Thursday, September 1, 2022

ஏன் திருமணம் தாமதமாகிறது?

 (இதை தயாரித்தவர் இன்றைய நிலையை மிகவு‌ம் சிறப்பாக விவரித்துள்ளார். இதைப்படிக்கிற இன்றைய பெற்றோர்ககள் யதார்த்தத்தை உணர்ந்து திருந்தினால் திருமணத்தில் இ‌வ்வளவு சிரமம் ஏற்படாது என்பது நிதர்சனமான உண்மை .

மெத்த படித்த பெண்களில் பெரும்பான்மையினரும், ஆண்களில் சிலரும் பெற்றோர் பேச்சை கேட்பதில்லை என்பதும், பெற்றோரும் அவர்களைப் பார்த்து பேசவே பயப்படுகிறார்கள் என்பதும் கசப்பான உண்மை. இதைப் பதிவிட்டவருக்கு பணிவான நமஸ்காரம். )
இனி பதிவை படியுங்கள். ஒரு 10% பேராவது யதார்த்தத்திற்கு திரும்பினால் நல்லது.
இன்றைக்கு மேட்ரிமோனியல் காலம்ங்கள் நிரம்பி வழிகின்றன. திருமணத்திற்கு உரிய மணமகன், மணமகள் தேடு தளங்கள் பிஸியாக இயங்குகின்றன. திருமணத்திற்கு என அமைந்த தளங்கள், கோடி கோடியாகக் கொட்டுகின்றன. எல்லோரும் கைபேசியிலும், கணிப்பொறிகளிலும் தங்களுக்குரிய மணமகனையும், மண மகளையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் மேட்ரிமோனியல் தளங்கள் தோசைக்கு ஆர்டர் செய்வது போல, சாதா, ஸ்பெஷல், பிரீமியம், சூப்பர் பிரீமியம் என்று வகை வகையாகப் பிரிவுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்-பெண் ஜாதகங்களை கத்தை கத்தையாக வைத்துக்கொண்டு, திருமண தகவல் மையங்களும், தனித் தரகர்களும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
“இல்லாததுதான் கிடைக்காது” என்பார்கள். இங்கே இருப்பதும் கிடைப்பதில்லை. இங்கே திருமணத்திற்கு ஆண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். 30 வயது கடந்த பெண்கள் திருமணத்திற்கு காத்திருக்கிறார்கள். 40 வயது கடந்த ஆண்களும் வழி மேல் விழி வைத்து காத்து இருக்கிறார்கள். இதில் வசதியானவர்கள் வசதி இல்லாதவர்கள் என்றெல்லாம் பேதம் இல்லை. ஆனால், அவ்வளவு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை. திருப்தியாக இருப்பது கிடைப்பதில்லை. கிடைப்பது திருப்தியாக இருப்பதில்லை. ஒரு காலத்திலே தங்கள் சமூகத்திற்கு உள்ளேயே, அதுவும் உட்பிரிவு தாண்டிக் கூட பிள்ளையைத் தேடாதவர்கள், இன்று வேறு வேறு சமூகத்தில் கூடத் தேடுகிறார்கள். இதெல்லாம் சமூக மாற்றங்கள் என எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், 90ல் பிறந்த ஆண், பெண் பிள்ளைகளுக்கு ஏன் திருமணம் தாமதமாகிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்?
முதலில் ஜாதக தோஷங்கள் காரணங்கள் என்கிறார்கள். ராகு தோஷம், செவ்வாய் தோஷம், தார தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் என்று வகை வகையாகப் பிரிக்கிறார்கள். நீங்கள் புத்தகங்களில் வருகின்ற ஜோதிட கேள்வி பதில்களைப் பார்த்தால், பத்துக்கு எட்டு கேள்விகள், திருமண தாமதத்தைக் குறித்தே இருக்கிறது. அல்லது விவாகரத்தைக் குறித்து இருக்கிறது. குடும்ப ஸ்தானத்தில் ராகு இருக்கிறது. கேது இருக்கிறது. ஏழில் சனி இருக்கிறது. 7ம் அதிபதி எட்டில் மறைந்து இருக்கிறார். களத்திரகாரகன் பலவீனமாகி இருக்கிறார் என்று அந்தச் சக்கரத்தில் தாமதத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கச்சிதமாக எழுதுகிறார்கள். ஜாதகத்தைப் பற்றிச் சொன்னோம்.
ஜாதகத்தில் 12 கட்டங்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களாக அப்படியே இருக்கின்றன. ராகு, கேது, சனி சுற்றி சுற்றி அந்த பன்னிரண்டு கட்டங்களுள்ளேயே இருக்கிறது.
இன்றைய தேதிப்படி மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிக லக்னத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் ராகு-கேது தோஷம் இருக்கவே செய்யும். மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு எட்டில் சனி கட்டாயம் இருக்கும். அது பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் என்பார்கள்.
