Tuesday, August 30, 2022

காங்.,கில் ராகுலுக்கு எதிராக சசி தரூர்!

 வரும் அக்டோபரில் நடக்கவுள்ள காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் ராகுலை எதிர்த்து, கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து காங்., தலைவர் தேர்தலில் பல ஆண்டுகளுக்குப் பின், நேரு குடும்பம் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 காங்.,கில் ராகுல், சசி தரூர்!


காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்., 17ல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு போட்டியிட, ராகுல் தயங்குவதாக கூறப்படுகிறது. ஆனாலும், ஆதரவாளர்களின் நெருக்கடியால் கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றி, தேர்தலில் அவர் களமிறங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


போர்க்கொடி



தலைவர் பதவிக்கு ராகுல் போட்டியிட்டால், அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள் என, காங்., தலைமை நம்புகிறது. ஆனால் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள, 'ஜி 23' என, அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான சசி தரூர், 66, தேர்தலில் ராகுலை எதிர்த்து போட்டியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
சசி தரூர் கேரளாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையில் உயரதிகாரியாக பணியாற்றியவர். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர்.


புத்துணர்வு



எனவே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும்படி, அதிருப்தி குழு தலைவர்கள் அவரை வற்புறுத்தி வருவதாகவும், அவரும் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் மலையாள நாளிதழ் ஒன்றில் சசி தரூர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:கட்சியை புத்துணர்வுடன் வைத்திருப்பதற்கு புதிய தலைமை தேவைப்படுகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பழமைவாத கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், சர்வதேச அளவில் இப்போது கவனம் பெற்றுள்ளது. அங்கு, 2019ல் நடந்த தேர்தலில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பலர் போட்டியிட்டனர். இதுபோன்ற ஆரோக்கியமான ஒரு சூழலை காங்கிரசிலும் ஏற்படுத்த வேண்டும். வெளிப்படையான, நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.



தொலைநோக்கு



கட்சியில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கான திட்டம் இருக்க வேண்டும். அதேநேரத்தில், நாட்டு நலனுக்கான தொலைநோக்கு பார்வையும் இருக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி என்பது, நாட்டுக்கு சேவை செய்யும் கருவியும் கூட. இவ்வாறு அதில் அவர் எழுதியிருந்தார். இது குறித்து சசி தரூரிடம் கேட்டபோது, ''காங்., தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனா என்பது குறித்து இப்போது எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் கட்டுரையில் நான் தெரிவித்திருந்த கருத்துகளில் உறுதியாக உள்ளேன்,'' என்றார்.இது குறித்து காங்., பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:


தேர்தல் தேதி



காங்கிரசில் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வெளிப்படையாகவே நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் உள்ள தகுதி பெற்ற யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

'காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் போட்டியிட்டு, அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்கினால், இந்த தேர்தலில், இந்திராவுக்குப் பிறகான நேரு குடும்பம், போட்டியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


காங்கிரசுக்கு 64 நிர்வாகிகள் முழுக்கு



முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரசில் பல முக்கிய பதவிகளை வகித்தவருமான குலாம் நபி ஆசாத், கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். சமீபத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்த அவர், காங்., - எம்.பி., ராகுல் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர்கள் 64 பேர், அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜீத், மனோகர்லால் சர்மா, காரு ராம், முன்னாள் எம்.எல்.ஏ., பல்வான் சிங் ஆகியோர், காங்கிரசிலிருந்து விலகியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இது குறித்து அவர்கள் கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பிஉள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் உழைத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு எந்த அங்கீகாரத்தையும் கட்சி மேலிடம் தரவில்லை. அதற்கு பதிலாக அவமானத்தைத் தான் சந்தித்துள்ளோம். காஷ்மீர் அரசியலில் எங்களை வழிநடத்திய குலாம் நபி ஆசாத் தலைமையை ஏற்க முடிவு செய்துள்ளோம். அவர் துவக்கவுள்ள கட்சியில் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

அவசர ஆலோசனை


காங்கிரசில், 'ஜி 23' என அழைக்கப்படும் அதிருப்தி குழு தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா, ஆனந்த் சர்மா, பிரித்விராஜ் சவான் உள்ளிட்டோர், குலாம் நபி ஆசாத்தை நேற்று டில்லியில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...