"எதுக்கு சார், ஆம்பளைங்க எல்லாம் இப்படி இருக்காங்க?? இவங்களை வச்சிட்டு எனக்கு என்ன செய்றதுன்னே தெரில..." இதை சொன்ன பெண்ணுக்கு 35 வயது. திருமணமாகி 10 ஆண்டுகள் முடிந்திருந்தது.
எதுக்கும்மா அப்படி சொல்றீங்க?
எது பண்ணாலும் குத்தம் கண்டுபிடிச்சுட்டு, கொஞ்சம் கூட கோ-ஆபரேட் பண்ணாம, சப்போர்ட்டிபா இல்லாத, ஊக்குவிக்க தெரியாத, எதையுமே எதாரத்தமா எடுத்துக்க தெரியாம.... கடுப்பா இருக்கு சார்...!
எவ்ளோ நாளா அப்படி இருக்கார்...?
இப்போ தான் சார், கொஞ்ச நாளா.., எங்களோடது காதல் கல்யாணம் சார், அப்போவெல்லாம் ரொம்ப பாசமா அனுசரனையா இருப்பார். இப்போ தான் இப்படி மாறிட்டார். என்ன செய்தாலும் அதுல குறை கண்டுபிடிக்கிறார் சார். நீங்களே என்னான்னு கேளுங்க..
கொஞ்ச நேரம் வெளியே உக்காருங்க, உங்க ஹஸ்பண்ட் கிட்ட பேசிக்கிறேன்னு சொல்லி வெளியே உக்கார வச்சுட்டு, அவர் கிட்ட பேசினேன்.
எப்படி போகுது திருமண வாழ்க்கை...?
எங்க சார், எதுக்கெடுத்தாலும் சண்டை சார். என்ன செய்தாலும் சண்டை வந்துடுது, என்ன சொன்னாலும் சண்டை வந்துடுது. இத்தனைக்கும் சண்டை போடவே கூடாதுன்னு நினைச்சுட்டு தான் பேசவே ஆரம்பிக்கிறோம். ஆனாலும் சாண்டைல முடியுது சார்.எதுக்கு சார் பொண்ணுங்க எல்லாம் இப்படி இருக்காங்க? நான சொல்ல வர்றதையும் புரிஞ்சிக்காம, நாம நல்லது சொன்னாலும் எடுத்துக்காம, எதுக்கெடுத்தாலும் சந்தேக பட்டுகிட்டு? அவங்களுக்கு என்ன தான் சார் வேணும்??
------------------------------------
இந்த பிரச்சனை பெரும்பாலான குடும்பங்களில் இருக்கு, புரிதல் குறைபாடு...!
ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு, "ஆயிரம் ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தாலும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு காரணமே பரஸ்பர விட்டு கொடுத்துக்கிறதால மட்டுமே, மற்றபடி இருவரும் வேறு துருவங்கள்ன்னு' சொல்வாங்க. கல்யாண ஆன புதுசுல பெரும்பாலும் பிரச்சனைகள் இல்லாம ஒற்றுமையா இருக்கிறவங்க 7,8 வருடத்துக்கு பின்னாடி இந்த மாதிரி உறவுமுறை பிரச்சனைகளில் மாட்டிக்கிறது ரொம்பவே சகஜம், இதை உளவியலில் 7 years itch'ன்னு சொல்றாங்க.
பல்வேறு குடும்ப ஆராய்ச்சிகளின் முடிவில் திருமணத்திற்கு பின் மனம் ஒத்து வாழும் தம்பதியருக்கு பல்வேறு உரசல்களும் ஒவ்வாமையும் தொடர்ந்து ஏற்படும் போது அவர்களின் பொறுமை அதிகபட்சம் 7 ஆண்டுகளில் நீர்த்து போய் இருவரும் ஒருவரை ஒருவர் சகித்து கொண்டு வாழ்வதும், பொறுமையின் எல்லைக்கு போய் சகிக்க முடியாமல் பிரிந்து செல்வதும் நடக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை குறிப்பால் உணர்த்தவே "7 years itch" என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்.
இந்த காலகட்டத்தை சரியாக புரிந்து கடந்து விட்டால் நம் உறவின் வேர் பலப்படும், விழுதுகள் செழித்து வளரும். எப்படின்னு பார்ப்போம்...
மிகவும் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் திருமண உறவுகளில் எந்த பிரச்சனைகளும் இல்லை என்றாலும் கூட 7-8 ஆண்டுகளில் ஒரு சலிப்பும் வெறுப்பும் ஏற்படுவது இயற்கை என்கிறார் Relationship specialist, Josh Magro (Psycho therapist). இதன் ஜெனடிக்கல் ஆராய்ச்சி மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. அதிக நாள் ஒரே துணையோடு வசிக்கும் சில பறவைகள், மிருகங்களை வைத்து ஆராய்ந்த போது அவை ஒற்றுமையாக இருக்கும் காலம் பெரும்பாலும் தங்க்ளின் குட்டிகள் வளரும் வரையே என தெரிகிறது..!!!?
சில வகையான நரிகள், பறவைகள் இனப்பெருக்க காலங்களில் பாதுகாப்புக்காக தங்களின் குட்டிகளோடு இருக்க வேண்டிய சூழலில் இரைக்காக தங்கள் துணையையே நாடி இருக்க வேண்டியதாகிறது. அப்படி சூழலில் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் அவை, குட்டிகள் பெரிதான பின் தங்கள் வழிகளில் பிரிந்து செல்கின்றன. இதே மன நிலை மனிதனின் குகை கால வாழ்க்கையில் இருந்து தங்கள் குழந்தைகள் பெரிதான பின் பிரிந்து செல்லும் மனப்பான்மை அதிகரித்து இருக்கலாம் என கூறுகிறார்கள் மன நல ஆராய்ச்சியாளார்கள்.
ஆக, ஒருவர் மேல் ஒருவருக்கு காரணங்களே இல்லாமல் கூட வெறுப்பும் சலிப்பும் ஏற்படக்கூடும். இதை முங்கூட்டியே புரிந்து கொள்வது நமது உறவு முறைகளில் பிரச்சனை வராமல் சமாளிக்க உதவும். உதாரணமாக
1. ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டுகள் வைப்பது, 2. குறைத்து மதிப்பிடுவது,
3. எடுத்தெறிந்து பேசுவது,
4. அவமதிப்பது,
5.ஒரு செயலை சுதந்திரமாக செய்ய விடாமல் தடை போடுவது,
6. உங்களுக்கு ஏற்ற மாதிரி உங்கள் துணையை மாற்ற முயற்சிப்பது எல்லாம் பிரச்சனைகள் வருவதற்கான அறிகுறிகள். இவற்றை செய்யும் போது ஒரு நொடி நாம அந்த இடத்துல இருந்தா என்ன செய்வோம்ன்னு யோசிச்சு செயல்படுவது நல்லது..!
நம்ம இந்திய திருமணங்களில் இருக்கிற "நம்மளை விட்டு எங்க போய்டுவாள்/வார்" எங்கிற மன நிலை ரொம்ப ஆபத்தானது. நமக்காக அவங்க செய்கின்ற எந்த ஒரு சின்ன செயல் ஆனாலும் அதற்கு நன்றியுடன் இருப்பது அவசியம். யோசிச்சு பார்த்தால் நம்ம உள்ளாடைகளை அன்றாடம் துவைத்து போடும் மனைவிக்கு எந்த அளவில் நாம நன்றியோட இருக்கிறோம் சொல்லுங்க??
துணையுடன் செலவழிக்கும் நேரம் குறையுறது ஒரு தவறான அறிகுறி. என்ன தான் குழந்தைகள், பிஸினெஸ், நண்பர்கள்ன்னு வேறு விசயங்கள் நமக்கு நடுவில வந்துட்டாலும் துணையுடன் தனியாக வெளியே செல்வதை வழக்கமாக்கி கொள்வது அவசியம். கோவிலோ, சினிமாவோ, ரெஸ்டாரண்டோ, இல்லத்துக்கு அருகில் இருக்கும் பார்க்கோ, பீச்சோ.. இடமா இல்லை ஊரில்?
நண்பர்களாக இருப்பது வேறு, துணையாக இருப்பது வேறு. நண்பர்கள் எனில் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டால் போதும் ஆனால் துணையாக இருக்கும் போது ஆதரவு & அனுசரனையாக இருப்பது அவசியம். தலைவலிக்கும் போது தைலம் தேய்த்து விடுதலும், கால் வலிக்கும் போது கால் அமுக்கி விடுவதற்கும் தயக்கம் கூடாது. அவங்க நமக்காக உழைத்தும் சிந்தித்தும் தான் அந்த வலிகளை பெற்றிருப்பாங்க. அதை போக்குவது நம்ம கடமை அல்லவா??
வாழ்க்கை ஒரே மாதிரி போகும் போது போரடிக்க தான் செய்யும். அந்த சமயம் எல்லாம் துணையுடன் சேர்ந்து செய்ய புதிய விசயங்களை தேடலாம். கலவி, கல்வி என அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். புதிய முயற்சிகள் உங்கள் உறவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இருவரும் சேர்ந்து நடனம் ஆடுவது, பாடுவது என கிறுக்குத்தனமாக எதையும் முயற்சிக்கலாம். குறைந்த பட்சம் உங்கள் இளமையில் கேட்ட பழைய பாடல்களை இணைந்து கேக்கலாம். நினைவுகள் என்றும் அழகானவை, நமது மனதிற்கு அவை புத்துணர்ச்சியை அளிக்கும்.
