உதாரணத்துக்காக திரைப்பட நடிகர்களைப் பயன்படுத்துகிறேன். எல்லோருக்கும் எளிதாகப் புரியவேண்டும் என்பதற்காக....
@ நடிகர் சூர்யா வசதியாகப் பிறந்தார், வசதியாக வளர்ந்தார், வசதியாக இருக்கிறார் அவரது வாழ்க்கை முழுக்க வசதி.
@ அடுத்து எம்.ஜி.ஆர் ஏழ்மையில் பிறந்தார், வறுமையில் வளர்ந்தார், செழிப்பாக இருந்தார், செழிப்பாக மறைந்தார்.
@ அடுத்து ராமராஜன் வறுமையில் பிறந்தார், வறுமையில் வளர்ந்தார், செழுமையில் சிலகாலம் வாழ்ந்தார், மீண்டும் வசதிகுறைந்தார்.
@ அடுத்து தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் சோறுண்ட தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார். பிற்காலத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்து அதன்பின் மடிந்தார்.
@ இப்படி வறுமையிலே பிறந்து, வறுமையிலே வளர்ந்து, வறுமையிலே வாழ்ந்து, வளமையென்றால் என்னவென்றே அறியாமல் வறுமையிலேயே மடிந்தவர்களும் இருக்கின்றார்கள்.
எல்லோருமே நடிகர்கள்தான் ஆனால் அவர்கள் வாழ்ந்தவிதத்திலேதான் வித்தியாசம். ஒருவருக்கமைவதுபோன்ற வாழ்க்கை அடுத்தவருக்கு அமைவதில்லை.
உன் வாழ்க்கை உன் கையில் என்பதெல்லாம் பொய். நாம் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே தீரவேண்டுமென்பது விதி. விதியை மதியால் வெல்லலாம் என நான் ஒருகாலத்தில் நினைத்ததுண்டு. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அந்த சிந்தனை மாறியது. பிச்சைக்காரனாக தெருவில் அலைந்த ஒரு முன்னாள் செல்வந்தரைக் கண்டவுடன் வாழ்க்கை பற்றிய என் கணக்கு வேறாக மாறியது. சாலையில் திரியும் ஒவ்வொரு பைத்தியமும் ஒவ்வொரு பிச்சைக்காரனும் உங்களையும் என்னையும்போல் ஏன் பலசமயங்களில் நம்மைவிடச் சிறப்பாக ஒருகாலத்தில் வாழ்ந்தவன்தான். என்றாவது அவர்களை நாம் நின்று கவனித்ததுண்டா? எதனால் அவன் இப்படி ஆனான்? என்ன காரணத்தால் அவன் ரோட்டில் திரிகிறான் நம்மில் எவராவது கேட்டதுண்டா? நம்மைப்பொறுத்தவரை அவன் ஒரு பிச்சைக்காரன் அப்படித்தான் இருப்பான் என்ற நினைப்பு உறுதியாகிவிட்டதுதான் காரணம். நம்மை பாதிக்காத எந்த செய்தியும் நமக்கு மற்றுமொரு நிகழ்வே. யார்கண்டது? நாளையே நீங்களும் நானும் அந்த நிலைக்கு மாறக்கூடும். அது எப்படி முடியும்? நான் அரசு அதிகாரியாக இருக்கிறேன். ஊர்முழுக்க சொந்தபந்தங்கள் இருக்கிறார்கள். சொத்துபத்து இருக்கிறது அது எப்படி நிகழும் என்கிறீர்களா? உங்கள் மூளையில் உண்டாகும் ஒரு சிறு அதிர்வு உங்களுக்கு சித்தம்கலங்கவைத்து இந்த நிலைக்கு மாற்றிவிடும், மறுக்க முடியுமா உங்களால்?
இங்கே எந்தநிலையும் நமக்கு உறுதியான பாதுகாப்பான நிலையல்ல. ஒரு நிமிடத்தில் நம் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடலாம். அதற்கான சான்றுகள் இங்கே ஏராளம். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தில்தான் நான் முதன்முதலாகப் பட்டினத்தாரைப் படித்தேன். அவர் எனக்குள் விளைவித்த கேள்விகள் பல. என்னையறியாமலேயே பட்டினத்தார் என்னை ஆட்கொண்டார். பலதலைமுறைக்கும் அழியாத சொத்துபத்து நிறைந்திருந்த அவர் ஒரு கரும்பைக் கையில் எடுத்துக்கொண்டு கோவணத்தைக் கட்டிக்கொண்டு திருவோட்டைக் கையில் வைத்திருந்தால் அதுவொரு சொத்தாகிவிடுமென்று அதைக்கூடத் தூக்கியெறிந்து ஊரூராய்த் திரிந்த நிகழ்ச்சி என்னை ஒரு உலுக்கு உலுக்கியது. வாழ்க்கையென்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்துமுடிப்பவர் பலர், வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயற்சித்து அது முடியாமலேயே முடிந்துபோனவர் பலர். ஆனால் பட்டினத்தார், புத்தன் போன்றவர்கள் வாழ்க்கை எதற்காக என்ற சூட்சுமத்தைக் கண்டுபிடித்துவிட்டனர். அதனால்தான் அந்தவகையான பற்றற்ற வாழ்க்கையைக் கடைசிவரை அவர்களால் வாழ முடிந்திருக்கிறது. அந்த ஞானமும்கூட அவர்கள் நெடுங்காலம் சிந்தித்ததால் விளைந்த ஞானமல்ல. இதோ இப்போது நான் சொல்லிக்கொண்டிருக்கிறேனே இந்த அளவுகூட அவர்கள் சிந்தித்திருக்கமாட்டார்கள். சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும்போதுதான் ஒருநாள் திடீரென யாக்கை நிலையாமையும் வாழ்வின் சூட்சுமமும் அவர்களுக்குப் புரிந்துபோயிற்று. ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்ற நிதர்சனமும், ‘துன்பத்திற்குக் காரணம் ஆசையே’ என்ற தத்துவமும் தேடிவந்து அவர்களைப்பற்றியது.
அதற்காக நிலையற்ற தன்மையை எண்ணியெண்ணி இருக்கும் வாழ்வைப் பற்றற்றுக் கடத்த வேண்டுமென்பதில்லை. சித்தார்த்தனுக்கும், பட்டினத்தாருக்கும் ஏற்பட்ட ஞானோதயத்தை நாம் தேடிச்சென்று அடையவேண்டுமென்ற அவசியமுமில்லை. என்னதான் சொல்லவருகிறாய் என்கிறீர்களா? சொல்கிறேன். ஞானப்பெருவாழ்வு வாய்த்தவர்கள் மட்டுமே அதனை வாழ்வதுதான் நல்லது. எவரும் வலிய முயற்சிசெய்து அதனை வாழ்வதென்பது சாத்தியமாகாது. மற்றவர்கள் வாய்த்த வாழ்க்கையை நிறைவானதாக வாழ்ந்தால் போதும். எது நிறைவான வாழ்வு என்ற கேள்வி இங்கே எழும். வாழ்க்கைச்சூழலை நாம் என்னதான் அமைத்துக்கொள்ள முனைந்தாலும் நம் எண்ணத்திற்கேற்ப முன்வினைகளும் இன்னும்பல விவரிக்கமுடியாத கோர்வைகளும் ஒருசேரத்திரண்டு வந்தால்தான் வாழ்க்கையின் பாதை நாம் நினைக்கும்படியாக அமையும். நாம் பிறக்கும் வயிறுமுதற்கொண்டு அமைத்துக்கொள்ளும் வாழ்க்கைத்துணை, பார்க்கும் மனிதர்கள், அமையும் எதிரிகள், காரியங்களால் விளையும் பலன்கள் என எதுவும் நம் கையில் இல்லை.
எப்படி நம் முகத்தை நம்மால் தேர்வுசெய்ய முடியாதோ, எப்படி நம் பெற்றோரை நம்மால் தேர்வுசெய்ய முடியாதோ, எப்படி இறப்பை நம்மால் தேர்வுசெய்ய முடியாதோ, எப்படி நம் உணவைக்கூட நம்மால் செரிக்கவைக்க முடியாதோ அப்படியே வாழ்வின் போக்கையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. இல்லையே நான் ஆசிரியனாக ஆசைப்பட்டேன் அதன்படியே ஆகிவிட்டேன் என்று சொல்வீர்களானால் நீங்கள் முன்குறிக்கப்பட்டதையே ஆசைப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள். முன்குறிக்கப்பட்டதை நாம் ஆசைப்படலாம் ஆனால் நாம் ஆசைப்பட்டதெல்லாம் முன்குறிக்கப்பட்டிருக்காது. அதனால்தான் எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற மனிதன் என்று இங்கே எவனுமில்லை. அதனால் அவனைவிட நாம் உயர்ந்தவன் இவனைவிட நாம் தாழ்ந்தவன் என்ற முடிவிற்கு எப்போதும் வராதீர்கள். அவனுக்குக் கிடைத்தது நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.
No comments:
Post a Comment