Saturday, September 3, 2022

"சரி சொன்னா கேட்கவா போற, வாங்கு"

 அப்பாவும் அண்ணாவும் ஒரு முறை வெளியூரில், ஒரு பொதுக் கூட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கிறது. இவர்கள் சென்ற கார் அந்த இடத்தில் நிற்கிறது. அப்போது ஒரு மூதாட்டி வேர்கடலை விற்றுக் கொண்டு வருகிறார்.

அப்பாவுக்கு ஒரு பழக்கம் உண்டு. எங்காவது கார் நின்றால் அங்கு விற்கப்படும் பொருட்களை வாங்கி விடுவார். ஒன்று சாப்பிட வேண்டும் என்ற ஆசை. இரண்டு தேவைக்கு மேல் நான்கு மடங்கு வாங்குவார் .
அம்மா கேட்டால், "இது அவர்களுக்கு பிழைப்பு, பாவம்" என்பார். போகின்ற இடத்தில் அதை அப்படியே அங்கு இருப்பவர்களுக்கு தந்துவிடுவார்.
இங்கே அந்த மூதாட்டி வேர்கடலை நிற்பதைப் பார்த்து, அண்ணாவிடம், "அண்ணா நிலக்கடலை வாங்கவா" என்று கேட்கிறார்
உடனே அண்ணா, "இங்க பாரு இவ்வளவு வெள்ளரிக்காயை வாங்கி வைத்து இருக்கே, இப்போ இதை வாங்கணுமா?
"இல்லண்ணா... நிலக்கடலை.... என்று அப்பா இழுக்க..
"சரி சொன்னா கேட்கவா போற, வாங்கு" என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்.
நிலக்கடலைப் பொட்டலங்களை வாங்கி காருக்குள் வைத்து விட்டு அப்பாவும், அண்ணாவும் ஆளுக்கு ஒன்றை பிரித்து சாப்பிடுகின்றனர்.
அப்பா சாப்பிட்டு முடித்த பிறகு, கடலை பொட்டலத்தை தூக்கி எறிய போனவர் அதை பிரித்துப் பார்க்கிறார். ஒரு பழைய செய்தித்தாளின் பக்கம் அது. அதில் ஒரு கவிதை அச்சிடப்பட்டிருக்கிறது. அந்தக் கவிதை...
"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா"
இதைப் படித்ததும் அந்த வரிகள் அவரது மனதில் பதிந்து போனது.
இறைவன் அருளால் அப்பாவுக்கு ஒரு சக்தி இருந்தது. ஒரு கவிதையைப் படித்தவுடன் அது அவரது மனதில் அப்படியே பதிந்துவிடும். திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்து மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்தப் பாடலும் அவரது மனதில் பதிந்து போனது.
பின்னாளில் "பாவ மன்னிப்பு" படத்திற்கு பாடல் எழுதும் போது இந்த வரிகளின் பாதிப்பால்,
"அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் எப்படி சொல்வேனடி"
என்ற பாடலை எழுதினார்.
இந்தப் படத்தை இந்தியில் தயாரித்தபோது, இந்திப் பாடலாசிரியர் ராஜேந்திர கிஷன் என்பவர் பாடல் எழுத வந்தார். அவரிடம் 'அத்தான் என்னத்தான்' பாடலைப் போட்டு காட்டிய இயக்குனர் அதேபோல வார்த்தைகள் வேண்டும் என்று கேட்டார்.
பாடலை முழுவதும் கேட்ட ராஜேந்திர கிஷன், அது என்ன, "தான்... தான்" என்று கேட்டார்.
ஒவ்வொரு தானும் அது இடம்பெறும் இடத்தைப் பொருத்து வேறு வேறு அர்த்தம் தரும் என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார்.
உடனே ராஜேந்திர கிஷன், "என்னால் இது போல எழுத முடியாது, காரணம் இதுபோன்ற வார்த்தை இந்தியில் இல்லை. இது தமிழில் மட்டுமே சாத்தியம்" என்று சொல்லிவிட்டு வேறு விதமாக எழுதித் தந்தார்.
"தமிழில் மட்டும் தான் இது முடியும்" என்று ஒரு இந்திப் பாடல் ஆசிரியர் சொன்னது தமிழுக்கு கிடைத்த பெருமை. தமிழன்னையின் கருணையினால் கண்ணதாசனுக்கு கிடைத்த பெருமை.
அண்ணா உடல்நலம் இல்லாமல் இருந்தபோது, அப்பா மிகவும் கலங்கிப் போயிருந்தார்.
"தில்லானா மோகனாம்பாள்" படத்திற்காக பாடல் எழுதும் போது அண்ணாவின் உடல்நிலையை விசாரிப்பது போல "நலந்தானா நலந்தானா... உடலும் உள்ளமும் நலம் தானா" என்று எழுதினார்.
கண்ணதாசன் தன்னைப் பற்றி தன் உடல்நிலையைப் பற்றி தான் கேட்கிறார் என்பதை அண்ணாவும் உணர்ந்திருப்பார் போலும்.
ஒரு கட்டுரையில் அண்ணா இப்படி எழுதுகிறார்....
" நான் உள்ளே இருக்கிறேன், அறைக்கு வெளியே என் பேரன், நலந்தானா...நலந்தானா..." உடலும் உள்ளமும் நலம் தானா .....என்று பாடிக் கொண்டிருக்கிறான். அது என் உடல் நிலையை பற்றி கேட்பது போல் தோன்றுகிறது".
ஒருவருடைய உண்மையான அன்பு எந்த வழியிலாவது மற்றவருக்கு புரிந்து விடும் என்பதற்கு "நலந்தானா ...நலந்தானா..' பாடலே சாட்சி...
அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் எழுதிய"என்றென்றும் கண்ணதாசன்"என்ற நூலிலிருந்து...
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...