கடக, சிம்ம லக்னகாரர்களுக்கு சனி ஆட்சி பெறக்கூடாது, ஏழாம் இடத்தை பாதிக்கும் என்பார்கள். ஆனால் இப்போது சனி மகரத்தில் இருப்பதால் தினமும் 4 மணி நேரம் கடக, சிம்ம லக்கினத்தில் பிறப்பவர்களுக்கு சனி தோஷம் இருக்கும். இப்பொழுது மீதி இருக்கும் சில லக்னங்களிலும் ஏதாவது தோஷம் இருக்கத் தான் செய்யும். ஆனால், நாற்பது வருடங்களுக்கு முன் இதே தோஷமுள்ள நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களுக்கு காலாகாலத்தில் திருமணம் நடந்தது. காலா காலத்தில் குழந்தைகள் பிறந்தன.
யாரும் அப்போது கருத்தரிப்பு மையங்களுக்கு சென்றதாக எனக்கு நினைவில்லை. எங்கள் தெருவில் ஓரிருவர் தவிர அனேகமாக எல்லோருக்கும் குழந்தைகள் இருந்தன. அதிலும் நான்கைந்து குழந்தைகள் இருந்தன.
ராகு - கேது சனி தோஷங்கள் வீரியம் பெற்று விட்டனவா?
இப்போது 90 ல் பிறந்த ஜாதகங்களுக்கு மட்டும் என்ன தோஷம் பெரிதாக வந்து விட்டது? வைரஸ் உருமாற்றம் (mutation) பெறுகிறது என்பார்கள். அதுபோல ராகு - கேது சனி தோஷங்கள் (mutate) வீரியம் பெற்று விட்டனவா?
அல்ல; ஜாதகக் கட்டங்களில் இருந்த ராகு, கேது, சனி ஒவ்வொருவர் மண்டையிலும் ஏறிவிட்டது. மக்களின் சிந்தனைகள் மாறிவிட்டன. பழியைத் தூக்கி, கிரகங்களின் தலையில் போட்டுவிட்டு, வாழ்க்கையை தொலைத்து விட்டு ஏமாந்து நிற்கிறார்கள். இன்றைக்குப் பெண் வேண்டாம்; பிள்ளை வேண்டாம் என்று நாசுக்காக மறுப்பதற்கு, (ஜாதகம் சரியில்லேங்க) உதவுகிறது.
இன்று பெரும்பாலான ராகு-கேது பரிகாரத் தலங்களிலும், மற்ற பிற திருமணத் தடை நீக்கும் தலங்களிலும், பரிகாரம் செய்வதற்கு மக்கள் அலை மோதுகிறார்கள். 40 வருடங்களுக்கு முன் இப்படி இல்லை. அப்போது ஏன் இத்தனை பரிகாரங்கள் சொல்லவில்லை? ஜாதகத்தில் இல்லையா? அல்லது சொல்லவில்லையா?
இவை எல்லாம் எதைக் காட்டுகிறது என்றால் திருமணம் பற்றிய மிக மிகத் தவறான புரிதல்களில், மனிதர்கள் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருமணம் என்பது எதற்காக? அதில் ஆண்களும் பெண்களும் என்ன பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் கடமைகள் என்ன? இல்லறம் என்பது என்ன? அதனுடைய நோக்கங்கள் என்ன? போன்றவற்றை பற்றி நம்முடைய பழைய நூல்களில் இருக்கின்றன. அந்த நூல்களில் சாராம்சமான கருத்துக்களை இன்றைக்கு யாரும் காதில் போட்டுக் கொள்வதில்லை.
தவறான பாதையில் செல்லும் கால்கள் ஊர் போய்ச் சேராது என்பார்கள். இங்கே தவறான பாதை என்பதைச் சுட்டிக் காட்டினாலும் அதைக் கேட்காமல், அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து, தங்களுக்குரிய அமைப்பை புரிந்து கொள்ளாமல், தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பெரிய அவலம் என்னவென்றால், நன்கு புரிந்து கொண்டவர்களும் தங்களுக்கு பெண் அல்லது பிள்ளை கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று சொன்னால், ‘‘ஊரோடு ஒட்ட ஒழுகல்” என்று சொல்லலாம்.
ஊர்முழுக்க ஏதோ ஒன்றை நோக்கி ஓடும் பொழுது, கொஞ்சம் நிதானித்து நிற்பவனை, ஓடுகிறவன் தள்ளிவிட்டு விடுவான். அதைப்போலத்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
தாறுமாறாக சாலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இடையே, நன்றாக விதிப்படி வாகனம் ஓட்டுபவர்கள் விபத்துக்குள்ளாகி விடுவது போல தகுதியுள்ள பலர், மாப்பிள்ளை பெண்ணைத் தேடி, கூட்டத்தோடு கூட்டமாக அலைகிறார்கள். அவர்கள் எத்தனை நேர்மையாளர்களாக இருந்தால் கூட, அவர்களுக்கு பெண் தருவதற்கு அல்லது பிள்ளை தருவதற்கு தயங்குகின்ற மக்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள்.
பிள்ளைப் பேறு தள்ளிப் போகிறது; தகுதி தகுதி என்பது இருக்கும் தகுதி அல்ல. சமூகம் கற்பனையாக அடுத்தவரைப் பார்த்து நிர்ணயித்துக் கொள்ளும் தகுதிதான்.
இன்றைக்கு திருமணமான தம்பதிகளுக்கு பிள்ளைப் பேறு தள்ளிப் போகிறது. கருத்தரிப்பு மையங்கள் சிறு நகரங்களில் கூட இப்பொழுது வந்துவிட்டன. லட்சம் லட்சமாக செலவு செய்து ஒரே ஒரு பிள்ளைக்காக முயற்சிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன?
பதட்டம், எரிச்சல், அலைச்சல், வயது, உணவு, சமூக சூழல், வேலைப்பளு இந்த அசல் காரணங்களை யாரும் காதில் போட்டுக் கொள்வதில்லை. சீர் செய்வதும் இல்லை.
பொய்மான் கரடு என்று சொல்வார்கள். பொய் மானைத் தேடி ஓடி, நிஜமான மானை இழக்கும் நிலைதான் இன்று பலருக்கும் இருக்கிறது. யதார்த்தமில்லாத கற்பனை வாழ்க்கைக்கும், உபயோகப்படாத ஆடம்பர வாழ்க்கைக்கும், ஏங்கி ஏங்கி நிம்மதியான வாழ்க்கையை கோட்டை விடுகிறார்கள்.
32 வயதில் மாப்பிள்ளை எப்படித் தேடுகிறார்?
படித்த, அழகான, வேலையில் இருக்கும், வரதட்சனை தரக்கூடிய, முடிந்தால் ஒரே பெண்ணாக இருக்கக் கூடிய பெண் தேவை.
30 வயது உள்ள பெண்ணுக்கு என்ன தேவை?
நன்கு படித்த, அழகான, தான் விரும்புகின்ற தோற்றமுள்ள, நல்ல வேலையில் அதிகம் சம்பாதிக்கக் கூடிய, அப்பா அம்மா தொந்தரவு இல்லாத, கூட்டுக் குடும்பமாக இல்லாத, தன் தாய் தந்தையரை மட்டும் வைத்து பராமரிக்கக் கூடிய, உறவினர்கள் அதிகம் இல்லாத, இருந்தாலும் வந்து தொல்லை செய்யாத, தூரத்து ஊர்களில் வேலையுள்ள ஆண் தேவை.
இவை இரண்டும் உலகத்தில் அநேகமாக இல்லாத விஷயங்கள். அப்படி ஓரிருவருக்கு கிடைத்தாலும் அவர்கள் பூர்வ ஜென்மத்தில் கோடி கோடியாக புண்ணியம் செய்திருப்பார்கள். கிடைக்கின்ற சாப்பாட்டை ருசித்து சாப்பிடும் காலம் போய்விட்டது. வேண்டிய சாப்பாட்டை ஊரெல்லாம் தேடி, பசி முற்றி, மயக்கம் வந்து, பழைய இடத்துக்கு வருகின்ற பொழுது, அங்கே ஏற்கனவே இருந்த ஹோட்டலில் சாப்பாடு தீர்ந்து போய் இருப்பது தெரிகிறது. இதுதான் இப்போது எதார்த்தத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பல நிபந்தனைகளோடு 26, 27 வயதில் துணை தேடப் போய், நிபந்தனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, 34 அல்லது 35 வயதில் “சரி, ஏதாவது ஒன்று இருந்தாலும் பரவாயில்லை” என்று நினைக்கின்ற பொழுது, எதுவும் கிடைக்காமல் போய்விடுகிறது.
எதார்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை!
இன்றைக்கு ஆயிரம் ஆண்களும், ஆயிரம் பெண்களும் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பெண்களைவிட ஆண்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற விகிதாச்சாரம் எல்லாம் சொல்லுகின்றார்கள். அப்படி இருந்தாலும் அது மிக மிகக் குறைவுதான்.எனவே, அதை விட்டு விடலாம். பெண்களுக்கு ஆண்களை ஓரளவு சமமாகவே இயற்கை படைத்திருக்கிறது. அரசு பணியில் எத்தனை பேர் சேர முடியும் என்று உங்களுக்கு தெரியும்.
