அ.தி.மு.க., தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, சிறப்பு அமர்வு ஏற்படுத்தக் கோரி, பதிவுத் துறையில் மனு அளித்த விவகாரத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 'தலைமை நீதிபதிக்கு கடிதம் அளிப்பது தான் உங்கள் வேலையா? தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா?' எனவும், உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞரும், அ.தி.மு.க., உறுப்பினருமான பி.ராம்குமார் ஆதித்தன், மற்றொரு அ.தி.மு.க., உறுப்பினரான சுரேன் பழனிசாமி ஆகியோர் சேர்ந்து, உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணை
கடந்த 2017 செப்டம்பர் 12ல் பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள்; 2021 டிசம்பர் 1ல் கட்சி விதிகளில் செய்த திருத்தங்கள்; டிசம்பர் 6ல் நடந்த ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்; உள்கட்சி தேர்தல் மற்றும் 2022 ஜூன் 23ல் பொதுக்குழு தீர்மானங்கள் ஆகியவை செல்லாது என அறிவிக்கக் கோரி, இவ்வழக்கை தொடர்ந்திருந்தனர்.
இந்த இருவர் தாக்கல் செய்த வழக்கும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தங்கள் தரப்பில் தொடரப்பட்ட சிவில் வழக்கு மற்றும் ஜூன், ஜூலையில் நடந்த பொதுக்குழுவை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், உள்கட்சி தேர்தல்களை எதிர்த்தும் சிலர் தொடர்ந்த வழக்குகளையும் விசாரிக்க, சிறப்பு அமர்வு ஏற்படுத்தக் கோரி, உயர் நீதிமன்ற பதிவாளரிடம், இருவர் சார்பிலும் வழக்கறிஞர் மனு
கொடுத்தார்.
ஏற்கனவே, இரு வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்தி, இம்மாதம் 17ம் தேதி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தொடர்ந்திருந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இருவர் சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர், அ.தி.மு.க., தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, சிறப்பு அமர்வு அமைக்கக் கோரி, பதிவாளருக்கு மனு கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.
இதற்கு, நீதிபதி கடும் ஆட்சேபனை தெரிவித்தார். 'வழக்கு தொடரப்பட்டு, ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தலைமை நீதிபதிக்கு மனு கொடுப்பது தான் உங்கள் வேலையா? தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா?' என, நீதிபதி கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்குகளின் விசாரணையை, செப்டம்பர் 9க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
கண்டனம்
கடந்த மாதம் 11ம் தேதி நடந்த பொதுக்குழுக்கு தடை கோரிய வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இதே நீதிபதி முன் தான், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதை அடுத்து, வேறு நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து, இந்த வழக்குகளை விசாரிக்க, நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு, இம்மாதம் 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் மேலும் இது போன்று வேறு நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்றக் கோரி, அ.தி.மு.க.,விலிருந்து மனு வந்ததும், நீதிபதி கடுப்பாகி, கண்டனம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment