காங்கிரஸ் கட்சியில், 50 ஆண்டுகளாக அங்கம் வகித்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், 73, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நேற்று விலகினார். காங்., இடைக்கால தலைவர் சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள ஐந்து பக்க கடிதத்தில், நாட்டின் மாபெரும் கட்சியான காங்கிரஸ் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்றும், இந்த சீரழிவிற்கு அவரது மகன் ராகுல் தான் முழு பொறுப்பு என்றும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
உட்கட்சி தேர்தல் என்ற போலியான அறிவிப்பின் வாயிலாக, கட்சி தலைமை மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த பின், அக்கட்சி வீழ்ச்சி அடையத் துவங்கியது. ராகுல் தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை எதிர்கொண்ட போது, அக்கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
தலைமை மீது அதிருப்தி
இதைத் தொடர்ந்து அதலபாதாளத்தை நோக்கி சரியத் துவங்கியது. தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய ராகுல், மீண்டும் அந்த பொறுப்பை ஏற்க இப்போது வரை மறுத்து வருகிறார். கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா தொடர்கிறார். இந்நிலையில், தேசிய அளவில் உட்கட்சி தேர்தல்களை நடத்தி, தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை நியமிக்க காங்., ஆயத்தமாகி வருகிறது.
இதற்கிடையே, கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த மூத்த தலைவர்கள் 23 பேர், கடும் விமர்சனங்களை முன்வைக்க துவங்கினர். 'ஜி - 23' என்றழைக்கப்படும் இந்த அதிருப்தி குழுவினர் அவ்வப்போது கூடி, தனியாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த குழுவில் இடம் பெற்ற மூத்த காங்., தலைவர்கள் கபில் சிபல், அஸ்வனி குமார் ஆகியோர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினர். இந்நிலையில், கடந்த 1973 முதல் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்து வரும் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர், லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
ஐந்து பக்க ராஜினாமா
அதிருப்தி தலைவர்கள் குழுவில் அங்கம் வகித்து வரும் இவரை, ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக சோனியா சமீபத்தில் நியமித்தார். இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே, அந்த பதவியில் இருந்து விலகுவதாக குலாம் நபி அறிவித்தார். இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, குலாம் நபி ஆசாத் நேற்று அறிவித்தார். இது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தை, இடைக்கால தலைவர் சோனியாவுக்கு அவர் அனுப்பி வைத்தார். அதன் விபரம்:சோனியா மற்றும் ராகுல் தலைமையில் கடந்த 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களை சந்தித்த காங்கிரஸ் எனும் மாபெரும் இயக்கம், மிகவும் அவமானகரமான தோல்வியை சந்தித்தது; நான்கு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியை பிடித்தது. ஆறு மாநிலங்களில் கூட்டணியில் இடம் பெற்றது. ஆனால் இன்றோ, இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மேலும் இரண்டு மாநிலங்களில் மிக சொற்பமான எண்ணிகையுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின், கட்சி பலவீனமடைய துவங்கியது. ஆத்திரமடைந்த ராகுல், கட்சித் தலைவர் பதவியை உதறினார்.
இடைக்கால தலைவர்
ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக உயிரைக் கொடுத்து உழைத்த தலைவர்களை அவமானப்படுத்தினார். அதன் பின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்ற நீங்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த பதவியில் உள்ளீர்கள்.நீங்கள் பெயருக்குத் தான் தலைவராக பதவி வகிக்கிறீர்கள். கட்சியின் அத்தனை முக்கிய முடிவுகளையும் ராகுல் தான் எடுக்கிறார். சில நேரங்களில் அவரது உதவியாளர்கள், பாதுகாவலர்கள் கூட கட்சி குறித்து முடிவெடுக்கும் அவலமும் அரங்கேறுகிறது. கடந்த 2013 ஜனவரியில் கட்சியின் துணைத் தலைவராக ராகுலை நீங்கள் நியமித்த பின் தான், இந்த வீழ்ச்சி துவங்கியது. கலந்து ஆலோசித்து எந்த முடிவையும் எடுக்கும் கட்சியின் நடைமுறையை அவர் ஒழித்தார். அனுபவமுள்ள மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். தலைமையை அண்டிப்பிழைக்கும் அனுபவமற்ற கும்பல், கட்சியை கையில் எடுத்துக் கொண்டது.இதன் பலனாக, தேசிய அளவில் பா.ஜ.,வும், மாநில அளவில் பிராந்திய கட்சிகளும், காங்கிரசின் இடத்தை பிடித்துக் கொண்டன.
கடந்த எட்டு ஆண்டுகளில் கட்சி குறித்து தீவிர சிந்தனை இல்லாத நபரை தலைவர் பதவியில் அமர்த்த முயற்சித்தது தான், இந்த சீரழிவிற்கு காரணம்.உட்கட்சி தேர்தல் அறிவிப்புகள் அனைத்துமே கேலிக்கூத்தானது, போலியானது. டில்லியின், 24, அக்பர் சாலையில் அமர்ந்து கட்சியை நடத்தும் கும்பல் தேர்ந்தெடுக்கும் நபர்களை நியமிப்பதை தவிர, கட்சித் தலைவர்களுக்கு வேறு வழியில்லை.
இப்படி தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பொம்மைகளாக மட்டுமே செயல்பட முடியும்.கட்சி இந்த கும்பலின் கட்டுப்பாட்டில் இருப்பதால், நாட்டுக்கு சரியானதை பெற்றுத் தருவதை நோக்கி போராடும் தெம்பையும், உறுதியையும் அது இழந்துவிட்டது. உட்கட்சி தேர்தல் என்ற பெயரில் கட்சி தலைமை மோசடி செய்து வருகிறது.எனவே, காங்கிரஸ் கட்சியுடனான என் அரை நுாற்றாண்டு உறவை துண்டித்துக் கொள்ளும் முடிவை மிக கனத்த இதயத்துடனும், வருத்தத்துடனும் எடுத்துள்ளேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'மோடி மீதான அன்பின் விளைவு!'
காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா கூறியதாவது:ராஜ்யசபா உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்தது முதலே குலாம் நபி பதற்றத்தில் உள்ளார். பதவி இன்றி அவரால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை. கட்சியை வலுப்படுத்த ராகுல் தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இப்படியொரு முடிவை குலாம் நபி எடுத்துள்ளார். அவரது துரோகத்தை காங்., தொண்டர்கள் அறிவர். பிரதமர் மோடிக்கும், குலாம் நபிக்கும் உள்ள நெருக்கத்தை பார்லி.,யில் கண்டோம். அது தான் அவரது கடிதத்தில் எதிரொலித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
'உண்மை முகம் வெளிப்பட்டது!'
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:குலாம் நபிக்காக பிரதமர் மோடி பார்லி மென்டில் கண்ணீர் வடித்தார்; பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது; அரசு பங்களா நீட்டிக்கப்பட்டது; இவை அனைத்தும் எதேச்சையானது அல்ல. எல்லாம் திட்டமிட்டே நடந்துள்ளது. அவரது மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கட்சிக்குள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்ட மூத்த தலைவர், ராகுல் மீதான தன் தனிப்பட்ட விரோதத்தை கடிதத்தில் காட்டியுள்ளார். இதன் வாயிலாக அவரது உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. அவரது குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீரில் புதிய கட்சியை துவங்கவுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் காங்.,கைச் சேர்ந்த ஐந்து தலைவர்கள் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜம்மு - காஷ்மீருக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது. அப்போது மாநில கட்சிகளுடனோ அல்லது பா.ஜ., உடனோ கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:குலாம் நபிக்காக பிரதமர் மோடி பார்லி மென்டில் கண்ணீர் வடித்தார்; பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது; அரசு பங்களா நீட்டிக்கப்பட்டது; இவை அனைத்தும் எதேச்சையானது அல்ல. எல்லாம் திட்டமிட்டே நடந்துள்ளது. அவரது மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கட்சிக்குள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்ட மூத்த தலைவர், ராகுல் மீதான தன் தனிப்பட்ட விரோதத்தை கடிதத்தில் காட்டியுள்ளார். இதன் வாயிலாக அவரது உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. அவரது குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா கூறியதாவது:ராஜ்யசபா உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்தது முதலே குலாம் நபி பதற்றத்தில் உள்ளார். பதவி இன்றி அவரால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை. கட்சியை வலுப்படுத்த ராகுல் தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இப்படியொரு முடிவை குலாம் நபி எடுத்துள்ளார். அவரது துரோகத்தை காங்., தொண்டர்கள் அறிவர். பிரதமர் மோடிக்கும், குலாம் நபிக்கும் உள்ள நெருக்கத்தை பார்லி.,யில் கண்டோம். அது தான் அவரது கடிதத்தில் எதிரொலித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment