அன்னிக்கு காலையில இருந்து மனசு ஒருமாதிரியாத்தானிருந்துச்சு. ஒண்ணும் சரியில்ல. எந்திரிச்சதே லேட்டு. போய் பல்ல
வெளக்கலாமுன்னு போன பேஸ்ட்டு தீந்துபோச்சு. நேத்தே வாங்கணும்ன்னு அவன் நெனச்சிருந்தான் ஆனா வழக்கம்போல மறந்துபோச்சு. மாசக்கடேசி வேற. கையில காசுஇல்ல வழக்கமாச் செய்யிற வேலையத்தான் செஞ்சான். டூத்பேஸ்ட்ட என்னத்தபிதுக்கினாலும் தேறல. அதுனால அத கத்திரிகோலால ரெண்டா வெட்டினான் உள்ளாற இருக்குற கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருந்தபேஸ்ட்டு வைச்சி ஒப்பேத்தியாச்சு குளிக்கபோனா அங்கையும் சோப்பு கைய விரிச்சிச்சி. சோப்புப்போடலைன்னா நேத்துஅடிச்ச வெய்யிலுக்கு நாறித்தொலையுது கழுத ஒடம்பு. தேஞ்சுபோன ரெண்டுதுண்டு சோப்புத்துண்டுகளை டெக்னிக்கா கீழ விழாமப்புடிச்சி சோப்புப்போட்டுக் குளிச்சாச்சு. சம்சாரத்துக்கிட்ட டிபன் கேட்டா. ப்ழையதுதான் கெடச்சது உளுந்து வாங்கணுமாம். இட்லி அதுவரைக்கும் லீவு
டிபன் முடிச்சிட்டு டயத்தைப்பாத்தா 0850 அய்யோ பத்துநிமிசம் தான இருக்கு
வேகமாப்போய் வண்டிய ஸ்டார்ட்பண்ணுனா அதுவும் சண்டித்தனம் பண்ணுச்சு. பொண்டாட்டி சொன்னா உள்ளாறவந்து ஒரு டம்ளர் தண்ணி குடிச்சிட்டுப்போங்கனா. ஏற்கனவே லேட்டுன்னு சடசடத்தான் ஒரு வழியா வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஓட்டிக்கிட்டுப்போனான். வேகமாப் போனாத்தான் டயத்துக்குள்ள ஆபீஸ் போகமுடியும். கொஞ்சதூரம் தாண்டுன்னா குப்பம் வரும் அங்க பாத்து வண்டிய ஓட்டனும் குறுக்க மறுக்க சின்னப்புள்ளைக ஓடிட்டுக்கெடக்கும். இவனும் பதட்டத்தோடதான் வண்டிய ஓட்டினான். அவனுக்கு முன்னாடி குப்ப லாரி ரோட்டை அடைச்சிட்டுப்போயிட்டு இருந்தது. வழியே இல்ல ஹாரன் அடிச்சாலும் வழிவிடலை.
இவனும் விடாமத் தொரத்தினான். ஒருகேப்புல இவன் ஸ்பீடா ஓவர் டேக் பண்ணுனான். அப்ப குறுக்க ஒரு சின்னப்பையன் வேகமா ரோட்டைக்கிராஸ் பண்ணுனவன் இவன் வரதைப்பாக்கல. இவன் வண்டி அவன் மேல மோதிடுச்சு. இவனும் கீழ விழுந்துட்டான் அந்தச்சின்னப்பையன் மேல வண்டி விழுந்து கெடந்தது. அங்குனக்குள்ள இருக்குறவுக எல்லாரும் ஓடியாந்து வண்டியத்தூக்குனாக சின்னப்பையன் காலுல ரத்தம் அவன் மயங்கிட்டான். இவன் தூரமா விழுந்து கெடந்தான். கைகாலுல சிறாய்ப்பு. பேண்டு சட்டை கிழிஞ்சிபோச்சு
கூட்டம் கூடி அவனைத்தூக்குச்சு அவனுக்கு நெதானம் இல்ல. அதுக்குள்ள ஒருத்தி ஏ சகுந்தலா ஒன் பேரனை ஒருத்தன் வண்டில அடிச்சிப்புட்டான் ஓடியான்னு கத்துனா.
இவன் அந்தப்பக்கம் திரும்பிப்பாத்தா அந்தம்மா அய்யோன்னு கத்திக்கிட்டு ஓடி வந்துட்டு இருந்துச்சு.
அதைப்பாத்தவன்ன இவனுக்குக்கு கதி கலங்கிப்போச்சு. அது மார்க்கெட்டுல மீனு விக்கிற அம்மா. அந்தம்மா பேரனான்னு நெனச்சவன் அடிவயிறு கலங்கிப்போச்சு
போன மாசம் இவன் கூட வேலபாக்குறவரு ஒருத்தரு இதே எடத்துல ஒரு ஆட்டுக்குட்டிய பைக்குல அடிச்சி 50000 தண்டம் கட்டினது நெனவுக்கு வந்துச்சு அத இந்தம்மாதான் வாங்கிக்கொடுத்ததா அவன் சொல்லிருந்தான்.
அது மார்க்கேட்டுல எப்பப்பாத்தாலும் சண்டபோட்டுட்டே இருக்கும் வாயத்தொறந்தா காது கூசுறமாதிரி திட்டும். மார்க்கேட்டுல இருக்குறவுகளே அதைப்பாத்துப்பயப்படுவாக. மீன் விலை கேட்டா விடாது. வெலையும் கொறைக்காது. மீன் வாங்கியே ஆகனும் இல்லைன்னா திட்டும் காலங்காத்தால கையவெச்சிட்டுப்போனி பண்ணாமப்போறயே....நீயெல்லாம்ன்னு ஆரம்பிச்சா அம்புட்டுதான் காது கூசும்
இன்னிக்கித்தொலைஞ்சோம்ன்னு நெனைச்சான். அதுக்குள்ள அந்தச்சின்னபையன ஆட்டோவில தூக்கிப்போட்டுட்டு ரெண்டுபேரு கெளம்புனாக. இவன யோவ் கெளம்புயான்னு ஒருந்தன் இவன் வண்டில ஏறிக்கிட்டான். அந்தம்மாவ ஆட்டோல ஏத்திக்கிட்டு பக்கத்துல இருந்த ஆஸ்பத்திரிக்கி ஓடுனாக. இவனும் பின்னாடியே போனான்.
அங்க ஆஸ்பத்திரில கேட்டாக அப்ப ஒருத்தன் சொன்னான் அதுன்னு ஆரம்பிச்சான். அப்ப அந்த மீன்காரம்மா சொல்லிச்சி இவன் மாடில இருந்து கீழ விழுந்துட்டான்னு . எல்லாரும் அதிர்ச்சியாப்பாக்க அது தெளிவாப்பேசிச்சி. மாடில இருந்து கீழவிழுந்துட்டான் என்னான்னு பாருங்கன்னு ...
அப்ப அந்த ஆஸ்பத்திரில இருந்த நர்ஸம்மா சொல்லிச்சி பாத்தா அப்புடித்தெரியலையேன்னு. அப்ப திரும்ப மீன் காரம்மா சொல்லிச்சி அதான் நான் சொல்றேன்ல கீழ விழுந்துட்டான்னு மொத என்னான்னு பாருங்கன்னு சொல்லிச்சி அதுக்குள்ள அந்தசின்னப்பையன் முளிச்சிட்டான். தலையில லேசா ரத்தம்.வந்திச்சு. காலு வீங்கிப்போச்சு அப்ப டாக்டர் சொன்னாரு . காலு ஒடைஞ்சிருக்கு. தலையில லேசான காயம்தான் கட்டுபோட்டு காலை சரிபண்ணவே மூணுமாசம் ஆகும் அது வரை இவன் ரெஸ்ட் எடுக்கனும்முன்னு சொன்னாரு. அதுக்குள்ள இவன் தலையில இருந்து ரத்தம் வந்துட்டுஇருந்துச்சு
அதைப்பாத்துட்டு டாக்ட்டர் இவனக்கூப்புட்டுப்பாத்தாரு. கைகால்ல ரத்தம் இருந்துச்சு. இது என்ன கேசுன்னு ஒடனே அதை பாத்து செக் பண்ணுனாரு. அப்ப கைல கால்ல லேசா ர்த்தம் வந்துச்சுஅதை செக்பண்ணுன டாக்ட்டர் இது லேசான காயம்தான் தலைய ஸ்கேன் பண்ணனும் அப்பத்தான் என்ன நெலவரமுன்னு தெரியும்ன்னாங்க
இவன் இது பைக் சிலிப்பாயிருச்சு அதுனால கீழே விழுந்துட்டேன்னு சொன்னான். இவன் அந்த மீன்காரம்மாவைப்பாத்தான். அதுசொல்லிச்சி அய்யாவை கூட்டிட்டுப்பொய் என்னான்னு பாருங்கன்னு . அப்ப அந்தம்மா கூட இருந்தவங்க அப்ப இதுக்கு யாருபதில் சொல்றதுன்னு அந்தப்பையனப்பாத்தாங்க அப்ப மீன்காரம்மா சொல்லிச்சி . அது நான் பாத்துக்கிறேன் எங்க வீட்டுப்புள்ளைய எப்புடிப்பாத்துக்கிறதுன்னு எங்களுக்குத்தெரியும் ந்னு சொல்லிச்சு
இவன்சட்டைப்பையத்தடவினான் ஒண்ணுமில்லன்னு அவனுக்கே தெரிஞ்சே. அப்ப அந்த மீன்காரம்மா சொல்லிச்சி யோசிக்காதய்யா. நீங்க போங்க தலைக்கு வந்தது தலைப்பாவோட போச்சு என் பேரனுக்கு ஒண்ணுமில்ல. நீங்க போய் ஒங்களுக்கு என்னாச்சுன்னுபாருங்கன்னு சொல்லிச்சி.
இவன அப்சர்வேசன்ல வைச்சிருந்து மறுநாள் தலையில் ஒண்ணும் பிரச்சனையில்லன்னு அனுப்பிச்சாங்க
இவன் தெரிஞ்ச பிரண்டப்போய் பாத்து பணம் ஏற்பாடு பண்ணி வாங்கிட்டு ஆஸ்பத்திரி பில்ல கட்டிட்டு அந்த மீன்காரம்மா வீட்டுக்குப்போனான்
அங்க அந்த சின்னப்பையனக்காணோம் கேட்டப்ப புத்தூருக்குக்கு கட்டுப்போட கூப்புட்டுபோயிருக்காங்க அவனோட அப்பான்னு சொன்னாங்க இவன்கூட வந்தவரு இவன் கிட்ட பணத்தவாங்கி அந்த அம்மா கையில கொடுக்கப்போனாரு அந்தம்மா சொல்லிச்சி . எதுக்கு பணம் குடுக்குறீங்கன்னு. இவன் சொன்னான் என்னாலதான அவனுக்கு அப்புடி ஆச்சு அதான்னு இழுத்தான்
அப்ப அந்தம்மா அவன் சின்னப்பையன் அவன் இப்புடித்தான் குறுக்க மறுக்க ஓடிகிட்டுக்கெடப்பான். அவந்தான் குறுக்க வந்துருப்பான். நான் ஒங்களுக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான் வேண்டிட்டு இருந்தேன்.ஒங்களுக்கு ஏதாவது ஆயிருந்தா அந்தப்பாவம் எங்களைச்சும்மா விடாது. நல்ல வேல ஒங்களுக்கு எதுவும் ஆகலை. அதுபோதும் அது ரெண்டுமூணு மாசத்துல சரியாப்போகும். நீங்க குடுக்குற காச நான் வாங்குனா தப்பும் செஞ்சிட்டு அதுக்கு காசும் வாங்குன பாவம் வந்துரும் அது அந்த வளருற பையனுக்கு நல்லதில்ல நீங்க ஒண்ணும் நெனைக்க வேணாம் . போய்ட்டு வாங்கன்னு சொல்லிச்சு
அதோட பெருந்தன்மையப்பாத்து இவன் பிரமிச்சிப்போய் நின்னான்.
No comments:
Post a Comment