காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் துணையோடு, குற்றவாளிகள் சிறையிலிருந்து வெளியே வந்து, குற்ற சம்பவங்களை அரங்கேற்றி விட்டு மீண்டும் சிறைக்கு செல்வதை, சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் பார்த்திருப்போம். தற்போது, அது போன்ற காட்சியை, கர்நாடக மாநிலம் பல்லாரி காவல் நிலைய போலீசார் ஐந்து பேர் அரங்கேற்றி, அக மகிழ்ந்துள்ளனர்.கொலை வழக்கில், ௨௦ ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பச்சாகான் என்ற கைதியை, மற்றொரு கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, பல்லாரி சிறையிலிருந்து தார்வாட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், மீண்டும் அவனை சிறையில் அடைக்காமல், லாட்ஜில் காதலியுடன் தங்க அனுமதித்துள்ளனர்.
அது மட்டுமின்றி, ஹோட்டல் பணியாளர்களால், பச்சாகான் மற்றும் அவனது காதலியின் ஏகாந்தத்திற்கு, எந்த விதமான இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அறைக்கு வெளியே ஐந்து போலீசாரும் காவல் காத்துள்ளனர். யார் போட்டுக் கொடுத்தனரோ தெரியவில்லை... பச்சா கானும், அவனது காதலியும், லாட்ஜில் உல்லாசமாக இருக்கும் சமாசாரம், தார்வாட் நகர போலீஸ் கமிஷனருக்கு எட்டியுள்ளது. உடன் அந்த கமிஷனர், அருகிலுள்ள காவல் நிலைய போலீசாரை உஷார்படுத்த, அவர்கள் ஹோட்டலுக்கு சென்று, பச்சா கானையும், போலீசாரையும் கைது செய்திருக்கின்றனர்; அவனது காதலியையும், விசாரணை வளையத்திற்குள்வைத்திருக்கின்றனர். 'என்னய்யா இது அக்கிரமம்... மதச்சார்பின்மை பேணும் ஒரு நாட்டில், ஒரு குற்றவாளிக்கு, அவனது காதலியுடன் சந்தோஷமாக இருக்கக் கூட உரிமை இல்லையா? அதனால் தானே, அவனை உள்ளே அனுப்பி, நாங்கள் வெளியே காவலுக்கு நிற்கிறோம்' என, 'மாமா' வேலை பார்த்து, காவலுக்கு நின்ற போலீசார் கதறிப் பார்த்திருக்கின்றனர்; ஆனாலும், பலன் இல்லை.
கர்நாடக மாநில பல்லாரி நகர போலீசார், கொலை குற்றவாளியின் ஆசைக்கு அடிபணிந்து, தலை வணங்கி, காட்டியிருக்கும் அந்த 'அபா(யக)ரமான விசுவாசம்' நம்மை அதிர வைக்கிறது; உள்ளத்தை உறைய வைக்கிறது. குற்ற வாளிகள் காட்டும் பணத்தாசைக்கு, போலீசார் எந்த அளவுக்கு சோரம் போகின்றனர் என்பதற்கு, இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது.
No comments:
Post a Comment