வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே, மதுபானக் கடைகள் இருக்கக் கூடாது என்ற விதி இருந்தாலும், அவற்றை மீறி பல இடங்களில் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை அகற்ற வலியுறுத்தி, அவ்வப்போது பொதுமக்கள் போராட்டம் நடத்துவது தொடர்பான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், 'பள்ளிகள் அருகே இயங்கும், 'டாஸ்மாக்' மதுபானக் கடைகள் அகற்றப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது, பெற்றோர் மற்றும் தாய்மார்கள் நெஞ்சில் பால் வார்த்தது போல உள்ளது. அது மட்டுமின்றி, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பள்ளி மாணவர்களை துாய்மைப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.அனைத்து பள்ளிகளிலும், எதிர்வரும் மழைக்காலத்தை கவனத்தில் கொண்டு, கட்டட பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 'பள்ளிகளில் உள்ள மரங்களில் இருந்து இலைகள் உதிர்ந்து, கட்டடங்களின் மேற்கூரையில் குப்பை சேர்ந்து, மழையின் போது நீர் தேங்கி கனமாகி, கட்டட உறுதிக்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக மாற வாய்ப்புள்ளதால், மழை நீர் தேங்காதபடி குப்பை கழிவுகளை அகற்றி, தங்கு தடையின்றி தண்ணீர் வெளியேற வழி வகை செய்ய வேண்டும்.
இந்தப் பணிகளை கண்டிப்பாக, பள்ளி மாணவர்கள் வாயிலாக செய்யக்கூடாது' என, தெரிவிக்கப் பட்டு உள்ளது. இதுவும், மகிழ்ச்சி தரும் செய்தியே. இந்த இரு அறிவிப்புகளையும், காலம் கடத்தாமல் விரைவில் செயல்படுத்தினால், அமைச்சர் மகேஷை நிச்சயம் பொதுமக்கள் பாராட்டுவர் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment