திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் பங்கேற்றது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் உள்ளார். மாவட்ட கட்சி அலுவலகம், திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது.
ஆலோசனை
கொரோனா தடுப்பு தொடர்பாக, மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பங்கேற்றனர்.
அழைத்ததில்லை
தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் மற்றும் கமிஷனர்கள் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது: மிகவும் மோசமான முன்னுதாரணத்தை, திருச்சி கலெக்டர் ஏற்படுத்தி உள்ளார். மீட்டிங் நடத்த வேறு இடமே இல்லையா? அமைச்சர் அழைத்தால் கூட, 'கட்சி அலுவலகத்தில் நடக்கிறது; வர முடியாது' என, கலெக்டர் மற்றும் கமிஷனர்கள் தவிர்த்து இருக்கலாம்.

ஆனால், எந்த நோக்கத்தில் சென்றனர் என தெரியவில்லை. சீனியர் அமைச்சர் நேரு கூட, தன் கட்சி அலுவலகத்துக்கு எந்த அரசு அதிகாரியையும் ஆலோசனைக்கு அழைத்ததில்லை. எதிர்காலத்தில், அனைத்து அமைச்சர்களும், தங்களின் கட்சி அலுவலகத்துக்கு அரசு உயர் அதிகாரிகளை வரவழைத்து பேசக்கூடிய முன்னுதாரணத்தை, இந்த அதிகாரிகள் ஏற்படுத்தி விட்டனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment