சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில், நகைகளை பதுக்கி வைத்திருந்த, அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி கொள்ளைக்கு, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரே துணை போனது, தமிழக காவல் துறைக்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.
'ஒரு கான்ஸ்டபிள் தவறு செய்தாலும், அது அரசையே பாதிக்கும்' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னது சரியாகி விட்டது. வங்கியில் கொள்ளை அடித்தவர்கள், நகைகளை பதுக்கி வைக்க தன் இல்லத்தில் இடம் கொடுத்த இன்ஸ்பெக்டர், கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை மட்டும், தானாக வலிய வந்து ஒப்படைத்த போது வகையாக மாட்டியுள்ளார்.கொள்ளை அடித்தவரின் மனைவியும், இன்ஸ்பெக்டரின் மனைவியும் உறவினர்கள் என்பதால், இந்தக் கூட்டுக் கொள்ளைக்கு இன்ஸ்பெக்டர் துணை போனது, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரியவந்துள்ளது. 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்றார் புத்தர். மனைவியின் நகை ஆசைக்கு துணை போனதால், இன்ஸ்பெக்டர் இன்று கைதாகி, அவமானத்தில் கூனிக் குறுகி
நிற்கிறார்; துறை ரீதியான நடவடிக்கைகளில், 'சஸ்பெண்ட்'டும் ஆகியுள்ளார். காவலர்களே கள்வர்களாக மாறும் போது, இந்த நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளைகளை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? வேலியே பயிரை மேய்ந்த கதையாகத் தானே முடியும்? இதற்கு முன்னாலும், எத்தனையோ திருட்டு வழக்கில், காவலர்கள் சிக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் விஷயத்திலும், போலீஸ் அதிகாரிகள் பலர் முன்னணியில் உள்ளனர். பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மாட்டிய போலீஸ் உயர் அதிகாரி, கோர்ட்டில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு, விசாரணைகளை சந்தித்து வரும் அவலத்தை பார்த்து வருகிறோம் அல்லவா...!
சமீபத்திய சில ஆண்டுகளில், போலீஸ் துறையில் இது போன்ற அசிங்கங்கள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்களே, சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்வது தொடர்கிறது. குற்றமே செய்யாதவர்கள், போலீஸ் ஸ்டேஷன், 'லாக் அப்'பில் காவலர் களின் டார்ச்சர், கொடுமை தாங்காமல், பரலோகம் போவதும் அவ்வப்போது நிகழ்கிறது.
இவற்றுக்கெல்லாம், போலீஸ் துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளே காரணம். அந்த கறுப்பு ஆடுகளுக்கு கடும் தண்டனையை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில், பொறுக்கிகள் நிறைந்த துறையாக போலீஸ் துறை மாறி விடும்.
No comments:
Post a Comment