'நடிகர் அர்ஜுன் நடித்த ஜென்டில் மேன் படத்தில், வங்கியில் திருடும் காட்சியைப் பார்த்து, பெடரல் வங்கியில் கொள்ளை அடித்தோம்' என, சென்னையில் நடந்த கொள்ளை தொடர்பான வழக்கில் கைதான, முருகன் என்பவர் போலீசாரிடம் கூறிஉள்ளார்.
இதனால், ஜென்டில்மேன் படத்தை தயாரித்தவர், கதாசிரியர், இயக்கியவர் மற்றும் நடித்தவர் என, அனைவருக்கும் பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. சினிமாவில் நல்ல விஷயங்களை காட்டாமல், நல்ல கருத்துகளை தெரிவிக்காமல், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற தவறான விஷயங்களையே காட்டியதன் விளைவு தான், இது என்று நம்பலாம்.
சில ஆண்டுகளாக, வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், காம உணர்வை துாண்டும் பாடல் வரிகள், சினிமா பார்ப்பவர்களின் மனதை கெடுக்கும் சூழ்நிலையை, திரைப்படங்கள் உருவாக்கி வருகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குடும்பத்தோடு பார்க்கும் வகையிலும், சமூக சிந்தனையை துாண்டும் வகையிலும், ஆபாசம், வன்முறை காட்சிகள் இன்றியும், விருதுகள் பெறும் வகையிலான தரமான படங்கள் ஒன்றிரண்டே வெளியாகின்றன.
இது போன்ற நல்ல படங்கள் அதிகம் வரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. அதனால், திரைப்படம் தயாரிப்பவர்களும், இயக்குபவர்களும், லாப நோக்கத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் படங்களை தயாரிக்க முன்வர வேண்டும். சமூகத்திலும், இளைஞர்கள் மத்தியிலும் நல்ல மாற்றங்களை உருவாக்கக் கூடிய படங்களை, அதிக அளவில் தயாரித்து வெளியிட வேண்டும். திரைப்படங்கள் தவறான வழிகாட்டலை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது என்பதே, சமூக நலனில் அக்கறையுள்ளவர்களின் எதிர்பார்ப்பு!
No comments:
Post a Comment