'இலவசங்களே வேண்டாம் என்று, 'அட்வைஸ்' செய்ய நினைப்பவர்கள், சிறந்த பொருளாதார நிபுணர்களாக இருக்க வேண்டும்; பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
'குறைந்தபட்சம் நோபல் பரிசாவது வாங்கி இருக்க வேண்டும்' என, ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்திருக்கிறார், அமெரிக்க நாட்டில் பொருளாதாரம் படித்து, இரண்டு டிகிரிகள் வாங்கிய தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன்.இந்த நாட்டை, பட்டதாரிகள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என அரசியல் சட்டம் இயற்றியிருந்தால், காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் முதல்வராகி இருக்கவே முடியாது.
சாதாரண பியூன் வேலைக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது; அரசியல்வாதிகளுக்கு, அப்படி எந்த தகுதியும் தேவையில்லை.அரசு ஊழியர்கள், 60 வயதுக்கு மேல் அரசு பணியில் நீடிக்க முடியாது. ஆனால், 70, 80 வயதானவர்களும், இந்த நாட்டின் ஜனாதிபதியாக, பிரதமராக, முதல்வராக பதவி வகிக்க முடியும்.
அரசு ஊழியராக வேண்டும் எனில், அவர்கள் மீது எந்த கிரிமினல் வழக்கும் இருக்கக்கூடாது. ஆனால், இன்று எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களாக பதவி வகிக்கும் பலர் மீது, கிரிமினல் வழக்குகள் நிறையவே இருக்கின்றன.
இதெல்லாம் சரி தான், நியாயமானது தான் என்று அமைச்சர் தியாகராஜன் சொல்வாரா? எத்தனையோ விஞ்ஞான கண்டுபிடிப்புகளை, இந்த உலகுக்கு அளித்த தாமஸ் ஆல்வா எடிசன் படிக்காதவர். படித்து பட்டம் பெற்று நோபல் பரிசு பெற்ற, சர்.சி.வி.ராமன் விஞ்ஞானியாக இருந்ததில் வியப்பில்லை. படிப்பறிவே இல்லாத ஜி.டி.நாயுடு, விஞ்ஞானியாக இருந்தார் என்பதே சிறப்பு.
முகமது பின் துக்ளக் என்ற மன்னன் படித்திருந்தும் நிர்வாக திறமையின்றி, படித்த முட்டாள் என்று பெயர் எடுத்தான். ஏட்டறிவை விட அனுபவ அறிவு தான் சிறந்தது. அதனால், நாடும், நாட்டு மக்களும் உருப்பட, ஒருவர் நல்ல யோசனை சொன்னால், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து, விதண்டா வாதமும், தற்பெருமையும் பேசினால், மெத்தப் படித்தவனுக்கு புத்தி கெட்டுப் போன கதையாகத் தான் முடியும். எவரும் அந்த நபரை ஏறிட்டு பார்க்க மாட்டார்கள்; சீண்ட மாட்டார்கள். இதையெல்லாம், படித்த மேதாவியான நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment