வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை, ௧,௦௦௦ ரூபாயை தாண்டியிருந்தாலும், தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. அந்த சிலிண்டரை வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் நபர்களுக்கு, 'டிப்ஸ்' எதுவும் கொடுக்க வேண்டாம் என, பில்லில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், சிலிண்டரை கொண்டு வரும் நபர்களோ, தங்களுக்கு, ௩௦ முதல், ௫௦ ரூபாய் வரை, 'டிப்ஸ்' ஆக தரவேண்டும் என்கின்றனர்; அது, கட்டாயம் என்றும் கூறுகின்றனர். 'டிப்ஸ்' எதுவும் தரத் தேவையில்லை என, பில்லில் தெரிவிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டால், காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் நிறுவனங்கள், தங்களுக்கு சம்பளம் எதுவும் தருவதில்லை. அதனால், காஸ் வாங்குவோர் தரும், 'டிப்ஸ்' தான் தங்களுக்கு சம்பளம் என்று சொல்கின்றனர். இது, உண்மையா என்பது தெரியவில்லை.இந்த விஷயத்தில், காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் ஏஜன்சிகளை, சம்பந்தப்பட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சரியாக கண்காணிப்பதில்லை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு காஸ் ஏஜன்சியும், எத்தனை பேரை சிலிண்டர் வினியோகிக்கும் வேலைக்கு வைத்திருக்கின்றன. அவர்களுக்கு வழங்கும் ஊதியம் எவ்வளவு என்பதை கண்காணிக்க வேண்டும். இதுதொடர்பான ரிக்கார்டு களை பராமரிக்கும்படி
உத்தரவிட வேண்டும். ஊழியர்களுக்கு ஏஜன்சிகள் சம்பளம் வழங்குகின்றனவா என்பதை அவர்களிடமே கேட்டும் அறிய வேண்டும். அவர்களுக்கு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த விஷயத்தில், ஒரு தெளிவான நடைமுறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்ற முன்வர வேண்டும். பில்லில் மட்டும், 'டிப்ஸ்' கொடுக்க வேண்டாம் என அச்சிட்டு, அதற்கு மாறாக நடப்பது சரியல்ல. இதுவும், ஒரு வகையில் ஊழலை
ஊக்கப்படுத்தும் செயலே!
No comments:
Post a Comment