“கால் காசு உத்தியோகமாக இருந்தாலும் கவர்மென்ட் உத்தியோகம்” என்று சொல்லுகின்றார்கள். அதனால் அதற்கு கிராக்கி அதிகம். ஆயிரம் பேர்களில் 100 பேர் அரசுப்பணிகளில் இருப்பார்கள். மீதி 900 பேர் இருக்கிறார்கள். இந்த 900 பேரில் அடுத்த ஐ டி மென்பொருள் துறையில் 150 பேர் இருக்கலாம். இது அரசாங்க வேலையை போல நிரந்தரமில்லாத நிலை. ஆயினும் இதில் மோகம் அதிகம். அரசாங்க வேலையில் ஒரு அதிகாரிக்கு ஒரே மாதிரியாகவே சம்பளம் இருக்கும். ஆனால் ஐடி துறையில் கம்பெனிக்கு கம்பெனி சம்பளம் மாறும். பெரும்பாலோர் என்ன நினைக்கிறார்கள் என்று சொன்னால், அமெரிக்கடாலர், மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பளம் எல்லோருக்கும் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அந்தக் கற்பனையில் காத்து இருக்கிறார்கள். இதில் ஒரு 10 பேர் 15 பேர் இருக்கலாம். பெரும்பாலும், 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி, பத்தாயிரம் ரூபாய் வாடகை கொடுத்து விட்டு, இருபதாயிரம் ரூபாய் வீட்டுச்செலவுக்கு வைத்துக் கொண்டு வாழக்கூடியவர்கள், 250 பேர் போய் விட்டார்கள்.
மீதி 600 முதல் 750 பேர் சுய தொழில் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். 250 ஆண்களுக்கு 250 பெண்களைத் தவிர மீதி இருக்கக்கூடிய சுய தொழில் செய்து சம்பாதிக்கக்கூடியவர்களை மனிதர்களாகக் கூட சீண்டிப் பார்ப்பது இல்லை. அந்த ஜாதகம் வந்தாலே பெண் வீட்டார் தூக்கித் தூரப் போட்டு விடுகிறார்கள். அரசாங்கம் அல்லது மென்பொருள் துறையில் அமெரிக்க டாலர் கனவுகளோடு பெண்ணுக்கு வயசு ஏற ஏற காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்குள் அடுத்த செட் 1000 ஆண்களும் 1000 பெண்களும் வந்துவிடுகிறார்கள். அதில் இருக்கக்கூடிய 750 பேர். ஏற்கனவே திருப்பதியில் தர்ம தரிசனத்திற்காக கொட்டகையில் காத்திருப்பவர்களோடு சேர்ந்து விடுகிறார்கள். இப்படி நிறைய கொட்டகைகளில் கல்யாணம் ஆகாத பெண்களும், கல்யாணம் ஆகாத ஆண்களும் அடைந்து இருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. இதில் யார் சொன்னாலும் கேட்பதில்லை. இரண்டு விதமான நட்டங்கள்.
இன்னுமொரு உதாரணம் சொல்லுகின்றேன்.
சிலபேர் பேருந்துக்காகக் காத்து இருப்பார்கள். கூட்டமாக இருக்கும். ஏதோ கிடைத்த பேருந்தில் ஏறி, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, காலாகாலத்தில் வீட்டுக்குப்போய் அடுத்த வேலையை பார்ப்போம் என்று இருப்பவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். சில பேர் வசதியான பேருந்து வரட்டும், உட்கார்ந்து போகும்படியான பேருந்து வரட்டும், நல்ல சீட்டு உள்ள பேருந்து வரட்டும் என்று காத்திருப்பார்கள். கடைசியில் என்ன ஆகும்? கடைசிப் பேருந்தும் போய்விடும். இப்போது இவர்களுக்கு இரண்டு விதமான நட்டங்கள்; முன்னால் போனவர், மற்ற வேலையைப் பார்த்து விட்டு, வீட்டில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பார்.
இவர் கால்கடுக்க நின்று, பசியோடு மயங்கி, மற்ற வேலைகளை எல்லாம் பாழாகி, நேரம் வீணடித்துப் போயிருப்பார். அன்று அதிக புத்திசாலித்தனம் இல்லாததால் அற்புதமாக வாழ்ந்தார்கள். ஒன்றில் திருப்தி இல்லாவிட்டாலும் வேறொன்றில் அவர்களுக்கு திருப்தி கிடைத்துவிடும். இன்று புத்திசாலித்தனம் அளவுக்கு அதிகமாகிவிட்டது. கணக்கு வழக்குகளாகவே உறவுகளும் வாழ்க்கையும் போய்விட்டன.
என்ன செய்வது?மனம் மாறுவதே இதற்கு வழி. ஒரு விஷயம்; எதுவும் அதிகமாக இருப்பது ஆபத்துதான்; அது உணர்ச்சியாக இருந்தாலும், புத்திசாலித்தனமாக இருந்தாலும்..🙏🏼
🙏🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...