தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ், ௧.௫௧ லட்சம் கி.மீ., நெடுஞ்சாலைகள் உள்ளன. அவற்றில், 566 சுங்கச் சாவடிகளும், தமிழகத்தில் உள்ள, 5,134 கி.மீ., நெடுஞ்சாலைகளில், 48 சுங்கச் சாவடிகளும் செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் சுங்கச் சாவடிகள் அதிகம். இந்த சுங்கச் சாவடிகள், ஆண்டுதோறும் கட்டண உயர்வை அறிவித்து, வாகன உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் வழியாக தினமும், 60 முதல்,- 65 லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று முதல், தமிழகத்தில், ௨௮ சுங்கச் சாவடிகளில், ௧௫ சதவீத கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது; இந்த கட்டண உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். தற்போதுள்ள சுங்கச் சாவடிகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப்பட்டு, ஏராளமான பணம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் சுங்க கட்டணம் உயர்வு என்பதை ரத்து செய்து, நாடு முழுதும் மூன்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுங்க கட்டண உயர்வை அமல்படுத்த, மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மூன்றாண்டுக்கு ஒரு முறை உயர்வை அறிவிப்பதால், பெரிய இழப்பு ஏற்படாது. அதுமட்டுமின்றி, மிகப் பெரிய அளவில் லாபம் ஈட்டி வரும் சுங்கச் சாவடி களின் கட்டணத்தையும் குறைக்கலாம். சில சுங்கச் சாவடிகளில் கட்டணம் இல்லாமல், வாகனங்கள் சென்று வருவதற்கும் நடவடிக்கை எடுக்கலாம். இதன் வாயிலாக, பொதுமக்கள், சரக்கு மற்றும் வாடகை வாகன உரிமையாளர்களின் சுமை கணிசமாக குறையும்.
இந்த விஷயத்தில், மத்திய அரசு அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையிலான கட்டணத்தை அறிவிப்பது சிறப்பாக இருக்கும். ஆண்டுக்காண்டு வசூல் தொகை அதிகரிக்கும் நிலையில், சாலை பராமரிப்பு, சேவைகள், மேம்பாடு, நவீன தொழில்நுட்பம், பயணியருக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுப்பதிலும், நெடுஞ்சாலைகள் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment