உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பனை தொடர்ந்து, 36 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 27 மாவட்ட செயலர்களை இழுக்க, பன்னீர்செல்வம் - சசிகலா தரப்பில் பேச்சு நடத்துவது, அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில், உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து, பழனிசாமி மேல்முறையீடு செய்தார்; இந்த வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 'பிரிந்தவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என்று, பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். அவரது கருத்தை, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும், சசிகலாவும் வரவேற்றனர். சசிகலா, செப்., 2ல் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். பன்னீர்செல்வமும், 'புரட்சி பயணம்' என்ற பெயரில், விரைவில் கோவையில் இருந்து சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளார்.
இதற்கிடையில், தற்போதைய உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் ஆகியோர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.அவர்களை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் உட்பட 36 எம்.எல்.ஏ.,க்கள்; 27 மாவட்ட செயலர்களுடன், தங்கள் அணிக்கு வருமாறு பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுக்குழு உறுப்பினர்களில், ஒன்றிய செயலர்கள் அளவில் உள்ள, 50 சதவீதம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணியிலும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா தொலைபேசி வழியாக பேசி, எம்.எல்.ஏ.,க்கள் ஒன்பது பேரின் சம்மதம் பெற்று விட்டதாகவும் தெரிகிறது. பொதுக்குழு கூட்டம் தொடர்பான மேல்முறையீடு வழக்கின் தீர்ப்புக்காக, 36 எம்.எல்.ஏ.,க்களும் காத்திருக்கின்றனர்.
தீர்ப்பு பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக வரும் பட்சத்தில், எம்.எல்.ஏ.,க்கள் அணி மாற்றம் அதிரடியாக தொடரும் என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சசிகலா - பன்னீர்செல்வம் தரப்பினர், அ.தி.மு.க.,வில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருவதால், அக்கட்சியில் சலசலப்பு அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment