Thursday, June 15, 2023

"எங்கடா போற?"

 நாளை சலீமுக்கு சுன்னத் கல்யாணம். என்னை அழைத்திருக்கிறான்.

சென்ற மாதம் என் பூணூல் கல்யாணத்துக்கு அவன் என் மற்ற நண்பர்களுடன் வந்திருந்தான்.
அவனுடைய நிகழ்ச்சிக்கு நான் போகாமல் இருக்க முடியுமா?
ஆனால்.......
அது என்ன நிகழ்ச்சி என்றுதான் எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் தெரியாதுதான்!
மறுநாள்.
"எங்கடா போற?"
"சலீம் வீட்டுக்கு"
ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. சும்மா.... விளையாடத்தான் போகிறான் என்று நினைத்தார்களோ! சலீம் பள்ளி நண்பன் என்பது மட்டும் வீட்டுக்குத் தெரியும். திருச்சி பழைய புத்தகக் கடையில் புத்தகங்கள் வாங்கப் போகும் போது அவனைப் பார்த்திருக்கிறார் அப்பா.
பழைய புத்தகக் கடைக்குப் பின்புறம் உள்ள பகுதியில் தான் அவன் வீடு இருந்தது. என் வீட்டில் இருந்து 1½ கிமீ இருக்கும்.
பெரிய பந்தல். கூம்பு ஒலிபெருக்கியில் எம்ஜிஆர் படப் பாடல்கள். குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன.
தயங்கித் தயங்கிப் பந்தலைக் கடந்து வீட்டருகில் சென்று விட்டேன். தோரணம் கட்டி இருந்தது.
என்னைப் பார்த்தவுடன் இரண்டு பெரியவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். அவர்கள் முகத்தில் ஒரு புரிதல் இருந்தது.
அவர்கள் என்னை எதிர்பார்த்திருந்தவர்கள் போலத் தோன்றியது. நான் வருகிறேன் என்று சலீம் சொல்லியிருப்பான்.
"வாங்க தம்பி, வாங்க"
"பிரபாகர் தம்பியும் வந்துட்டாரு. உள்ள சலீமுடன் இருக்காரு. வாங்க உள்ளே போவோம்"
எங்களுக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் தங்களுக்குள் வியப்புடன் பேசிக் கொண்டார்கள்.
"ஐயர் வீட்டுப் புள்ளைக போல இருக்கு"
"சலீம்கூடப் படிக்கிறாப்லியோ?"
வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போனார்கள். ஒரு அறையில் கயிற்றுக் கட்டிலில் சலீம் படுத்திருந்தான். முகம் வீங்கிக் கிடந்தது. அழுது கசங்கிய கண்கள்.
இதென்னடா இது? இவனுடைய கொண்டாட்டம் தானே? ஏன் இப்படி படுத்துக் கிடக்கிறான்? என்னாச்சு? ஏதாவது தப்பு பண்ணி, வீட்டில் அடித்து விட்டார்களா?
என்னைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் பரவசம். ஆனால் அதில் வலி இருந்தது போல் எனக்குத் தோன்றியது.
"என்னாச்சு சலீம்?"
"வாடா! நீ வரமாட்டியோன்னு நெனச்சேன்.... நல்லவேளை வந்துட்டே!"
முனகிக் கொண்டே பேசினான்.
"ஃபங்க்ஷன்னு சொன்னியே..... எல்லாம் முடிஞ்சுதா?"
"அதெல்லாம் காலையிலேயே முடிஞ்சிருச்சி"
எனக்குத் தான் அது என்ன "ஃபங்க்ஷன்" என்று தெரியவே இல்லை.
பிரபாகரன் முகத்தைப் பார்த்தேன். அவனுக்கும் ஒன்றும் தெரியவில்லை போல் இருக்கிறது.
அதற்குள், எங்களைச் சுற்றி வீட்டுப் பெரியவர்கள். அப்பா அம்மா மாமா மாமி என்று அறிமுகங்கள்.
உள்ளே இருந்து கமகமவென்று சாப்பாடு வாசனை. எங்கள் வீட்டுச் சமையல் வாசனை இப்படி இருக்காது. இது வேற மாதிரி.
நாங்கள் இறைச்சி சாப்பிட மாட்டோமென்று சலீமுக்குத் தெரியும். இறைச்சி தர மாட்டார்கள் என்று முன்கூட்டியே ப்ராமிஸ் பண்ணியிருந்தான்.
வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனார்கள். சலீம் எங்களுடன் வர முயற்சித்தான். ஆனால் அவனுக்கு எழவே முடியவில்லை.
உள்ளே ஒரு அறையில் சிலர் தரையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.
அதைக் கடந்து சென்றோம். பின்கட்டு வந்தது. அங்கே சிமெண்ட் தரையில் சுத்தமான இடத்தில் பாய் போட்டு வைத்திருந்தார்கள்.
உட்காரச் சொன்னார்கள். வாழை இலை போட்டார்கள். நான்கு அடுக்கு எவர்சில்வர் டிஃபன் பாக்ஸ் ஒன்றை எடுத்து வந்து என் முன் வைத்தார் ஒருவர். இன்னும் ஓரிரண்டு பாத்திரங்கள்.
"தம்பி..... பயப்படாம சாப்பிடுங்க. ஆனந்தா லாட்ஜிலிருந்து உங்களுக்காக ஸ்பெஷலா கொண்டு வந்து இருக்கோம்"
சலீமின் அப்பா அன்பொழுகக் கூறினார், எங்கள் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில்.
ஆனந்தா லாட்ஜ் ஹோட்டல் எனக்கு நன்றாகத் தெரியும். பெரிய கடை வீதியில் பாட்டா ஷோரூம், ஹானஸ்ட் ஸ்டோர் வரிசையில் இருந்தது. இன்று அந்த ஹோட்டல் அங்கே இல்லை.
அந்த ஹோட்டல் முதலாளியும் என் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். நான் அப்பாவுடன் அங்கு செல்லும் போதெல்லாம் எனக்கு ரோஸ் மில்க்கோ காபியோ தருவார்கள். அந்த ரோஸ் மில்க்கின் சுவை இன்றும் என் மனதில் இருக்கிறது.
சலீம் குடும்பத்தினரின் அன்பான உபசரிப்பில் நாங்கள் திக்குமுக்காடிப் போனோம்.
சலீம் வீட்டிலிருந்த அனைவரின் கவனமும் எங்கள் மேலேயே இருந்ததை நான் கவனித்தேன். எனக்குச் சற்று கூச்சமாக இருந்தது.
வயிறு முட்டச் சாப்பிட்டு, சலீமுடன் பொழுதைக் கழித்தோம். விடைபெற்ற போது கையில் ஒரு துணிப்பையில் தின்பண்டங்கள் கொடுத்தார்கள்.
வீட்டுக்குத் திரும்பும் வழியில் யோசித்துக் கொண்டே வந்தேன். அவனுக்கு என்ன ஆயிற்று? வழக்கம் போல் உற்சாகமாக இருக்கவில்லையே? லீவு முடிந்து பள்ளிக்கு வரட்டும். அவனிடமே கேட்டு விடுவோம்.
ஒரு வாரத்திற்குப் பிறகு சலீம் வகுப்புக்கு வந்தான். முகத்தில் தெளிவு.
"எப்புடிறா இருக்கே? அன்னிக்கு என்னடா ஆச்சு ஒனக்கு?"
கையை 'அங்கே' கொண்டு போய்...
"கட் பண்ணிட்டாங்க டா!" என்றான்!
பகீரென்றது எனக்கு.
"என்னடா சொல்றே?"
"ஆமாடா" என்றான் பரிதாபமாக.
"ஏன்?"
"தெர்ல. எங்க வீட்ல இப்பிடி தான் பண்வாங்க"
"பயங்கரமா வலிக்குமே?"
"இல்ல இல்ல.... அதெல்லாம் வலிக்காது. மருந்து தடவிடுவாங்க"
"அப்புறம்........ எப்படி ஒன்னுக்குப் போவே?"
(நான் நினைத்தது...... மொத்தமாகவே கட் பண்ணிடுவாங்களோ என்று)
"அதெல்லாம் வந்துரும் டா!"
"எப்புடிடா? கட் பண்ணிட்டா எப்புடிடா போவ?"
"மொத்தமா கட் பண்ண மாட்டாங்க டா. தோலை மட்டும் கட் பண்ணுவாங்க"
அவன் சொன்னதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
காலில் முள் தைத்தாலேயே எப்படி வலிக்குது!
அப்பாவுடைய ஷேவிங் பிளேடு விரலில் கிழித்து விட்டால் எப்படி வலிக்குது! ஒன்னுக்கு போகும் இடத்தில் கட் பண்ணினா எப்படி வலிக்கும்! கடவுளே! (ஒருமுறை என் கை என் அரை ட்ரௌஸருக்குள் சென்று அங்கே தொட்டுப் பார்த்துக் கொண்டது).
பாவம் சலீம்கான்! அவனுடைய பெற்றோர்கள் மீது கோபம் வந்தது. ஏன்தான் இப்படிச் செய்கிறார்களோ! இதற்கு என்ன அவசியம்?
"புண்ணாயிருக்குமே டா! ஆறிடுச்சா?"
"இன்னும் ஆறலைடா.... ரணகளமா இருக்குடா.... இன்னும் கொஞ்ச நாள் ஆகும்"
"இன்னும் வலிக்குதா?"
"வலி இல்ல....... டிரௌஸரில் ஒரசினா எரியும்"
எனக்கு ரொம்பப் பாவமாக இருந்தது. எங்கள் வீட்டிலும் எனக்கு அப்படிச் செய்வார்களோ! எனக்கு பயம் பற்றிக் கொண்டது.
கையில் இருந்த வறுகடலையை அவனுடன் பகிர்ந்து கொண்டேன். இதைத் தின்று சற்று நேரம் அவன் வலியை மறக்கட்டுமே!
"சரி..... சலீம்....... இந்த மாதிரி ஏன் பண்றாங்க?"
"அதுவா? .... அது ஒன்னும் இல்லை.... வந்து...... எங்க வீட்ல அப்படித்தான் பண்ணுவாங்க...."
இந்த நிகழ்ச்சி பற்றி அவனுக்கு அப்போது ஞானம் இருக்கவில்லை.
"இன்னும் ரத்தம் வருதா டா?"
"இல்லை.... இப்ப வரலை... கட்டு போட்ருக்காங்க"
"அப்ப எப்படி ஒன்னுக்குப் போவ?"
(எனக்கு அது ஒன்றுதான் கவலை! 😂)
"கட்டை அவுத்துட்டுப் போவேன்... அப்புறம் அப்படியே சுத்திக்குவேன்"
அலட்டிக்காமல் கூறினான் சலீம்.
கற்பனை செய்து கொண்டேன். தாங்க முடியவில்லை!
சலீம் கேட்டான்: "நீ வேணா பாக்குறியாடா? நான் காட்டவா?"
ஐயோவென்று இருந்தது எனக்கு.
"வேண்டாம் டா! நீ பாவம் டா!"
வகுப்பினிடையில் ஆசிரியரிடம் சிறிய விரலை உயர்த்தி, இருவரும் வெளியேறினோம்.
பள்ளியின் பின்புறம் நீண்ட நெடிய கழிப்பறை. யாரும் இருக்கவில்லை. மதிய உணவு இடை நேரத்தில் நிறைய மாணவர்கள் வந்து போய்க் கொண்டே இருப்பார்கள்.
இருவரும் சிறுநீர் கழிக்க வழக்கம் போல் அருகருகில் இணையாக நின்று கொண்டோம்.
அரை ட்ரௌஸருக்குள் கையை விட்டு சலீம் தன்னுடைய கட்டை அவிழ்க்க முயற்சி செய்தான். "ஆ" ...என்று அலறினான். வலித்திருக்கும், பாவம்.
"இங்க பார்ரா... இங்க பார்ரா...."
நான் பார்க்கவில்லை. பார்க்க தைரியம் இருக்கவில்லை.
நான் துணைக்கு வந்தது அவனுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். சிறுநீர் கழித்து, வகுப்புக்குத் திரும்பினோம்.
பத்து வயதில் என்னை மிகவும் பாதித்த நிகழ்ச்சி இது. நானும் சலீமும் கிட்டத்தட்ட 50 வருடங்கள் தொடர்பில் இருக்கவில்லை. சமீபத்தில் பிரபாகரன் தான் எனக்காகக் திருச்சியில் அவனைத் தேடிக் கண்டுபிடித்தான்.
சுன்னத் பற்றி பிற்காலத்தில் அறிந்து கொண்டேன். தாம்பத்திய உறவில் கூடுதல் இன்பம் என்றார்கள். சுகாதாரம் என்றார்கள்.
அன்றும் இதை நான் நம்பவில்லை. இன்றும் நம்பவில்லை. அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...