Saturday, September 3, 2022

நான் காணும் அரசியல்..!

 தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயம் என்று நாம் எடுத்துக் கொண்டால் அரசியல் ரீதியாக பட்டியலின மக்கள், அடுத்து வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர் எனக் கணக்கிடலாம். பட்டியலின மக்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள். ஆனால் எல்லா தொகுதிகளிலும் அவர்கள் பெரும்பான்மையாக இல்லை. ஆனால் தமிழகத்தில் அவர்கள் தான் அதிகம். வன்னியர் என்றால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி எனக் கணக்கிடலாம். கவுண்டர் என்றால் கரூர், ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர், சேலம் என்று சொல்லலாம். முக்குலத்தோர் என்றால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி எனக் கணக்கிடலாம். இங்கெல்லாம் இவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் இங்கு வெற்றி பெற முடியும் அல்லது இவர்கள் துணை இருந்தால் மட்டுமே மற்ற சமூக வேட்பாளர் வெற்றிக்கனியை சுவைக்க முடியும்.

ஆரம்ப காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசித்த மக்கள் இன்று தொழில் ரீதியாக எல்லா இடங்களுக்கும் இடம்பெற ஆரம்பித்து விட்டார்கள். எனவே எல்லா இடங்களிலும் எல்லா சமூகமும் இடம்பெற்று இருக்கின்றன. ஆனால் குறைந்த அளவே இடம் பெற்றிருக்கின்றன. ஒரு ஓட்டில் பெற்றாலும் அது வெற்றி தான் என்பதை அரசியல்வாதிகள் உணர்வதுதான் நலம். இரண்டு பலம் வாய்ந்த கட்சிகள் போட்டி போடும் போது ஒரே சமுதாயத்தினர் தான் இரண்டு கட்சியிலும் தேர்தலில் நிற்பார்கள். அப்போது அவர்கள் சம அளவில் ஓட்டை பிரித்தால் வெற்றி வாய்ப்பு பட்டியலின மக்கள், மைனாரிட்டி சமூகம் ஆதரிக்கும் வேட்பாளரைத்தான் சென்றடையும். எனவே தமிழகத்தை பொறுத்தவரை ஒரு சமூகத்தை விட்டுவிட்டு ஆட்சியை எளிதில் பிடித்து விடலாம் என்பது சாதுர்யம் இல்லாத கணக்கு. எல்லோரையும் அரவணைத்துச் சென்றால்தான் ஆட்சியை சுலபமாக பிடிக்க முடியும். மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் எல்லோரையும் அரவணைத்துச் செல்வார். அப்படி சென்றால்தான் அவரால் கூட தேர்தலில் வெற்றி பெற முடியும். அதையே மக்கள் விரும்புகிறார்கள்.
பெரும்பான்மை சமுதாயம் இருக்கும் இடங்களில் சிறுபான்மை சமுதாயங்கள் நசுக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. பெரும்பான்மை சமுதாயங்கள் அதிகாரத்தை கையில் எடுக்கும் போது அது சிறுபான்மை சமுதாயங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே, தமிழகத்தை பொறுத்தவரை கட்சியினுடைய தலைவர்கள் மைனாரிட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால்தான் அவர்கள் கட்சியை சிறப்பாக வழிநடத்தினார்கள் என்பது வரலாறு நமக்கு கற்றுத் தந்த பாடம். முந்தைய தலைவர்கள் எந்த சமூகம் என்று பட்டியலிட்டு பாருங்கள் உங்களுக்கே அது புரியும்.
பெரும்பான்மை சமுதாயங்கள் கட்சியை வழிநடத்த நினைக்கும் போது சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவருக்கு முதல்வர் பதவியை தருவது வெற்றிக்கான வழி. அதே நேரத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் தலைவர் என்றால் ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை. அதே நேரத்தில் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த கட்சியின் தலைவர் பெரும்பான்மை சமுதாயத்திற்கு முதலமைச்சர் பதவியை அளிக்கலாம் என்பது புரட்சித்தலைவி ஏற்படுத்திய அசாத்திய வரலாறு. அதில் எந்த அச்சுறுத்தலும் சிறுபான்மை சமூகத்திற்கு எழாது. ஏனென்றால் கட்சியினுடைய தலைவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்று மக்கள் நினைத்தார்கள். எனவே தலைவர்கள் தங்களுக்கு பணமும் இருக்கிறது, செல்வாக்கும் இருக்கிறது என்று தப்பு கணக்கு போட்டு ஒருவரை புறம் தள்ளினால் அது உங்களை படுகுழியில் தள்ளும் என்பதே உண்மை..! இப்போதெல்லாம் யாரும் யாருக்கும் விசுவாசமாக இல்லை. ஆனால் நமக்கு விசுவாசமானவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தால் அதைவிட கேலியானது வேறொன்றுமில்லை. எந்த குதிரை ஜெயிக்குமோ அந்த குதிரையில் ஏறுவதற்கு தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த குதிரை ஜெயிக்கப் போகிறது என்பது புரியவில்லை அவ்வளவுதான். புரியும் போது அவர்கள் யார் பின்னால் இருப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
உண்மையில் தொண்டர்கள் மட்டுமே கட்சியின் நலத்தை விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் பதவியை எதிர்பார்ப்பதில்லை, கட்சி வலிமையாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். எனவே எந்த ஒரு கட்சியும் தொண்டர்களுடைய நாடியை பிடித்து அரசியல் செய்வதே பலம்.
இது உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ இதுவே வெற்றிக்கான அரசியல் விளையாட்டு..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...