'டில்லிக்கு காவடி துாக்கவா போகிறேன்... கைகட்டி வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்... நான், கருணாநிதியின் பிள்ளை' என பேசியிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின். இதன் வாயிலாக, காவடி துாக்குவதை கேவலமானதாக சித்தரிக்க முயற்சித்திருக்கிறார். இது, ஹிந்துக்களின் வழிபாட்டை, இறை நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல்.
முருகப் பெருமானின் அருளைப் பெற, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாக நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து, பழநி, திருச்செந்துார், திருத்தணிக்கு பாதயாத்திரையாக பல கி.மீ., துாரம் நடந்து செல்வதை, வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.அப்படிப்பட்ட வழிபாட்டு முறையை, கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். அவர் மட்டுமின்றி, ஹிந்துக்களின் இறைவழிபாட்டை, சடங்குகளை, கேலி செய்வது தமிழ் சினிமாவிலும் தொடர்கிறது... அதாவது, காமெடி என்ற பெயரில், ஒருவரின் பணம் பறிபோய் விட்டால், 'கோவிந்தா... கோவிந்தா...' என்பதும், ஒருவனை மற்றொருவன் ஏமாற்றி விட்டால், 'பட்டை நாமம் போட்டு விட்டான்' என்றும், 'அவன் தலையை மொட்டை அடித்து விட்டான்' என்றும், கேலி, கிண்டல் செய்வது நீடிக்கிறது.
இந்த கழிசடை படங்களைத் தயாரித்த இயக்குனர்கள் யார் என, பூர்வீகத்தை ஆராய்ந்தால், ஹிந்து அல்லாத மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர். அதனால் தான், ஹிந்துக்களின் இறை நம்பிக்கையை கேலி செய்கின்றனர்.
அதே போன்ற காரியத்தை, ஹிந்துக்களின் ஓட்டைப் பெற்று ஆட்சிக்கு வந்த முதல்வரே செய்வது நியாயமா... ஹிந்து மத வழிபாட்டை, சடங்குகளை, முதல்வரே கொச்சைப்படுத்தும் விதமாக பேசினால், அது ஹிந்துக்களின் மனதில் ஆழமாக
பதிந்துவிடாதா... உங்களை பார்த்து, கூலிக்கு மாரடிக்கும் டெலிவிஷன்களும், அதே வார்த்தைகளைப் பயன்படுத்துமே...ஹிந்து கடவுள்களை உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்; சடங்கு, வழிபாடுகள் பிடிக்காமல் போகலாம்; அதற்காக கேலி கிண்டல் செய்யலாமா... ஹிந்துக்களின் ஓட்டுகளும் வேண்டும் தானே தி.மு.க.,விற்கு?
நானும், தி.மு.க.,வைச் சேர்ந்தவன். ஹிந்து; தீவிர இறை நம்பிக்கையுள்ளவன். இனி மேலாவது, ஹிந்துக்களின் வழிபாட்டை இழிவுபடுத்தாதீர்கள் முதல்வரே!
No comments:
Post a Comment