விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்தது. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். முருகன் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.
வைகாசி விசாகம் :
எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் தேவர்களுக்கு துன்பம் நேர்ந்தது. பல ஆண்டுகாலமாக துன்பங்களை அனுபவித்த தேவர்கள், சிவ பெருமானை நோக்கி தவம் இருந்தனர்.
இறுதியாக சிவபெருமானை தரிசித்து தங்கள் துயரங்களை போக்கும்படி கூறி மன்றாடுவது எப்படி என்று விஷ்ணுவிடம் தேவர்கள் அனைவரும் சென்று கேட்டனர். அதற்கு அவர், சிவபெருமானின் அம்சத்தில் உருவாகும் குமாரனால் தான் சூரபத்மனுக்கு அழிவு நேரும். பார்வதியின் மீது சிவபெருமானுக்கு மையல் வரும் வகையில், மன்மதனை கொண்டு காம பாணம் தொடுக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்.
அதன்படி பிரம்மதேவர், மன்மதனை அழைத்து, சிவ பெருமான் மீது மன்மத அம்பு தொடுக்கும்படி கூறினார். நெருப்பே வடிவான ஈசனின் கோபத்தைப் பற்றி தெரிந்த மன்மதன், பயந்து எவ்வளவோ மறுத்தும், இறுதியில் என் சாபத்திற்கு ஆளாவாய்! என்ற பிரம்மதேவரின் மிரட்டலுக்கு பின் அடிபணிந்தான் மன்மதன்.
நந்தி தேவரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்ற மன்மதன், யோக நிலையில் இருந்த சிவனின் மீது காம பாணத்தை தொடுத்தான். அந்த அம்பு அவரை தொடும் முன்பாகவே, அனைத்தும் அறிந்த ஈசன் தன் நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிப் போய்விட்டனர்.
அவர்கள், ஈசனின் முன்போய் அவரை துதித்து பாடத்தொடங்கினர். சாந்த நிலைக்கு வந்த ஈசன், இமயமலை சென்று பார்வதியை மணம் முடித்து கயிலாயம் திரும்பினார். அப்போது தேவர்கள் சூரபத்மனை அழிக்கும் வகையில், உங்களுக்கு நிகரான மைந்தனை தாங்கள் தந்தருள வேண்டும் என்று வேண்டினர்.
தேவர்களுக்கு மேலும் துன்பம் அளிக்க விரும்பாத சிவபெருமான், அவரின் ஆறு முகத்தில் இருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி பொருந்திய அந்த தீப்பொறிகள் வெளிக்கொணர்ந்த சத்தமும், வெப்பமும் தேவர்கள் அனைவரையும் நடுநடுங்கச் செய்தன.
பின்னர், அந்த ஆறு தீப்பொறிகளையும் கங்கையில் விடும்படி அக்னி மற்றும் வாயு தேவர்களுக்கு சிவபெருமான் உத்தரவிட்டார். அவர்கள் அதனை கங்கையில் சேர்த்தனர். கங்கை அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்ப்பித்தது. அங்கு ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகிய திருவுருவம் கொண்ட குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை ஆறு தாமரை மலர்கள் தாங்கின.
வானவர்களுக்கும், வையகத்தில் அனைவருக்கும் வாழ்வளிக்க வந்து விட்டான் ஆறுமுகப் பெருமான் என்று எங்கும் ஒரே முழக்கம். சிவ பெருமான், அம்பிகையுடன் சரவணப் பொய்கைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அம்பிகை ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக்கி தன் கையில் அள்ளி, ஞானப்பால் பருகக் கொடுத்தார்.
அன்னையின் கையில் தவழ்ந்து, ஞானப்பால் குடித்து தாகம் தணிந்ததும் ஆறுமுகக் கடவுள் சிரித்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது. தேவர்களுக்கு அந்த அழகு சிரிப்பில், சூரபத்மனின் அழிவு கண்கூடாக தெரிந்தது.
பலன்கள் :
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும்.
வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.
வைகாசி விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.
No comments:
Post a Comment