'இலவசங்கள் தொடர்பாக, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியது முறையல்ல' என, உச்ச நீதிமன்றம் சூடு வைத்துள்ள நிலையில், நீதிமன்ற கருத்துக்கு பதிலடியாக, 'டுவிட்டர்' பக்கத்தில், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் சர்ச்சை பதிவு வெளியிட்டு உள்ளார். இதையடுத்து, இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
அதிகாரம்
இலவச திட்டங்கள் தொடர்பாக, ஆங்கில ஊடகம் ஒன்று நடத்திய விவாதத்தில், அமைச்சர் தியாகராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, 'அரசியலமைப்பு சட்டத்தில், உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல; எந்த நீதிமன்றத்திற்கும் எப்படி மக்களின் பணம் செலவிடப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இல்லை.
'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சட்டசபைகளுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது' என, பதிலளித்து இருந்தார். அவரது கருத்து, நீதித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கண்டனம் தெரிவிக்கும் விதமாக, 'இலவசங்கள் தொடர்பாக, தி.மு.க., அமைச்சர் பேசியது முறையல்ல' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
கூறியிருந்தார்.
சவால்
இதற்கிடையில், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், தன் டுவிட்டர் பக்கத்தில், 'தி.மு.க., மட்டும் தான் மிகவும் புத்திசாலித்தனமான, சாதுர்யமான கட்சியா? தலைமை நீதிபதி காட்டம்' என வெளியான செய்திக்கு பதிலாக, 'ஆட்சி வாயிலாக இதை சாதித்து, தரவுகள் வாயிலாக நிரூபித்து காட்டிய கட்சி, தி.மு.க., மட்டுமே' என பதிவிட்டுள்ளார்.
மேலும், 'முடிஞ்சா தொட்டு பார்' என்றும் சவால் விட்டுள்ளார்.சக எம்.பி.,க்களுடன் மோதல், ஹிந்துக்கள் பூஜைக்கு எதிர்ப்பு என தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் செந்தில்குமாரின் இந்த பதிவு, நீதித் துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.'சட்ட நடவடிக்கை ஒரு புறம் நடந்தாலும், இப்படி திமிர்த்தனமான பேச்சுகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் செய்யும் கட்சியினரை, தலைவர் ஸ்டாலின்
கண்டிக்காவிட்டால், கட்சியின் நம்பகத்தன்மை பறிபோகும்' என, தி.மு.க.,வினர் கவலை தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment