குடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்கிறார்கள். இது வீட்டிற்கு எதிரில் இருக்கக்கூடாதா அல்லது வீட்டிற்குள் நுழைபவர்களின் எதிரில் இருக்கக்கூடாதா?
வீடு க்ருஹப்ரவேசம் செய்யும்போது எதிர்வெள்ளி கூடாது என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். எதிர்வெள்ளி கூடாது என்றால் வீட்டிற்குள் நுழையும் திசையில் வெள்ளி இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு ஒரு வீட்டின் தலைவாயில் என்பது கிழக்கு நோக்கி இருப்பதாக வைத்துக்கொள்வோம். மரத்தால் செய்யப்பட்ட அந்த வாயிலுக்கு வீட்டின் எஜமானர் தனது இல்லத்தரசியுடன் இணைந்து பூஜை செய்து தம்பதியராக உள்ளே நுழைவார்கள். கிழக்கு நோக்கிய தலைவாயிலாக இருந்தால் இவர்கள் மேற்கு நோக்கி உள்ளே நுழைவார்கள். அவ்வாறு நுழையும்போது மேற்கு திசையில் வெள்ளி இருக்கக் கூடாது என்பதைத்தான் ஜோதிடர்கள் வலியுறுத்துகிறார்கள். கிழக்கு நோக்கிய வாயிலுக்கு மேற்கில் வெள்ளி இருக்கும்போதும், மேற்கு நோக்கிய வாயிலுக்கு கிழக்கில் வெள்ளி இருக்கும்போதும் குடிபுகுதல் கூடாது. வடக்கு அல்லது தெற்கு நோக்கிய வாயில் கொண்ட வீடுகளுக்கு இந்தப் பிரச்னை கிடையாது. இந்த விதியானது தனி வீடுகளுக்குத்தான் விதிக்கப்பட்டுள்ளதே தவிர அடுக்கு மாடி குடியிருப்பு அதாவது ஃப்ளாட்டுகளுக்குப் பொருந்தாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீண்ட காலத்திற்கு வெள்ளி மேற்கிலேயே இருக்கிறார் எனும்போது கிழக்கு பார்த்த வாயில் கொண்ட தனி வீடுகளுக்கு இந்த காலத்தில் புதுமனைபுகுவிழா நடத்த முடியாதா, நீண்ட நாட்களுக்கு இந்த வீடுகள் மூடித்தான் கிடக்க வேண்டுமா என்ற ஐயமும் நம் மனதில் உருவாகக் கூடும். இதற்கும் விதிவிலக்கு என்பது உண்டு. அதாவது வெள்ளி என்பது விடியற்காலை நேரத்தில்தான் கண்களுக்குப் புலப்படும். பொதுவாக சூரிய உதயத்திற்கு முன் புதுமனைபுகுவிழா நடத்திவிட வேண்டும் என்ற சம்பிரதாயம் நம்மால் கடைபிடிக்கப்படுவதால் எதிர்வெள்ளி என்ற விதி அங்கே வந்து சேர்கிறது. விடிந்த பிறகு சூரிய ஒளியின் தாக்கம் தொடங்கிவிடுவதால் வெள்ளி அங்கே நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அதனால் விடிந்தபிறகு தோஷமில்லாத வகையில் ஒரு நல்ல லக்னத்தைக் நிர்ணயம் செய்து அந்த நேரத்தில் க்ருஹப்ரவேசம் செய்யும்போது எதிர்சுக்கிரனால் எந்தவிதமான தோஷமும் உண்டாகாது.
No comments:
Post a Comment