உங்கள் துணைக்கு ஒரு விசயம் பிடிக்காதென்றால் விட்டுக் கொடுப்பது தவறில்லை. அதை செய்யாமல் இருக்கலாம் அல்லது அவரை சம்மதிக்க வைத்து செய்யலாம். மாறாக தெரியாமல் செய்வது தவறு...! அது உறவினை பாதிக்கும். சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையும் அதிகரிக்கும். அதனால உறவு பாதிக்கப்படும். எந்த ஒரு உறவிலும் அடிப்படை நேர்மை ஒரு முக்கிய அச்சாணி என்பதை மறக்க கூடாது.
சண்டை போடுங்கள்...!!
உறவினில் சண்டைகள் நல்லது. புரிதல் குறைபாட்டினால் ஏற்படும் அந்த சண்டைகளில் தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். அவர் தேவை என்ன, என்ன பிடிக்காது என்று தெரிந்து கொள்ள முடியும். அதனால் சண்டை நல்லது...! ஆனால் தொடர்ந்து ஒரே விசயத்துக்கு மறுபடி மறுபடி சண்டையிடுவது தவறு. நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லை என்று அர்த்தம். ஒன்று விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது கடந்து செல்ல வேண்டும். மாறாக, அங்கேயே வீம்பு பிடித்து நிறக கூடாது. இதனால் எந்த பயனும் இல்லை.
பணம்..!
பல பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான அடித்தளம் பணம் தான். பண விசயத்தில் போதுமான சுதந்திரமும் ஒருவரின் மனதை காயப்படுத்தாத அணுகுமுறையும் வெளிப்படைத்தன்மையும் மிக மிக அவசியமாகும். நீங்கள் எப்படி சம்பாரிக்கிறீர்கள், அதை எங்கு சேமிக்கிறீர்கள், எப்படி செலவழிக்கிறீர்கள் என்கிற விபரங்களில் ஒளிவு மறைவு இருக்க கூடாது. பணம் பற்றிய கேள்விகள் வரும் போது மிக மிக கவனமாகவும் தெளிவாகவும் அதற்கு விடை சொல்ல வேண்டும். இதில் வரும் சந்தேகம் மிக மோசமான விளைவுகளை கொடுக்கும்.
உங்கள் நண்பர்கள், சொந்தங்கள் என இருவருக்கும் தனித்தனி அலுவல்கள், பொழுது போக்குகள் இருந்தாலும் இருவரும் சேர்ந்து செய்யும் ஒரு பொழுது போகாவது இருக்க வேண்டும். இருவரும் சேர்ந்து வாரம் ஒரு முறையாவது நேரம் செலவழிக்க வேண்டும். இந்திய முறைகளில் சினிமா சிறந்த வாய்ப்புன்னு சொல்வேன்...!
இதெல்லாம் முன்னாடியே யோசிச்சு செயல்படுறது அந்த 7 years itchக்கு தீர்வாக இருக்கும். 7 வருடம் தாண்டி ஒரு உறவு நிலைக்கும் போது அது தன்னோட இன்பங்களை துறந்து துன்பங்களை சகித்து உணர்வுகளால் ஒன்றிணைய துவங்குகிறதுன்னு அர்த்தம். இது உறவுகளில் ஒரு முக்கிய கால கட்டம். ஒருவரை ஒருவர் பாராட்டுவது, நன்றி தெரிவிப்பது, ஆரோக்கியமான மோதல், நம்மை புதுப்பித்து கொள்றது, ஆகியவை உறவினை காப்பாற்றும் மிக முக்கியமான சின்னப்புள்ள தனங்கள்.
இந்த சின்னத்தனங்களால் நம்ம உறவு முறைகளில் என்னிக்கும் ஆரம்பத்திலுள்ள அந்த காதல் தீப்பொறி அணையாமல் பார்த்துக்கலாம். இன்னிக்கு புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கும் காதலிப்பவங்களுக்கும் நமக்கு, நம்மோட துணையை பிடிக்காமல் போகும் என்பதை நம்புறதுக்கு கூட கஷ்டமா இருக்கும். ஆனால் நம்புங்கள் எல்லா உறவும் சலிப்பையும் வெறுப்பையும் வெகு விரைவில் அடையும். அவற்றை நம் அன்பால் அக்கறையால், பாராட்டால், விட்டுக் கொடுப்பதால் கவனமாக துடைத்தெடுப்போம். அன்பு மட்டுமே வெல்லும்...
No comments:
Post a Comment