விநாயகர் சதுர்த் திக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்ற தங்களின் ஆதங்கத்தை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்தனர். ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு நல்ல மனம் வேண்டும்.
ஈ.வெ.ரா.,வை தலைவராக ஏற்றுள்ளதுடன், இந்த மண்ணை ஈ.வெ.ரா., மண் என்றும் கூறி வருவோருக்கு, எப்படி ஹிந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மனம் வரும்? விநாயகர் சிலையை சாலையில் போட்டு உடைத்தவர் அல்லவா ஈ.வெ.ரா., அவரின் கொள்கையை பின்பற்றும் முதல்வருக்கு எப்படி வாழ்த்த மனம் வரும்?
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்... வாழ்த்து என்பது, அவரவர் இதயத்தின் அடித்தளத்திலிருந்து ஆத்மார்த்தமாக வர வேண்டும். வாழ்த்தானது, தானாக உள்ளத்தில் இருந்து வர வேண்டுமே அன்றி, ஒரு போதும் நாம் கேட்டு பெற வேண்டியதாக இருத்தல் கூடாது; அப்படி கேட்டு பெறுவது யாசகம்.
விநாயகர் சதுர்த்தி என்பது, உலகத்தில் எங்கெல்லாம் ஹிந்துக்கள் இருக்கின்றனரோ, அங்கெல்லாம் எந்தவிதமான பாகுபாடும் இன்றி கொண்டாடப்படும் ஒரு முக்கிய பெரு விழா. கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்கள், விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றதுடன், விழாவின் பாரம்பரியத்தை கேட்டறிந்து, வழிபட்டு சென்றுள்ளனர்.
சிதம்பரத்தை அடுத்த குமராட்சியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை, இஸ்லாமியர் ஒருவர் கொடியசைத்து துவக்கி வைத்து, மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தன், 60வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஆயுஷ் ஹோமம் நடத்தி வழிபட்டுள்ளார். கோவிலை விட்டு வெளியே வந்ததும், தன் நெற்றியில் இருந்த விபூதி, சந்தனத்தை அழித்து விட்டு, தொண்டர் களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
கடவுள் மறுப்பு பேசும் முதல்வர் ஸ்டாலினோ, திருத்தணியில் தனக்கு வழங்கப்பட்ட முருகனின் வேலை, வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்துள்ளார். ஹிந்துக்களே... இப்படி வேஷம் போடுவோரை எல்லாம், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று கேட்பதை தவிருங்கள். நாமென்ன வாழ்த்துக்கு ஏங்குபவர்களா... ஒவ்வொரு ஹிந்துவும் தன்மானத்தோடு இருக்க வேண்டும். நம்மை மதியாத நபர்களை, நாமும் புறந்தள்ள வேண்டும்.
No comments:
Post a Comment