பல கோடி ரூபாய் சொத்து விவகாரம் தொடர்பாக, ம.தி.மு.க., அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமிக்கும், தலைமை நிலைய செயலர் துரை வைகோ ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சி பொதுச் செயலர் வைகோ, டில்லியில் இருந்தபடி பஞ்சாயத்து நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.ம.தி.மு.க., தலைமை நிலைய செயலராக வைகோ மகன் துரை நியமிக்கப்பட்டதற்கு, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கட்சியை விட்டு விலகினர்.
'ம.தி.மு.க.,வை நான்கைந்து பேர் சேர்ந்து கைப்பற்ற நினைக்கின்றனர். அது நடக்காது; நடக்க விடமாட்டேன்' என, துரை வைகோ, திருமண விழாவில் பேசினார்.இந்நிலையில், ம.தி.மு.க., தொழிற்சங்கத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்களை, திருப்பூர் துரைசாமி, தன் பெயரில் அதாவது 'துரைசாமி அறக்கட்டளை' என மாற்றி விட்டதாக, துரை ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக, திருப்பூர் துரைசாமிக்கு, ம.தி.மு.க., தீர்மான குழு உறுப்பினர் மு.கிருஷ்ணசாமி எழுதிய கடிதம்:பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வியர்வையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை, துரைசாமி அறக்கட்டளை என மாற்ற, உங்களுக்கு எப்படி மனம் வந்தது;
மனச்சாட்சி இல்லாத மனித நேயம் அற்ற சுயநலவாதியான, உங்களிடத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?நான் துணைச் செயலராக இருந்து கட்டட நிதியாக, 12 நாள் சம்பளத்தை கொடுத்துள்ளேன். 193 பேர் கொண்ட துணைக் குழுவை சார்ந்தவர்கள் சந்தா, போனஸ், நன்கொடை, கட்டட நிதி, தேர்தல் நிதி என பல லட்சங்கள், தொழிலாளர்கள் வியர்வையில் கொடுத்து உருவானது தான் சங்கமும், சங்கத்தின் சொத்துக்களும்.
இந்த சொத்தில் ஒரு காசு கூட உங்களுடையது இல்லை. கருணாநிதிக்கும், வைகோவுக்கும் துரோகம் இழைத்த நீங்கள், தங்கள் சுயநலத்திற்காக கூச்சநாச்சமில்லாமல், எதை வேண்டுமானாலும் செய்வீர்கள்.அண்ணாதுரை காலத்து தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்களில் உயிருடன் இருக்கும் ஒரே ஒரு பொதுக்குழு உறுப்பினர் நீங்கள் தான்.
திருப்பூரில் ஒரு வார்டில் 10 ஓட்டுகள் வாங்கும் தகுதி, உங்களிடம் உள்ளதா என, சுய பரிசோதனை செய்யுங்கள்.சங்கத்தின் சொத்துக்களை என்ன செய்ய வேண்டும் என கருத்து கூற, 70க்கும் மேற்பட்டோர் உயிருடன் தான் இருக்கிறோம்.இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, மாநில மாணவர் அணி துணைச் செயலர் சத்தியகுமாரன் எழுதிய கடிதம்:
துரைசாமி லட்சியவாதி அல்ல. பல லட்சங்களுக்காக கட்சியில் இருந்த சந்தர்ப்பவாதி. ம.தி.மு.க., தொழிலாளர் முன்னணியின் சங்கத்தை ஒப்படைத்து விட்டு, ம.தி.மு.க.,வை விட்டு நாகரிகமான முறையில் விலகி செல்வது நல்லது.இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
இதற்கு பதிலடியாக, துரைசாமி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பதாவது:வைகோ குறித்து பொது வெளியில் எழுதினால் என்ன நடக்கும்; வைகோ சொல்லி தான் இப்படி எழுதினரா? அண்ணாதுரை காலத்தின் அரசியல் தலைவர் என, பாராட்டப்பட்ட துரைசாமியை அவமானப்படுத்தி எழுத துாண்டியது துரை வைகோவா?
இப்படி எழுதியவர் மீது ஏன் வைகோ நடவடிக்கை எடுக்கவில்லை; அவர் பதில் சொல்லியாக வேண்டும்.இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.இந்த மோதல் பற்றிய தகவல், டில்லியில் இருக்கும் வைகோவுக்கு தெரியவந்ததும், அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தொலைபேசி வாயிலாக, இரு தரப்பினரிடமும் பஞ்சாயத்து நடத்தியதாக கூறப்படுகிறது.அதை தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்து, கட்சி தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை:திருப்பூர் துரைசாமியை விமர்சித்து, சமூக வலைதளங்களில் சிலர் எழுதி இருக்கிற பதிவு வேதனை அளிக்கிறது.
தொழிற்சங்கம் குறித்து யாரும் எந்தப் பதிவும் எழுதக் கூடாது.அவ்வாறு எழுதினால் அது கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயல்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, வைகோ எச்சரித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment