திருமலா திருப்பதியில் வயதானவர் தரிசனத்துக்கான வரிசையில் கூட்டத்துடன் கூட்டமாக, பெருமாளின் அழைப்புக்காக ஏங்கி, வாய் கோவிந்தா கோவிந்தா என்று ஸ்மரிக்க, நானும் என் கணவரும் அமர்ந்திருக்கிறோம். எங்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு இன்னும் இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கணும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, November 16, 2023
கோவிந்தா கோவிந்தா கோஷம்.
"ஏம்மா. இவர் உன் அப்பாவா?"
"அப்பா மாதிரிதான். ஆனால் அப்பா இல்லை"
நான் புரியாமல் விழிப்பதைப் பார்த்த அந்தப் பெண் புன்முறுவலுடன்,
"நான் இங்க கோவிலுக்கு வாலண்டியரா வந்திருக்கறவ..இந்தப் பெரியவர் யாருன்னே தெரியாது. இவருடைய மகனும் மருமகளும் என்னிடம், இந்த தரிசனத்துக்கு அவர்கள் அனுமதி இல்லாததால் இவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்காங்க. இவர் தரிசனம் முடியும் வரை உடனிருந்து, அவர் தேவைகளைக் கவனித்து, கடைசியில் வெளியில் காத்திருக்கும் இவர் குடும்பத்தவரிடம் ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு.
அதனால்தான் பால், உணவு முதலியவை வாங்கி வந்து கொடுத்தேன். வாஷ்ரூம் போக வேண்டுமானால் அழைத்துச் செல்ல வேண்டும். பகவானை சேவிக்க வந்த இந்தப் பெரியவருக்கு சேவை செய்வது, அந்த பகவானுக்கே சேவை செய்வதற்குச் சமம். இதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றாள்.
அவளது பதிலால் அசந்து போன நான், "பெற்ற குழந்தைகளே வயதானவர்களை அலட்சியம் செய்யும் இந்தக் காலத்தில் உன் உயர்ந்த பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. உனக்கு விருப்பமிருந்தால் உன்னைப் பற்றிச்
சொல்லேன்" என்றேன்.
"நான் ஒரு சாதாரண பெண். பெயர் சாரதா. கடவுள் பக்தியோ, பெரியவர்களிடம் அன்பு மரியாதையோ எதுவும் இல்லாதிருந்தவள். ஒரு பாங்க்கில் அட்டெண்டர் வேலை எனக்கு. என் கணவர் கார்பெண்டர். பத்து வருஷம் குழந்தை இல்லாமல் இருந்து ஒரு பிள்ளை பிறந்தான். கர்ப்பபை கோளாறு காரணமாக அதை பிரசவத்தின் போது எடுத்து விட்டார்கள். ஒரே பையனாதலால்
பையனை கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தோம். ஆனால் விதி. மூணாங்க்ளாஸ் படிக்கும் போது பள்ளியில் விளையாட்டு நேரத்தில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு கோமாவுக்குப் போய் விட்டான்.
எனக்கு உலகமே இருண்டு விட்டது. எங்கள் நிலைமைக்குமீறி செலவு செய்தோம். பலன் இல்லை. டாக்டர்கள், இனிமேல் கடவுள்தான் உங்கள் குழந்தையைக் காப்பாத்தணும், என்று கையை விரித்து விட்டார்கள்.
கடவுள் என்ன செய்ய முடியும், நம் அறிவு, உழைப்பு, அதிர் ஷ்டம் இவைகளே நம்மை வாழ வைக்கும் என்னும் கொள்கையுடைய நான் அதைக்கேட்டு நிலை குலைந்தேன். கல்லு சாமியால என்ன செய்ய முடியும்னு திமிரோட நம்பாத பகவானை எப்படி வேண்டுவது என்ற முறை கூட தெரியாதவள்.
எங்கள் பாங்கில் மங்களா என்ற ஒரு க்ளார்க் இருக்கிறார். எனக்கு தோழி. என்னைப்பற்றி நன்கு அறிந்தவள். அடிக்கடி என்னிடம், "நீ விரும்பா விட்டாலும் கடவுள் விருப்பப்பட்டால் தன்னிடம் உன்னை எப்படியாவது இழுத்துக்கொள்வார். கடவுளை இழிவாகப் பேசாதே" என்று அறிவுறை கூறுவாள். அவள் சொல்லும் போது அலட்சியமாகச் சிரித்தபடி அவள் பேச்சைக் கண்டுக்கவே மாட்டேன்.
ஐந்தாறு மாதமாக பணத்தாலும், சரீரத்தாலும், மனதாலும் நான் படும் கஷ்டத்தைப் பார்த்த அவள் எனக்கு ஒரு யோசனை சொன்னாள். அதைக் கேட்ட நான் ஆத்திரத்துடன், "என்னைப் பற்றி நன்கு தெரிந்தும் எப்படி எனக்கு இதைச்சொல்கிறாய்?" என்று சத்தம் போட்டேன். அவள் சொன்னதைக் கேக்க மனசு ஒப்பவில்லை. நம்பிக்கையும் இல்லை.
ஆனால் அவள் கொடுத்த போதனையா, இல்லை, என் மனதின் எங்கோ ஓஓஓஓ ஒரு மூலையில் இருந்த, இவ சொல்றத கேட்டுதான் பாப்பமே .. என்ற எண்ணமா தெரில்ல. கடைசியா அவ சொன்னதுக்குச் சம்மதித்தேன். ஆனா மாமி...அந்த யோசனை என் வாழ்க்கையை, என் கணத்தை அப்படியே புரட்டிப் போட்டுடுத்து"
பக்கத்திலிருந்த தாத்தா சிறுநீர் கழிக்க
விரும்பியதால் அவள் அவரை அழைத்துப் போனாள். "அப்படி என்ன விஷயமா இருக்கும்" என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன்.
பெரியவரை திரும்ப அழைத்து வந்து, இருக்கையில் அமரச் செய்து, அவரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவரைத் தண்ணீர் குடிக்கச்செய்தபின், "அப்பா. பால், சாப்பாடு எதாவது கொண்டு வரட்டுமா?என்று வினவினாள்.
திருமலையில் யாரும் பசித்திருக்கக் கூடாது என்பது அந்தக் கடவுளின் விருப்பம் என்பது போல் நாள் முழுதும் இலவசச் சாப்பாடு, நீர், பால் முதலியவை கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பெரியவர் தமாஷாக, "போதும் மகளே. இப்படி சாப்பிட்ட வண்ணம் இருந்தால் பகவான் சன்னதிக்குப் பதில் இந்த வாஷ்ரூம் கதவைத் தட்டும்படி ஆகி விடும். நீ என்னால் தடைப்பட்ட உன் கதையைத் தொடரலாம். எனக்கும் கேட்க மிக ஆவலாக இருக்கு"என்றார்.
சிரித்தபடி அந்தப் பெண் எங்களைப் பார்த்துத் தொடர்கிறாள்.
"மங்களா என்னைப் பார்த்துச் சொன்னது இது தான்.... நீ ஒரு முறை திருமலையில் சேவை செய்ய வாலண்டியராக என்னுடன் வா. ஒரு வாரம் அங்கே இருக்கலாம். உன் கோரிக்கையை பகவான் காதில் போடு. இரவு பகல் கதறு. பிறகு நடப்பதைப் பார்...
அதைக் கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. கோமாவில் இருக்கும் குழந்தையை அம்போன்னு விட்டுட்டு, திருமலைக்குப் போய்த் தங்கணுமாம். அதுவும் ஒரு வாரம். உடனே என் பிள்ளை எழுந்து ஓடுவானாம். நம்பற விஷயமா? அதுவும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ஜருகண்டி ஜருகண்டி ன்னு சொன்னபடி நிக்கணும். இது பேர் சேவை. இதெல்லாம நம்மால் ஆகாது...என் மனதில் தோன்றியதை அப்படியே மங்களாவிடம் சொன்னேன்.
அதற்கு அவள், " நீ நினைப்பது தவறு. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. உணவகத்தில் சாப்பாடு பறிமாறலாம். இயலாதவர்க்கு தரிசனம் செய்து வைக்கலாம். எவ்வளவோ விதத்தில் தரிசனத்துக்கு வந்தவர்களுக்கு உதவலாம்." "எனது அடியார்க்கு அடியவரின் அடியார்க்கு நான் அடிமை" என்று பகவான் சொல்வார்.
அதாவது, தன்னைத் துதிக்கும் பக்தர்களை வணங்கும் பக்தர்களுக்குக் கடவுள் அடிமை போல் கேட்டதைச் செய்வார்... என்று பொருள். நீ அங்குவரும் தொண்டர்களுக்கு உதவியாய் இருந்தால், உன் கோரிக்கையைக்கடவுள் கண்டிப்பாக நிறைவேற்றுவார். யோசித்துச் சொல்." என்றாள்.
நான் இரவு பூரா யோசித்தேன். கணவரிடமும் இதைப் பத்திப் பேசினேன். நான் கோவிலுக்குப் போகலாமா என்று யோசித்ததே அவருக்குப் பேரானந்தம். "கவலைப்படாதே. ஒரு வாரம் தானே. நான் வேலைக்குப் போகாமல் குழந்தையைப் பாத்துக்கறேன். ஊர்லேந்து அம்மாவை வரவழைக்கறேன். நாம் கடைசியா இதயும் செஞ்சு பாத்துடுவோம். நீ உன் பயணத்துக்கு ஏற்பாடு பண்ணு' அப்டின்னு உற்சாகப் படுத்தினார்.
மறு நாள் மங்களாவிடம் என் ஒப்புதலைச் சொன்னதும் அவள் ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தாள்.மங்களா வசிக்கும் ஏரியாவில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூசாரி, திருமலையில் சேவை செய்யவிரும்பும் வாலண்டியர்களுக்கு உதவும் ஒரு ஏஜண்ட். வருஷத்துக்கு ஒரு முறை பத்து பேருக்கு, வேண்டிய உதவிகள் செய்வார். படிவம் பூர்த்தி செய்து, ஸ்லாட் கிடைக்கும் வரை காத்திருக்கணும். மாதக் கணக்காகும். ஏனென்றால் அங்கு வாலண்டியர் ஆவதற்கு அவ்வளவு டிமாண்ட். உலகெங்கும் இருப்போர் ஏங்கித்தவம் இருப்பார்கள். மங்களா எனக்கும் அவளுக்கும் இன்னும் மூன்று பாங்க் சிநேகிதிக்கும் அப்ளை செய்ய வைத்தாள். அவள் வருடம் தவறாமல் சேவைக்குச் செல்வதால் எல்லாம் தெரிந்திருந்தது.
அப்ளிகேஷன் அனுப்பி ஐந்து மாதம் கழித்து எங்களுக்கு ஸ்லாட் கிடைத்தது.
குழந்தையைப் பிரிய மனமில்லாமல் கண்ணீருடன் கிளம்பினேன். நம்பிக்கையோடு போ என்று என் கணவர் ஊக்குவி த்தார். உண்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனோ பாவத்தில் இதையும்தான் செய்து பார்ப்போமே என்றுதான் கிளம்பினேன்.பெரிய கூட்டமாகக் கிளம்பி திருப்பதி வந்தடைந்தோம். ஏதோ இனம் தெரியாத மாற்றம் மனதில். ப்ரம்மாண்ட ஏழுமலை என்னை கைநீட்டி அரவணைத்து வரவேற்பது போல் மனதில் ஒரு மின்னல். தலையைக் குலுக்கிக் கொண்டேன். மலை ஏறும் போது வீசிய தென்றல், தூசுகளைத் துரத்தும் காற்று போல் என் மனதின் கவலைகளை தூரத்தள்ளிக் கொண்டிருப்பதை அப்பட்டமாக உணர முடிந்தது. மெள்ள மெள்ள என்னை, நான் யார் என்பதை மறந்து, சூழ்நிலைக்கு அடிமையானேன்.
அதுதானே இந்தக் கடவுளின் தந்திரம். நீ எதற்கு வந்தாய். என்ன கேக்கணும் என்பதையெல்லாம் அடியோடு மறக்கடித்து விடுவாரே.
அவர்கள் அளித்த தங்குமிடத்திற்குச்சென்று, குளித்து, வாலண்டியருக்கான சீருடை அணிந்து மீட்டிங் ஹாலுக்குச் சென்றோம். ஆதார் கார்ட், மற்ற விவரங்கள் எல்லாம் செக் செய்து பின் எல்லோருக்கும் எந்தெந்த இடத்தில் என்ன வித வேலை என்று ஒதுக்கினார் அந்த சூப்பர்வைசர்.
மங்களாவுக்கு டைனிங் ஹால் வளாகத்திலும், எங்களுடன் வந்த இருவருக்கு லட்டு ப்ரசாதம் வழங்குமிடத்திலும்,
இன்னொருத்திக்கு செருப்புகள் பராமரித்து டோக்கன் வழங்குமிடத்திலும் வேலை ஒதுக்கப்பட்டது. எனக்கு எங்கே என்கிறீர்களா? கேட்டால் மூர்ச்சை ஆகி விடுவீர்கள்.ஏன்னா..
எனக்கும் அப்போ அப்படிதான் இருந்தது."
சாரதா தொடர்கிறாள்.
ஏழுமலையை தூரத்திலிருந்து பார்த்தவுடன் மனதில் தோன்றிய வேண்டப்பட்டவா கிட்ட வந்துட்டோம்ங்கற உணர்வு, மலையேறும் போது அன்புக்கரங்கள் ஆதரவாகத் தடவுவது போல் ஏற்பட்ட நிம்மதி, ஊர்தியிலிருந்து இறங்கிக் கீழே கால் வைத்ததும் ஏற்பட்ட இனம் தெரியாத அதிர்வு எல்லாமே
நான் இதுவரை அனுபவிக்காதவையாக இருந்தாலும், எங்கள் சூப்பர் வைசர் என்னைப் பார்த்து,
"உனக்கான இடம் பகவான் சன்னதிம்மா. வழக்கமாக அங்கு போலிஸ்காரர்கள் மட்டுமே அனுமதி. வாலண்டியர்ஸ் அதிகம் கிடையாது. ஆனால் கூட்டம் அதிகமாக இருப்பதாலும் வழக்கமாக வரும் பெண் போலிஸ் விடுமுறையில் இருப்பதாலும் உனக்கு இந்த பாக்கியம் கிடைச்சிருக்கு" என்றதும் கண்களில் இருந்து ஆறாக நீர் பெருகுவது எனக்கே வினோதமா இருக்கு.
கடவுளையே நம்பாத நான் எங்கிருந்தால் என்ன என்று இல்லாமல் ஏதோ கிடைத்தற்கரியது கிடைக்கப்பெற்றார்போல் ஏன் உணர்ச்சி வசப்பட வேண்டும்? என்னுள் என்ன நிகழ்கிறது? எனக்கு எதுவுமே பரியல்லே. மங்களா என்னிடம் வந்து, "இது அதோ அந்த கடவுள் செயல். பல வருடங்களாக வந்து கொண்டிருக்கும் எங்களுக்கெல்லாம் கிடைக்காத பேரருள் உனக்குக் கிடைச்சுருக்கு. நீ ட்யூட்டியில் இருக்கும் போது நீ அவரைப் பாத்துண்டே இருக்கியோ இல்லையோ, அவர் உன்னைத்தன் கண் பார்வையில் வைத்திருப்பார். என்ன மாதிரி பாக்கியம்.? வாழ்த்துக்கள்" என்றாள்.
என்ன நடக்கிறது என்று புரியாமலே அவர்கள் பின் சென்றேன். வாழ்வில் முதன் முதலாக கோவில் வாசப்படியை மிதிக்கிறேன். வழியெங்கும் கூட்டம். கோவிந்தா கோஷம். என் வாய் என்னை மீறி கோவிந்தா கோவிந்தா என்று அறட்டுகிறது.
அனைத்தையும் கடந்து சன்னதிக்குள் நுழைந்தேன்.
"எல்லா துன்பங்களையும் பின்னுக்குத் தள்ளி என் முன் வந்து விட்டாயா" என்று கேட்பது போன்ற ப்ரமை.
என்னை மறந்தேன். எதற்காக வந்தேன் என்பதை மறந்தேன். என் குடும்பம், கணவன், மகன், பந்தம், பாசம் அனைத்தையும் மறந்த பரவசம் ஆட்கொண்டது.
சூப்பர் வைசரின் அழைப்பு என்னை இந்த உலகுக்குக் கொண்டு வந்தது. செய்ய வேண்டிய வேலைகளை விளக்கி விட்டு அவர் விலகிச்சென்றார்.
காணாது கண்ட சந்தோஷத்தில் வேலையைக் கவனித்தேன். மங்களா சொன்னது போல் கூட்ட வரிசையை ஒழுங்கு படுத்துவதில் மும்முரமாக இருந்ததால் பகவானைப் பாக்கத் திரும்ப முடியலை. ஆனால் அவர் அருட்பார்வையை விட்டு நான் அகலவில்லை என்பதே என்னுள் பேரானந்தத்தைக் கொடுத்தது.
மூன்று நாள் இதே அனுபவம். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம். ஆசை தீர அவர் அருளை அனுபவித்தேன். அவர் கருணை அத்துடன் நிற்கவில்லை.
திடீரென எனக்கு மூன்று நாள் அலமேலு மங்காபுரத்தில் லட்டு ப்ரசாத கவுண்டரில் ட்யூட்டி. மகாலெட்சுமி அருளும் உனக்கிருக்கிறது என்று பகவான் உணர்த்துகிறாரோ.
அங்கு தினமும் ட்யூட்டி முடிந்து ஆனந்தமாக மகாலெட்சுமியை வணங்குவேன். சொல்லத் தெரியாத அளவு ஆனந்தம் நிறைவு த்ருப்தியுடன் எங்கள் பேட்ச் சிநேகிதிருடன் ஊர் திரும்பினேன்.
நான் புறப்படும் போது என் கணவர் என் மொபைலைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, "இது இருந்தால் உனக்கு வேலையே ஓடாது. குழந்தையைப் பற்றியே கவலைப்பட்டு போன் செய்வாய். வேலையில் நாட்டம் போகாது. ஏதாவது ஒரு அவசரம்னா மங்களாவிடம் சொல்லு போதும்"என்று கூறி விட்டார்.
இப்போ வரும் விவரம் சொல்லலாம்னா, "அதான் நேரில் போறமே. எல்லாம் விவரமா சொல்லிக்கலாம்" என்று தோன்றி அந்த எண்ணத்தைக் கைவிட்டு பகவான் நினைப்பில் மூழ்கி விட்டேன்.
மங்களாவுக்குக் கோடானு கோடி நன்றி சொல்லி விட்டு வீட்டினுள் நுழைந்தேன். ஒரு வாரமாக என்னை விட்டு விலகியிருந்த அனைத்து ஆசாபாசங்களும் பசக் என்று ஒட்டிக் கொண்டன..
ஒரே ஓட்டமாக குழந்தையின் படுக்கைக்கு ஓடினேன். படுக்கை காலியாக இருந்தது. என் அடிவயிற்றிலிருந்து பேரலறல் கிளம்பியது.
"ஐயோ. என் செல்வமே. உன்னை விட்டுட்டுப் போனதால் கோவத்தில் கடைசியா என்னைப் பாக்கக்கூடப் பிடிக்காமல் போயிட்டயா" என்ற என் அலறலைக் கேட்ட அம்மா வெளியே ஓடி வந்து, "ஏண்டி அலர்ற? ஒம்புள்ள ஆஸ்பத்திரில இருக்கான்" என்றதும் வயிற்றில் நெருப்பைக் கட்டிண்டு ஓடினேன்.
ஆஹாஹா. இது நிஜமா? கண்களைக் கசக்கிக் கொண்டேன். அதோ என் செல்லமகன் படுக்கையில் அமர்ந்து ஏதோ பொம்மையுடன் விளையாட்றான். அவன் அப்பா அவனுக்கு இட்லி ஊட்டிண்ட்ருக்கார். என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை. ஓடிப் போய் கண்ணில் நீர்பெருக அணைத்துக் கொண்டேன். என் கணவரும் ஆனந்தக் கண்ணீருடன் எங்கள் இருவரையும் அணைத்துக் கொண்டார்.
நடந்தது இதுதானாம். நான் கிளம்பி இரு நாட்களில் என் பிள்ளை கை கால் விரல்களை அசைத்திருக்கிறான். என் கணவர் கவனிக்கலை போல. மூன்றாம் நாள் கண் விழிகள் உருண்டதை, என் கணவர் குளிக்கப் போயிருந்ததால், குழந்தையுடன் இருந்த அம்மா பாத்துட்டு அவரிடம் சொல்லியிருக்கார். ஆனால் என் கணவர் நம்பல்லை. அன்று இரவு அவர் அயர்ந்து தூங்கும் போது அவன் அம்மா அம்மான்னு கூப்ட்ருக்கான். கனவுன்னு நெனச்சுக் கண்ணத் தொறந்தா, அது நெஜம். மறுநாள் விடிந்ததும் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை நடக்கிறது. படிப்படியாக நார்மல் ஆகிக் கொண்டிருக்கான். இந்த விவரம் எல்லாம் மங்களாவுக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஆனந்த அதி ர்ச்சி கொடுக்கும் பொருட்டு மறைத்திருக்கிறாள்.
எல்லா விவரமும் அறிந்து மகிழ்ச்சி பெருக்கெடுக்க குழந்தையுடன் கொஞ்சி நிமிர்ந்து பார்த்தால் படுக்கையின் தலைமாட்டில் திருப்பதி ஸ்வாமி படமாக நின்று என்னைப் பார்த்து ஆசிர்வதிக்கிறார்.
அப்போதிருந்து நான் தவறாமல் வருடா வருடம் வாலண்டியராக இங்கு வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கிடைத்தற்கரிய பாக்கியமாக ஒரு சேவை/அனுபவம் கிடைக்கும். இதோ இப்போ பாருங்கள், சிறு வயதிலேயே அப்பாவை இழந்த நான் இந்த அப்பாவுக்குச் சில நிமிடங்களாவது ஒத்தாசை செய்யும் அனுபவம் கிடைத்துள்ளது. எல்லாம் அவன் அருள்."
அவள் முடித்ததும் கோவிந்தா கோவிந்தா கோஷம். ஆம் நாங்கள் உள்ளே செல்லலாம் என்ற அறிவிப்புடன் மண்டப கேட் திறக்கப்பட்டது. பெரியவரையும் அவரை அணைத்தபடி நடக்கும் சாரதாவையும் முன்னே விட்டு நாங்கள் பின்னே சென்றோம்.
"ஹே கோவிந்தா. ஒவ்வொருவர் வாழ்விலும் அவரவர் வாழ்வு இன்பமயமாக்க நீ எவ்வளவு அற்புதங்கள் நிகழ்த்துகிறாய். ஏழை பணக்காரர், வேண்டியவர், வேண்டாதவர், உன்னைப் போற்றுவோர், தூற்றுவோர் என பாகுபாடின்றி அனைவரையும் உன் கருணை மழையால் குளிப்பாட்டுகிறாயா. நன்றி உணர்வோடு அனைவரும் தரிசிக்கவருவதால்தான் இவ்வளவு கூட்டமா? இங்குள்ள அத்தனை பேர் வாழ்விலும் என்னென்ன அற்புதங்கள் நிகழ்த்தினாயோ? கோவிந்தா. கோவிந்தா..கோவிந்தா"
என்றபடி வரிசையில் முன்னேறினேன்...
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment