அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நேற்று முடிந்தது. இந்த வழக்கில் இரு தரப்புக்கும் இடையில் பரபரப்பாக நடந்த வாதத்தில் 'பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து செயல்பட முடியாது; இருவருக்கும் இடையில் உடன்பாடு இல்லாததால் தான் இருவருமே நீதிமன்றத்திற்கு வந்துள்ளோம்' என பழனிசாமி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் 'இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லாது; கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது' என உத்தரவிட்டிருந்தார்.
மேல்முறையீட்டு மனு
இந்த உத்தரவை எதிர்த்து இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் 'தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்த இயலாது; அரசியல் கட்சியின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிடுவதாக உள்ளது.'கட்சி செயல்பாடுகளில் மட்டுமின்றி பெரும்பான்மையினரின் விருப்பத்திலும் இந்த உத்தரவு குறுக்கிடுகிறது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தார்.
மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் துரைசாமி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பழனிசாமி தரப்பில் டில்லி மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன் ஆர்யமா சுந்தரம் சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடினர்.
பன்னீர்செல்வம் தரப்பில் டில்லி மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன்; வைரமுத்து சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் வாதாடினர்.
காலை 11:00 மணிக்கு துவங்கிய மூத்த வழக்கறிஞர்களின் வாதம் மதியம் 1:30 வரை நடந்தது. பின் மதியம் 2:15 மணிக்கு துவங்கிய வாதம் மாலை 4:30 வரை நடந்தது.ஒரே நாளில் மேல்முறையீட்டு வழக்கில் மூத்த வழக்கறிஞர்களின் வாதம் முடிந்தது. அதைத்தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர். எழுத்துப்பூர்வ வாதங்களை இன்று தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அனுமதித்தனர்.
புள்ளி விவரங்கள் இல்லை
இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடியதாவது:ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனரா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியது என்றும் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு புள்ளிவிபரங்கள் இல்லை என்றும் தனி நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதை ஏற்றுக் கொள்ள முடியாது. பார்லிமென்ட்டில் மக்களின் பிரதிநிதிகளாக எம்.பி.க்கள் இருப்பது போல் கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதிகளாக பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
பொதுக்குழுவை கூட்டும்படி 2432 உறுப்பினர்கள் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் கேட்டுள்ளனர்.
பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தேர்தல் கமிஷனுக்கும் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளனர்.அனைத்து உறுப்பினர்களிடமும் ஒரு அரசியல் கட்சி கருத்து கணிப்பு நடத்த முடியாது. பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது. அதற்கு கட்சி உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும்.உச்ச நீதிமன்றம் வழக்கை திருப்பி அனுப்பி 2022 ஜூலையில் உத்தரவிட்டபோது 'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என்றது.ஆனால் உயர் நீதிமன்ற தனி நீதிபதியோ 'ஜூன் 23க்கு முந்தைய நிலை தொடர வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார். வழக்கில் கோராததை தனி நீதிபதி வழங்கியிருப்பது அசாதாரணமானது.
இருவருக்கும் இழுபறி
கடந்த ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் தான் அடுத்த பொதுக்குழு கூட்ட தேதி அறிவிக்கப்பட்டது. அங்கு இருந்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இது தெரியும். ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் 2460 பேர் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்கள் எவரும் இதுபற்றி புகார் தெரிவிக்கவில்லை. எழுத்துப்பூர்வமாக 'நோட்டீஸ்' அளிக்க வேண்டும் என்பது இல்லை.
ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் அந்த பதவிகள் காலாவதியாகி விடுகின்றன.
இதை பழனிசாமி ஏற்றுக் கொள்கிறார்; ஆனால் பன்னீர்செல்வம் ஏற்கவில்லை. இங்கேயே இருவருக்கும் இழுபறி ஏற்படுகிறது.கட்சியில் புதிய முறை வேண்டும் என பழனிசாமி கோருகிறார். இரட்டை தலைமையை பன்னீர்செல்வம் கோருகிறார். பொதுச் செயலர் தேர்தல் பற்றி முடிவு எடுக்க ஜூலை 11ல் பொதுக்குழுவை கூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தான் வழக்கு தொடர்ந்தார்.இருவருக்கும் இடையில் உடன்பாடு இல்லாததால் தான் இருவருமே நீதிமன்றத்தின் முன் உள்ளனர். தன் உரிமை பாதிக்கப்பட்டதால் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார்; உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல.இவ்வாறு அவர்கள் வாதாடினர்.
பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடியதாவது: கம்பெனி சட்டத்தை தனி நீதிபதி பின்பற்றியிருப்பதாக பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டது சரியல்ல. அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்கள் தான் முக்கியம்.அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற பழனிசாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. அது கட்சியின் அடிப்படை கட்டுமானத்துக்கே முரணானது.
கட்சியை துவக்கிய எம்.ஜி.ஆருக்கு முந்தைய கட்சியில் ஏற்பட்ட அனுபவத்தால் தான் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தினார்.உயர் நீதிமன்றம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரையே தற்போதைய நிலை தொடரும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை என முடிவுக்கு வந்து இரு பதவிகளும் நீடிப்பதாக கருதும் வகையில் ஜூன் 23க்கு முந்தைய நிலை தொடரும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.தனி நீதிபதியின் உத்தரவை ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும். கட்சியின் ஜனநாயகமே அடிப்படை உறுப்பினர்கள் தான்.
பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்பதை அதில் பங்கேற்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது.பொதுக்குழுவை கூட்டும்படி அவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தான் ஜூன் 23ல் அறிவித்தார். கட்சி விதிகளின்படி பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு தான் உள்ளது; அவைத் தலைவருக்கு இல்லை.
'உறுப்பினர்கள் சார்பில் பன்னீர்செல்வம் வழக்கு தொடர முடியாது; இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல' என தனி நீதிபதி முன் பழனிசாமி தரப்பில் வாதிட்டனர். தற்போது அதற்கு முரணாக தன் உரிமைக்காக தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுகின்றனர்.ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்தை நீக்கி உள்ளனர். ஒருவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டு தேர்தல் நடத்துவது எப்படி சரியாகும்?எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு நியாயமானது. அவர் கூறியுள்ள காரணங்களும் நியாயமானவை.இவ்வாறு அவர்கள் வாதாடினர்.
No comments:
Post a Comment