Monday, September 5, 2022

வரங்கள் அருளும் வரதராஜர்.....!!!

அரியலூர் கல்லங்குறிச்சியில் கலியுகவரதராஜராகப் பெருமாள் தரிசனம் தருகிறார். கருவறையில் 12 அடி உயர கம்பத்தை அனுமன் தாங்கிக் கொண்டிருக்கும் திருவுருவே உள்ளது. இங்கு வைகுண்டஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பது கிடையாது. கடலூர், நல்லாத்தூரில் வரதராஜப் பெருமாள் திருவருள் புரிகிறார். இவருக்கு எதிரே உள்ள கருடாழ்வாரின் உடலில் எட்டு நாகங்கள் உள்ளன. சுவாதி நட்சத்திர தினத்தன்று இவருக்கு திருமஞ்சனம் செய்து 8 முறை வலம் வந்தால் கல்வி, செல்வம் விருத்தியாகும் என்பது ஐதீகம். சிதம்பரம், எண்ணா நகரம் போஸ்ட், கீரப்பாளையம் வழியே உள்ள கண்ணங்குடியில் வரம் தரும் ராஜர் திருக்கோயில் கொண்டுள்ளார். வேண்டும் வரங்களைத் தருவதால் இவருக்கு இந்தப் பெயர். இத்தல அனுமன், கையில் ஜபமாலை ஏந்தியிருக்கிறார். ஹஸ்த நட்சத்திரக்காரர்களின் பரிகாரத் தலம் இது.
சூளகிரியில், அர்ஜுனன் பிரதிஷ்டை செய்த ஆலயத்தில் எல்லாமே ஏழு மயம் - ஏழுமலை, ஏழுகோட்டை, ஏழு மகாதுவாரங்கள், ஏழடி உயர வரதராஜப் பெருமாள்!
கோவை உக்கடத்தில் கரிவரதராஜப் பெருமாளாக திருமால் அருள்கிறார். இத்தலத்தில் உத்திராயணம், தட்சிணாயனம் என இரட்டை நுழை வாயில்கள் உள்ளது சிறப்பு. இத்தல ஹயக்ரீவர் கல்வி வரம் அருள்பவராக வணங்கப்படுகிறார். கோவை கொழுமத்தில் கல்யாண வரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். இத்தல தாயார், வேதவல்லிக்கு வில்வதளங்களாலேயே அர்ச்சனை நடைபெறுகிறது. சென்னை பூந்தமல்லியில் புஷ்பவல்லி தாயாருடன் வரதராஜரை கண்டு மகிழலாம். இவர் தலையின் பின்னே சூரியனுடன் உள்ளதால், இத்தலம் சூரியதோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. மாசி விழாவின் போது திருக்கச்சி நம்பிகள், தேவராஜ அஷ்டகம் பாடி இத்தல பெருமாளை துதிக்கும் வைபவம் புகழ்பெற்றது.
கல்யாண வரதராஜரை தரிசிக்க சென்னை காலடிப்பேட்டைக்குச் செல்லவேண்டும். தாமரை வடிவ பீடத்தில் நவகிரகங்கள் அருள்வதும், உற்சவர், பவளவண்ணர் கையில் தண்டம் ஏந்தி அருள்வதும், தனிச் சிறப்புகள். சேலம், ஆறகழூரிலும் கரிவரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். இத்தல தாயார் கமலவல்லி 64 கலைகளும் சித்திரமாக தீட்டப்பட்ட அலங்கார மஞ்சத்தில் அமர்ந்து அருள்கிறார். இத்தல தசாவதார சுதைச் சிற்பங்களில் புத்தரும் இடம்பெற்றுள்ளார்.பாபநாசம், அய்யம்பேட்டை, பசுபதிகோயிலில் வைணவ ஆச்சாரியரான பெரிய நம்பிக்கு அவர் இழந்த பார்வையை மீட்டுத் தந்த வரத ராஜப் பெருமாளை தரிசிக்கலாம். கேட்டை நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்தலம். மருதாணி, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி இலை சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி பிரார்த்தித்து கண்ணொளி பெறுவது இத்தல வழக்கம்.
திருநெல்வேலி, அத்தாளநல்லூரில் யானையைக் காத்த கஜேந்திரவரதரைத் தரிசிக்கலாம். இந்தப் பெருமாளுக்கு சுத்தான்னம் நிவேதிக்கப்படுகிறது. நெல்லையில் உள்ளது வரதராஜப் பெருமாள் திருக்கோயில். கிருஷ்ணபரமராஜன் எனும் அரசனான தன் பக்தனை எதிரியிடமிருந்து காக்க அந்த அரசனைப்போலவே வேடம் தாங்கி போரிட்டு காத்த பெருமாள் இவர். நீலநிறக்கல்லினாலான மூர்த்தி. திருநெல்வேலி சங்காணியில் அருள்கிறார் சங்காணி வரதராஜப் பெருமாள். பெருமாளின் வலக்கரத்தின் தன ஆகர்ஷணரேகை உள்ளதால் பொன் பொருளை இவர் கரத்தில் வைத்து பக்தர்கள் நேர்ந்து கொள்கின்றனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் அபீஷ்ட வரதராஜரை தரிசிக்கலாம். இத்தல விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு மட்டைத் தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்தால் ஒரு வருடத்திற்குள் அந்த பிரார்த்தனை நிறைவேறிவிடுகிறது.
திருவண்ணாமலை, வந்தவாசி அருகே நல்லூரில் சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். அவர் காலடியில், வணங்கியபடி காணப்படும் கருடாழ்வார், பக்தர்களின் கோரிக்கைகளை பெருமாளிடம் எடுத்துரைப்பதால், இவர் பரிந்துரைக்கும் கருடாழ்வார் எனப்படுகிறார். தேனி, பெரியகுளத்தில். திருப்பதி பெருமாளைப் போன்றே காட்சியளிக்கிறார் வரதராஜப் பெருமாள். கருவறையின் முன்னே தீபஸ்தம்பத்தின் அடியில் பிறந்த குழந்தைகளை வைத்து பழங்களை பெருமாளுக்கு நிவேதிக்க குழந்தையின் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை.
விழுப்புரம், கச்சிராயப்பாளையத்தில் வரதராஜப் பெருமாள் ஆலயம் கொண்டருள் கிறார். யானைக் குகை எனும் ஒரு சுரங்கக் குன்று இங்கே உள்ளது. ராஜகோபுரம் இல்லாத ஆலயம் இது. காஞ்சிபுரம் வரதராஜர், தேவராஜர் என்றும் வணங்கப்படுகிறார். 40 வருடங்களுக்கு ஒருமுறை தரிசனமளிக்கும் அத்திவரதரும், தோஷங்கள் போக்கும் தங்க பல்லி, வெள்ளி பல்லியும் புகழ் பெற்றவை. வெள்ளையரான ராபர்ட் க்ளைவ் மற்றும் ப்ளேஸ் இருவரும் சமர்ப்பித்த நகைகள் திருவிழாகாலங்களில் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றன.
திருத்தணி அருகே அருங்குளத்தில் கல்யாண வரதரை தரிசிக்கலாம். இங்கு பெருமாளுக்கு வில்வதளங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது. கோவை விக்னேஷ் நகரில் வரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். உற்சவர், வடிவழகிய நம்பி. மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படும் வில்வமரம் இங்கு தலவிருட்சம். ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் இங்கு சத்யநாராயணபூஜை நடைபெறுகிறது.
படம் - அத்தாளநல்லூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில்.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...