ஐசிஐசிஐ வங்கியில் எங்கள் பகுதியில் வசிப்பவர்களுக்காக Zero balance privilege savings account பல வருடங்களாகத் தொடங்கிக் கொடுக்கிறார்கள். அதே போல பல பகுதிகளிலும் தொடங்கிக் கொடுப்பது வழக்கம்தான்.
இந்நிலையில் எங்கள் பகுதியில் புதிதாகக் குடிவந்த உறவினர் ஒருவருக்கு அதே போல வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக அதே வங்கிக் கிளைக்குச் சென்றேன்.
போய்க் கேட்டவுடனேயே, "உங்களுக்கு தந்தது society based zero balance privilege கணக்கு. அது இப்போது தருவது கிடையாது. நிறுத்தி விட்டார்கள். ஒன்றே கால் லட்ச ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையாக வைத்தால் அதை வைத்து இருப்பில்லா சேமிப்புக் கணக்கு தொடங்கித் தருவோம். அப்படி இல்லை என்றால் குறைந்த பட்ச இருப்புத் தொகை எப்போதும் ரூ. 25,000 இருக்க வேண்டும்” என்றனர்.
நான் வழக்கம் போல விடாப்பிடியாக வங்கிக் கிளை மேலாளரைச் சந்தித்துக் கேட்டேன். அவர் ஏற்கனவே மறுப்பு சொன்ன அதே ஊழியரைக் கூப்பிட்டுக் கேட்டார். அதே பதில் வந்தது.
எனக்கும் ஐசிஐசிஐ அதே வங்கிக் கிளைக்கும் வாய்க்கால் தகராறு உண்டு. ஆனால் இப்போது உள்ள ஊழியர்கள் அனைவருமே புதிது என்பதால் அது பற்றியெல்லாம் தெரியவில்லை. “வேணும்னா அப்போ இருந்த மேலாளரையோ, ஊழியர்களையோக் கூப்பிட்டு என் பேரைச் சொல்லி என்ன விஷயமுன்னு கேட்டுப் பாருங்க. நானும் உங்க கஸ்டமர் கேரில் போன் செய்து கேட்டேன். Zero balance சேமிப்புக் கணக்கு உண்டு என்றுதான் சொன்னார்கள்” என்றேன். எங்கெங்கோ போன் போட்டுப் பேசியவர் சற்று நேரத்தில், “ஓகே சார்... புதுக் கணக்கு தொடங்கி விடலாம்” என்றார்.
அந்த ஊழியரோ, “புதுக் கணக்கு தொடங்க குறைந்தது 50,000 ரூபாய் வேண்டும். கணக்கில் ஒரு வாரத்துக்கு வைக்க வேண்டும்” என்று சொன்னார். சரி என்றோம். “கணக்குத் தொடங்கியவுடன் இரண்டு டெபிட் கார்டுகள் தருவோம். ஒன்று சாதாரணமானது. அதை கேன்சல் செய்து விட்டு, எக்ஸ்பிரஷன் டெபிட் கார்டு தருவோம். அதற்கு வருடம் 500 ரூபாய் + வரிகள் தனி” என்றார். ”இது கட்டாயம்” என்றும் வலியுறுத்தினார்.
ட்வீட்டரில் ஐசிஐசிஐயைத் தொடர்பு கொண்டு இது உண்மைதானா என்று கேட்டேன். “அப்படியெல்லாம் இல்லை. அப்படி நிர்பந்தம் செய்யக் கூடாதுதான்” என்று ஒத்துக் கொண்டனர்.
சற்று முன் வங்கி மேலாளர் அழைத்தார். “அந்த எக்ஸ்பிரஷன் டெபிட் கார்டு தரப்படவில்லை. எனவே கூடுதல் கட்டணம் வராது” என்றார்.
மகிழ்ச்சி.
கேட்டால் (மட்டுமே) நியாயம் கிடைக்கும்.
No comments:
Post a Comment