ஜூலையில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும், அதன்பின் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலிலும், பா.ஜ., வேட்பாளர்களுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வேட்பாளர்களை நிறுத்தின; ஆனாலும், அந்த வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை மீட்க, செப்., ௭ முதல், யாத்திரை மேற்கொள்ள, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில், தங்கள் கட்சிக்கு ஒரு நிரந்தரமான தலைவரை தேர்ந்தெடுப்பதில், ராகுலும், அவரின் தாய் சோனியாவும் தடுமாற்றத்தில் தான் உள்ளனர். அப்படியே ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரால் எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து, பா.ஜ.,வுக்கு போட்டியாக, பலமான கூட்டணியை உருவாக்க முடியுமா என்பது சந்தேகமே!
அதற்கு காரணம், எதிர்க்கட்சிகள் அணியில் இடம் பெற விரும்பும் ஒவ்வொரு கட்சியும், வெவ்வேறு திசைகளில் பயணிக்கின்றன. திரிணமுல் காங்., தலைவர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளதால், எதிர்க்கட்சி அணிக்கு தலைமை வகிக்க தைரியமில்லாமல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பம்முகிறார். மஹாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்ததால், அந்த அரசில் இடம் பெற்றிருந்த தேசியவாத காங்., கட்சியின் தலைவரான சரத் பவாரும், எந்த ஒரு அணிக்கும் தலைமை ஏற்க தயாராக இல்லை. புதுடில்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியை பிடித்து விட்ட ஆம் ஆத்மி கட்சி, ஹரியானா, கோவா, குஜராத் மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. 'பா.ஜ.,வுக்கு பலமான எதிர்க்கட்சி நாங்களே' என்று உறுமிக் கொண்டிருந்த, அந்தக் கட்சித் தலைவர்களும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ளனர்.கடந்த எட்டு ஆண்டுகளில், மூன்று முறை அரசியலில் 'அந்தர் பல்டி'யடித்த, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை நம்பவும், மற்ற எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. இப்படி ஒவ்வொரு கட்சியும் நவக்கிரகங்கள் போல, ஒவ்வொரு திசையில் பயணிக்கும் போது, அவர்களால், ௨௦௨௪ லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு பலமான போட்டியை ஏற்படுத்த முடியாது என்பது
தற்போதே தெரிய வந்துள்ளது. பா.ஜ., மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை, இவர்கள் ஓட்டாக மாற்ற வேண்டும் எனில், எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள், தங்களின் சுயநலம் மற்றும் 'ஈகோ'வை ஒதுக்கி தள்ள வேண்டும். ஆனாலும், மலர்கள் போல சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க, வலுவான கூட்டணி என்ற மாலையை தொடுக்க, காங்கிரசால் மட்டுமே நல்ல நாராக இருக்க முடியும். ஆனால், அக்கட்சியே தள்ளாட்டத்தில் இருக்கும் போது, அதற்கான வாய்ப்பு உண்டா என்று
தெரியவில்லை.தற்போதைய நிலையில், ௨௦௨௪ தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றிக்கு, 'கிரீன் சிக்னல்' கிடைத்துள்ளது என்றே திட்ட வட்டமாகக் கூறலாம்.
No comments:
Post a Comment