சர்வர் ஒருவருக்கு பக்கத்தில் போனார். குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என சைகை காட்டினார்.
அந்த சர்வர் கொஞ்சமும் சலனம் இல்லாமல் ஒரு டேபிளிலிருந்த ஜக்கை நோக்கி கை காட்டினார். போய் எடுத்து குடிச்சுக்கோ என்பது போல சைகை செய்தார்.
கிருஷ்ணாராவ் அந்த டேபிள் அருகே போய் ஜக்கை எடுத்தார். ஆனால் ஊற்றி குடிக்க டம்ளர் எதுவும் அங்கே இல்லை.
பக்கத்து டேபிளை பார்த்தார். அதில் ஆட்கள் சாப்பிட்டுக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தார்கள்.
மீண்டும் சுற்றிலும் ஒரு பரிதாப பார்வை.
நான் இன்னமும் அவரையேதான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கிருஷ்ணாராவ் இப்போது என்னை கவனித்து விட்டார்.
தன்னையும் ஒருவன் உற்று நோக்குவது, அந்த கலைஞனுக்கு மிகப் பெரும் உற்சாகத்தை தந்திருக்க வேண்டும். வேகமாக என் டேபிள் அருகே வந்தார். மெலிதாக புன்னகை செய்தார்.
என் முன் இருந்த நீர் நிரம்பிய டம்ளரை கை காட்டி குடிக்கலாமா என சைகையில் கேட்க, நான் சம்மதித்து தலை அசைத்தேன். வேக வேகமாக எடுத்து மடக் மடக் என குடித்தார். காலியானவுடன் மீண்டும் ஜக்கில் இருந்து நிரப்பி அதையும் குடித்தார். அவர் மிகுந்த தாகத்தோடு இருந்திருக்க வேண்டும்.
குடித்து முடித்து டம்ளரை என் டேபிளின் ஒரு ஓரமாக வைத்தார். நீர் வழிந்த உதடுகளை கையால் அழுத்தி துடைத்துக் கொண்டே நன்றிப் புன்னகை செய்து நகர்ந்தார்.
எவரையும் திரும்பிப் பார்க்காமல் ஹோட்டலுக்கு வெளியே போய் கோடம்பாக்கம் சாலையில் இருளுக்குள் நடந்து
மக்களோடு மக்களாக கலந்து மறைந்தார்.
என் டேபிளுக்கு இப்போது மசால் தோசை வந்து சுட சுட காத்திருந்தது. ஆனால் நான் அதை சாப்பிடாமல் ஒரு விரல் கிருஷ்ணாராவ் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு ஏனோ மனம் உறுத்தியது.
அவரையும் உடன் அமர வைத்து உணவருந்த சொல்லி இருக்கலாமோ..!
அல்லது
அட்லீஸ்ட் அந்த கலைஞனை பாராட்டி ஒரே ஒரு வார்த்தையாவது பேசி அனுப்பி இருக்கலாமே !
அந்த அங்கீகாரம் அவருக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் ?
ஆம். ஒரு சின்னஞ்சிறு குழந்தை கூட தான் ஒரு ஓவியத்தை கிறுக்கி விட்டால், ஒரு பொம்மையை செய்து விட்டால், எவ்வளவு ஆர்வமாக மற்றவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏங்குகிறது ?
ஒரு குழந்தையே அங்கீகாரத்திற்காக ஏங்கும்போது, ஒரு விரல் கிருஷ்ணாராவுக்கு மட்டும் அந்த ஏக்கம் இருக்காதா என்ன ?
மற்றவர்கள் அவரை கண்டு கொள்ளாமல் இருந்தது போல, நானும் அன்று அப்படி அமைதியாக இருந்திருக்க கூடாது.
இனி நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த சந்திர பவன் சம்பவத்திற்கு பிறகுதான் நானாக தேடிச் சென்று மற்ற கலைஞர்களை, அவர்கள் பிரபலமானவர்களாக இருந்தாலும், பிரபலம் ஆகாதவர்களாக இருந்தாலும், பாராட்டி ஒரு சில வார்த்தைகள் பேச ஆரம்பித்தேன்.
ஆம்.
மற்றவர்களின் அங்கீகாரம் ஒருவருக்கு தரும் அந்த மன நிறைவான சந்தோஷம்.
அதற்கு ஈடு இணை,
இந்த அகில உலகத்தில் வேறு எதுவும் இல்லவே இல்லை.
இன்று முதல் இயன்றவரை
எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பார்ப்போம்.
சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம், மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதானே !
Courtesy:-
Prashantha Kumar
விரும்பிக் கேட்டவை
No comments:
Post a Comment