'அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதால் ஏற்படும் பொருளாதார தாக்கங்கள் குறித்த விவாதம் நிச்சயம் தேவை' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த நிதியமைச்சர் தியாகராஜனின் கருத்துக்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி ரமணா, 'தியாகராஜனின் அறிக்கை கொடுக்கப்படும் விதம் மற்றும் அவரது கருத்துகளை, தான் கவனித்து வருவதாகவும், அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் இருந்து வருவதால், நீதிபதிகள் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றனர் என்று எண்ண வேண்டாம்' என்றும் கூறியுள்ளார்.
இது, தி.மு.க.,வினருக்கு மிகப்பெரிய குட்டு. மாண்புமிகு நீதிபதி அவர்களே... 50 ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., ஆட்சியை பிடிக்க காரணமே, அவர்களது சொல்லாற்றல் தான். அண்ணாதுரை துவங்கி கருணாநிதி வரை, தங்களின் சொக்குப்பொடி பேச்சால், தமிழகத்தை வளைத்து விட்டனர். அத்துடன், 'என் கிட்டயே கடன் வாங்கி, எனக்கே வேட்டி எடுத்துக் கொடுத்தவன்' என்ற பிரபலமான சினிமா வசனம் போல, மக்கள் பணத்திலேயே அவர்களுக்கு இலவசங்கள் கொடுத்து, மாநிலத்தின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களும் இவர்களே! தேர்தல் நேரத்தில் பற்பல வாக்குறுதிகள் கொடுத்து வெற்றி கண்டவர்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், ஓட்டுக்கு பணம் மற்றும் இலவசங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக் காட்டிய போதும், இதுநாள் வரை அதை ஆணையம் கண்டு கொள்ள வில்லை; கண்டிக்கவும் இல்லை. இப்போதாவது, விழிப்புணர்வு வந்துள்ளது மகிழ்ச்சி! அதே நேரத்தில், எந்த கேள்விக்கும், தி.மு.க.,வினர் பதிலை தயாராக வைத்திருப்பர் என்பது கண்கூடு.
இப்போது, இலவசங்களுக்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவிக்கும் போதும், தாங்கள் செய்வது சரி என்றும், இலவசங்களுக்கு வேறு நாமகரணம் சூட்டி அதை, 'நலத்திட்டங்கள்' என்று கூறி சமாளிக்கும் இவர்களின் சாணக்கியத்தனம் வியப்புக்குரியது. ஒரு படத்தில் கவுண்டமணி செந்திலிடம் ஒரு பூவை காட்டி, 'புஷ்பம்' என்பார். செந்தில், 'புய்ப்பம்' என்பார். கவுண்டமணி மீண்டும், 'புஷ்பம்' என்று திருத்துவார். செந்திலோ திரும்பவும், 'புய்ப்பம்' என்றே சொல்வார். அப்படி சொல்லிய பின், கவுண்டமணியிடம், 'அண்ணே இதை இப்படியும் சொல்லலாம்' என்பார் செந்தில்.
அதுபோலத் தான் இலவசங்கள் குறித்து, தி.மு.க.,வினர் சொல்வது உள்ளது. நீதிமன்றம் இலவசம் என்பதை, தி.மு.க., நலத்திட்டம் என்கிறது. ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி மனுஷனை கடிச்ச மாதிரி, மக்களை முட்டாள்களாக்கி ஏமாற்றி வந்த தி.மு.க.,வினர், இன்று நீதிபதிகளையே முட்டாளாக்கப் பார்க்கின்றனர்.
கடல் நீரெடுத்து கரையில் தெளிப்பது போல, நிலவு வெளிச்சத்தில் நிலாவை பார்ப்பது போல, மக்கள் வரிப் பணத்தில், மக்களுக்கு நலத்திட்டம் என்ற பெயரில் தரப்படும், இலவசங்களை நீதிமன்றம் தடை செய்தால் சுபிட்சம். இல்லையெனில், கடன் சுமையால் பொருளாதாரம் சீரழிந்து, இலங்கை கதி தான் தமிழகத்திற்கும் ஏற்படும் என்பதில் மாற்றமில்லை.
No comments:
Post a Comment